ஹொரவப்பொத்தானையில் கைதான ஐவரின்
வங்கிக்கணக்கில் ரூபா 100 கோடி இருந்ததா?



அடிப்படைவாத மதக் கொள்கைகளைப் பரப்பியமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் கடந்த மே மாதம் 24 ஆம் திகதி ஹொரவப்பொத்தான பொலிஸார் ஐவரைக் கைது செய்தனர். இவர்கள் ஐவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
அவர்கள் கைது செய்யப்பட்ட மறுதினம் மே மாதம் 25 ஆம் திகதி இந்நாட்டின் பிரதான தேசிய பத்திரிகையொன்றின் முன்பக்க செய்தி பின்வருமாறு தலைப்பிடப்பட்டிருந்தது.

சஹ்ரான் குழுவைச் சேர்ந்த ஐவரின் வங்கிக் கணக்குகளில் 100 கோடி ரூபாஎன்று அச்செய்தி பிரதான தலைப்பிடப்பட்டிருந்தது. அத்தோடு அச்செய்தியுடன் தொடர்பான கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரின் புகைப்படங்களும் பிரசுமாகியிருந்தன.
இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் கெபித்தி கொல்லாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்லவெவ கிராமத்தை சேர்ந்தவர்களாவர். அவர்கள் நூஹு சகரியா, செய்னுல் ஆப்தீன் இர்பான், லெப்பே தம்பி ஜெஸ்மின், செய்னுல் ஆப்தீன் கலீபத்துல்லா ஆவார்கள். மற்றவர் ஹொரவப்பொத்தான பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கிவுலேகட கிராமத்தைச் சேர்ந்த மொஹிதீன் பாவா நவுபர் என்பவராவார்.
குறிப்பிட்ட தேசிய பத்திரிகையின் செய்தி பின்வருமாறும் தெரிவித்திருந்தது. ”அடையாள அட்டை இலக்கங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி வெளிநாடுகளிலிருந்தும் இந்நாட்டின் சில நபர்களினது வங்கி கணக்கின் ஊடாகவும் இப்பணம் கிடைக்கப் பெற்றுள்ளதுஎன குறிப்பிடப்பட்டிருந்தது.

வங்கிக் கணக்குகளுக்கு 100 கோடி ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கணக்கில் 100 கோடி ரூபா உள்ளதாகவும் எந்தவோர் சட்ட பிரிவிடமிருந்து தங்களுக்கு எதிராக இதுவரை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். பத்திரிகையின் தவறான, உண்மைக்குப்புறம்பான செய்தியினால் அவர்கள் சமூகத்தில் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

மொழிப் பிரச்சினை காரணமாக எங்களின் விபரங்களையும் இது தொடர்பான உண்மை நிலையினையும் சிங்கள ஊடகங்களுக்குத் தெரிவிக்க முடியாத இக்கட்டான நிலையில் தாம் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். இதனால் தாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

செய்தியில் காணப்படும் பிரச்சினைகள்
குறிப்பிட்ட பத்திரிகை செய்தி, சம்பவம் தொடர்பான வழக்கின்பிஅறிக்கை பொலிஸாரினால் வெளியிடப்படுவதற்கு முன்பே கைது செய்யப்பட்ட ஐவரின் வங்கிக் கணக்குகளில் 100 கோடி ரூபா இருப்பதாக அந்த ஊடகவியலாளரினால் எவ்வாறு தீர்மானிக்க முடியும். ஊடகவியலாளர் இந்தத் தகவல்களை நம்பிக்கையான தரப்பினரிடமிருந்து பெற்றுக் கொண்டாரா? செய்தியை பிரசுரிப்பதற்கு முன்பு அச் செய்தி உண்மையானது என உறுதி செய்து கொண்டாரா? நீதிமன்ற தீர்ப்பொன்று வழங்கப்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட ஐவரும் சஹ்ரானின் குழுவினைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடுவதற்கு அவர்களுக்கு கிடைத்த நம்பிக்கையான சாட்சிகள் என்ன? சந்தேக நபர்கள் ஐவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பு அவர்களது தெளிவான புகைப்படங்களை ஊடகத்தில் வெளியிட்டது எவ்வாறு? செய்தியில் குறிப்பிட்டுள்ளதன்படி பொலிஸார் இந்த விபரங்களை வழங்கியிருந்தால் அந்த விபரங்கள் முறையான விசாரணைகளின் பின்பு வழங்கப்பட்டனவா? என்னும் வினாக்கள் குறிப்பிட்ட பத்திரிகை செய்தியை விசாரணைக்குட்படுத்தும்போது எழுகின்றன.
விசாரணை அறிக்கை
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் ஐவர் தொடர்பில் பயங்கரவாதம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அத்தோடு பொலிஸாரினால் கெபித்திகொல்லாவ நீதிவான் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டபிஅறிக்கையும் வெளியாகியுள்ளது. “பிஅறிக்கை கடந்த மே மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் சட்ட ரீதியான இந்த அறிக்கைகளில் கைது செய்யப்பட்ட ஐவரின் வங்கிக் கணக்குகளில் 100 கோடி ரூபா இருந்ததாக குறிப்பிடப்பட்டில்லை.
ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
இந்தக் கைது மற்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரொஷான் சஞ்சீவ எம்மிடம் பின்வருமாறு தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இந்த ஐவரின் வங்கிக் கணக்குகளில் 100 கோடி ரூபா இருந்ததாக நானோ, பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த எவரோ ஒருபோதும் ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை. குறிப்பிட்ட பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்த தவறான கருத்துகளால் ஹொரவப்பொத்தான பொலிஸும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.

ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலையத்துக்கு எதிராக விசாரணையொன்றும் நடத்தப்பட்டது.

பொலிஸ் மூலம் ஏதாவது ஊடக அறிக்கை அல்லது விபரங்கள் வெளியிப்பட வேண்டுமென்றால், நான் முதலில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரை தொடர்பு கொள்வேன். அச்செய்தி அவசியமானதென்றால் ஊடகப் பேச்சாளரே ஊடகங்களுக்கு அதனை வெளியிடுவார். அல்லாது நான் ஒருபோதும் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவதில்லை என்றார்.

கெபித்திகொல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
சந்தேக நபர்கள் ஐவரும் ஹொரவப்பொத்தான பொலிஸாரினால் கைது செய்யப்படுவதற்கு முன்பு கெபித்திகொல்லாவ பொலிஸுக்கு அழைக்கப்பட்டு வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது என சந்தேக நபர்கள் ஐவரின் குடும்ப அங்கத்தவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

இது தொடர்பில் கெபித்திகொல்லாவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் விசாரித்தோம்.
சந்தேக நபர்கள் ஐவரும் சஹ்ரானின் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றோ 100 கோடி ரூபா வங்கிக் கணக்குகளில் வைத்திருக்கிறார்கள் என்றோ எனக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை அவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்ளைகளை பரப்புவது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்தே அவர்களை பொலிஸுக்கு அழைத்து வாக்கு மூலம் பதிவு செய்தேன். இந்நிலையில் ஹொரவப்பொத்தான பொலிஸாரினால் அவர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து கெபித்திகொல்லாவ பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை நிறுத்த வேண்டியேற்பட்டது என கெபித்திகொல்லாவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களின்சமூகப் பின்னணி
கைது செய்யப்பட்ட எஸ்.. இர்பான் எல்லவெவ கிராமத்தை வதிவிடமாகக் கொண்டவராவார். அவரது மனைவி பாத்திமா சாஹிதா. அவர் எம்மிடம் இவ்வாறு தெரிவித்தார்.
100 கோடி ரூபா வங்கிக் கணக்கில் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள எனது கணவரிடம் குறைந்தது வங்கியில் சேமிப்புக் கணக்கொன்றுகூட இல்லை. எங்களுக்கு வங்கிக் கணக்குகள் இல்லை. லைசன் இல்லை, வாகனம் மாத்திரமல்ல எங்களுக்கு இருப்பதற்கு ஒரு இடம் கூட இல்லை. நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டே வாழ்க்கையை நடத்துகிறோம். இப்படியிருக்கும்போது அந்தப் பத்திரிகை எம்மிடம் 100 கோடி ரூபா இருந்ததாக எப்படிக் கூறமுடியும். அன்று பொலிஸார் வீட்டுக்கு வந்து நீண்டநேரம் சோதனை நடத்தினார்கள். என்றாலும் எங்களிடம எதுவும் இருக்கவில்லை. அவர்களால் எதையும் கண்டு பிடிக்கமுடியவில்லைஎன்றார்.
ஒரு பிள்ளையின் தந்தையான இர்பான் பள்ளிவாசலில் கடமையாற்றிய மௌலவியும் பள்ளியில் கல்வி கற்பித்தவருமாவார். அவரது மனைவி தொழில் செய்யாதவர். இர்பானுக்கு சொந்தமாக வீடு இல்லை. அவர் தனது மனைவி, பிள்ளையுடன் 5 குடும்பங்கள் வாழும் சிறிய வீடொன்றிலே வாழ்கிறார். அந்த வீட்டில் 5 குடும்பங்களைச் சேர்நத 15 பேர் வாழ்கிறார்கள்.

பள்ளியில் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக தினமும் 2 கிலோ மீட்டர் தூரத்தை அவர் நடந்தே சென்றடைவார். சைக்கிள் வண்டியொன்றினை வாங்குவதற்குக் கூட அவருக்கு வசதியில்லைஎன இர்பானின் தந்தை எம்மிடம் தெரிவித்தார்.
இர்பான் கைது செய்யப்பட்டதன் பின்பு எமது உறவினர்கள் சிலரும் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் எங்கள் குடும்பத்தை .எஸ். குடும்பம் எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். எமக்கு எதிராகப் பேசுகிறார்கள். 100 கோடி ரூபா இருந்தால் ஏன் இவ்வாறு வறுமையில் வாழவேண்டும் என்று கேள்வியெழுப்புகிறார்கள்.
இதனால் எமது குடும்பம் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளது என்றும் அவர் கண்ணீர் வடிய எமக்குக் கூறினார்.
கைது செய்யப்பட்ட மற்றுமொருவர் ஜெஸ்மின். அவர் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 2 பிள்ளைகளின் தந்தை. அவரது மனைவியும் ஒரு ஆசிரியை. ஒருபகுதி நிர்மாணிக்கப்பட்ட சாதாரண வீட்டில் அவர்கள் வாழ்கிறார்கள். ஜெஸ்மின் அண்மையில் வாகன விபத்தில் காயங்களுக்குள்ளானார்.

அதனால் அவரது உடல் பாதிப்புக்குள்ளானது. உடல் உபாதைகளுக்கான அவரது உபயோகத்துக்காக கொமட் உடன்கூடிய கழிவறை ஒன்றைக்கூட அவர்களால் அமைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு கஷ்டமான வாழ்க்கையை வாழ்கிறார். அவர் கழிவறையில் கொமட்டுக்குப் பதிலாக ஒரு கதிரையைப் பயன்படுத்தும் நிலையில் நாம் வாழ்கிறோம் என அவரது மனைவி ஜெபா கைருல் ஹுதா தெரிவித்தார்.

ஜெஸ்மினின் மனைவி பாடசாலைச் சங்கத்தின் மூலமாக கடனொன்றினைப் பெற்றுள்ளதால் அவரது மாதாந்த சம்பளத்தில் 20 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படுகிறது. முன்பு கணவரின் சம்பளமும் கிடைத்தது. அதனால் வாழ்க்கையை நடத்துவதற்கும் போதுமாக இருந்தது. இப்போது அவரது பாதுகாப்பும் எமக்கு இல்லாததால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அவரது மனைவி தெரிவித்தார்.

பொலிஸார் இரு தடவைகள் வந்து வீட்டைச் சோதனையிட்டார்கள். ஆனால் அவர்கள் எதையும் கொண்டு செல்லவில்லை. 100 கோடி ரூபா குற்றச்சாட்டு தொடர்பாக பத்திரிகை செய்தி வெளியிட்டாலும் பொலிஸாரினாலோ அல்லது சட்டப் பிரிவுகளினாலோ இதுவரை அவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட மொஹிதீன் பாவா நௌபர் ஹொரவப்பொத்தான கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு பட்டதாரி. அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றியவர். நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். அவரது மனைவி அரசாங்கப் பாடசாலையொன்றில் ஆசிரியையாகக் கடமையாற்றுகிறார். அவர் கைது செய்யப்பட்ட தினம் அவரது முழு வீடும் பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. அவரது வங்கி கணக்குப் புத்தகம் மற்றும் கடவுச்சீட்டு என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தக் கைதுக்குப் பின்னணியில் அரசியல் பழிவாங்கல் இருப்பதாக தான் சந்தேகிப்பதாகக் குறிப்பிடும் நௌபரின் மனைவி சித்தி ஆயிஷா, பத்திரிகையில் வெளிவந்த செய்தியைச் சுட்டிக்காட்டி நாங்கள் அரைகுறையாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டிலே வாழ்கிறோம்., வீட்டின் முன்பகுதி அமானா வங்கியிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் மூலமே நிர்மாணிக்கப்பட்டது என்றார். அந்தக் கடனைச் செலுத்தி முடிக்க பல வருடங்கள் செல்லும். மேலும் பல இடங்களுக்கும் கடன் தொகை செலுத்தப்பட வேண்டியுள்ளது என்றும் கவலைப்பட்டார்.

எவருக்கும் எமது வங்கிக் கணக்குகளை பரிசோதனை செய்ய முடியும். எங்களது வங்கிக் கணக்குகளுக்கு எமது மாத சம்பளமே இடப்பட்டுள்ளது என்பதை அப்போது அறிந்து கொள்ளலாம். பத்திரிகைச் செய்தியில் தெரிவித்துள்ளபடி எங்களிடம் 100 கோடி இருந்தால் நாம் ஏன் இவ்வாறு துன்பப்பட வேண்டும்?

நௌபர் தொழில் நண்பர்கள் மற்றும் கிராம மக்களுடன் கௌரவமான வாழ்க்கை வாழ்ந்தவர், செயற்பட்டவர். பத்திரிகையில் வெளியிடப்பட்ட 100 கோடி ரூபா குற்றச்சாட்டு காரணமாக அவரது தொழில் நண்பர்கள் அவர் மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர் என அவரது குடும்ப உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு கிராமத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த சிங்களமுஸ்லிம் உறவுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மனஉளைச்சல்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
என். சகரியா, எல்லவெவ கிராமத்தில் கைது செய்யப்பட்ட மற்றுமொருவராவார். சோளப் பயிர்ச்செய்கை மூலம் தனது வாழ்க்கையை நடத்தி வந்த இவர் சிலகாலம் மௌலவியாகப் பணிபுரிந்தவராவார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். மனைவி தொழில் எதுவும் செய்யாதவர்.

அவரது மனைவி மஹ்ரூப் நஸீஹா கைது தொடர்பில் தெரிவிப்பது; எங்களுக்கு சொத்துக்களென்று இருப்பது பிள்ளைகளும் இந்த வீடும் மாத்திரம்தான். சஹ்ரான் பற்றி நாம் தெரிந்து கொண்டதும் இந்தச் சம்பவத்தின் பிறகுதான். எனது கணவர் விவசாயம் செய்து கிடைத்த வருமானத்தின் மூலமே நாம் வாழ்ந்தோம். தற்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பதால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். பல வேளைகளில் நாம் பசியுடன் இருந்த நாட்களும் உள்ளன. அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் எம் மீது அனுதாபப்பட்டு செய்யும் உதவிகள் மூலம்தான் சாப்பிட்டு, நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தப் பகுதிகளில் காட்டு யானைகளின் பிரச்சினையும் இருக்கிறது. மிகுந்த பயத்துடனே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்றார்.
கலீபத்துல்லாவும் எல்லவெவ கிராமத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவராவார். இவர் 5 பிள்ளை­களின் தந்தையாவார். கலீபத்துல்லாவின் தந்தை கலீபத்துல்லாவின் பிள்ளைகளை நோக்கி தனது இரு கரங்களையும் ஏந்தினார்.

பின்பு இவ்வாறு தெரிவித்தார், “ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பத்திரிகையைக் கொண்டு வந்து எம்மிடம் காட்டும் வரை 100 கோடி ரூபா கதை எங்களுக்குத் தெரியாது. இந்தப் பிள்ளைகளின் காதுகளில் இருக்கும் காதணிகளை நன்றாகப் பாருங்கள் அவை தங்கம் அல்ல. தங்க காதணிகள் இரண்டு அவர்களுக்கு வாங்கிக் கொடுப்பதற்குக் கூட எங்களுக்கு வசதி இல்லை. நான் எனது மகளுக்குக் கொடுத்திருக்கும் இந்தக் காணியும் இந்த வீடும் பிள்ளைகள் ஐவருமே எங்களுக்குள்ள சொத்துக்கள்என்றார் அவர்.

தவறான செய்தியைவெளியிட்ட பத்திரிகை தெரிவித்தவை

கைது செய்யப்பட்ட ஐவரின் வங்கிக் கணக்குகளில் 100 கோடி ரூபா வைப்பில் உள்ளதாக செய்தி வெளியிடுவதற்கு முன்பு அத்தகவலின் உண்மைத் தன்மை, அது தொடர்பான நம்பிக்கையான சாட்சியங்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என நாம் குறிப்பிட்ட பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மற்றும் செய்தியை எழுதிய ஊடகவியலாளர் ஆகியோரிடம் வினவினோம்.

அந்த செய்தி தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு நேரம் இருக்கவில்லை. தவறான செய்தியொன்றினை வெளியிட்டது தொடர்பில் கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தெரிவித்தார்.
செய்தியை வெளியிட்ட ஆசிரியர் குழாத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் கருத்து தெரிவிக்கையில், செய்தி சரியானதா?

என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தீர்களா? இல்லையா? என்று நீங்கள் கோருவது தொடர்பில் எந்த வகையான தெளி­வுகளை வழங்குவதற்கும் நான் உட்பட்டவனல்ல. 100 கோடி ரூபா வங்கிக் கணக்கில் வைப்பிலுள்ளதான தகவல் ஹொரவப்பொத்தான பொலிஸாரால் எனக்குக் கூறப்படவில்லை என்றார்.

சிங்களத்தில்: நிராசா பியவதனி
தமிழில்: .ஆர்..பரீல்
 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top