இறந்தவர்கள் உடல்கள்
பள்ளிவாசலில் பிரேத பரிசோதனை
பஸ் நிலையத்தில் தொழுகை
முஸ்லிம்களின் நெகிழ்ச்சியான செயல்
கேரளாவின் கவளப்பாறையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தவர்கள் உடல்களை
பிரேத பரிசோதனை செய்ய பள்ளிவாசலில் இடம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பஸ் நிலையத்தில்
தொழுகை நடந்தது. இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பெய்த கோர மழைக்கு மலப்புரம் மாவட்டம் கவளப்பாறையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 59 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை அங்கிருந்து 31 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பெரும்பாலான உடல்கள் உருக்குலைந்து காணப்பட்டதால் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது இயலாத காரியமாக இருந்தது.
இதையடுத்து அருகில் உள்ள மஸ்ஜித்துல் முஜாகிதீன் பள்ளிவாசலில் பிரேத பரிசோதனை நடத்த அதன் நிர்வாகிகள் அனுமதி அளித்தனர். பள்ளிவாசல் அருகில் உள்ள அரபி பாடசாலையின் மேஜை உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
மற்றொரு பகுதியில் தொழுகை நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த என்ன செய்வது என தெரியாமல் நிர்வாகிகள் திகைத்தனர். பின்னர் அப்பகுதியினருடன் கலந்து பேசி போத்துகல் பஸ் நிலையத்தில் வைத்து தொழுகை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
தொடர்ந்து மதியம் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் பஸ் நிலையத்தில் திரண்டு தொழுகை நடத்தினர். இந்த தொழுகையில் நிலம்பூர் எம்எல்ஏ அன்வரும் கலந்து கொண்டார். இதுகுறித்து பள்ளிவாசல் நிர்வாகிகளில் ஒருவரான பீரான்குட்டி கூறுகையில்,
‘‘போத்துகல் கிராமத்தில் இதுவரை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என எங்களிடையே எந்த பாகுபாடும் கிடையாது. பிரேத பரிசோதனைக்காக பள்ளிவாசலை கொடுத்தது ஒரு பெரிய விஷயமாக நாங்கள் கருதவில்லை. சில வருடங்களுக்குமுன் இதுபோல ஒரு மழை காலத்தில் இந்த பகுதியை சேர்ந்த பிரபாகரன் இறந்தார். அவரது உடலை கொண்டு செல்ல ஸ்ட்ரெக்சர் கிடைக்கவில்லை. இதையடுத்து பள்ளிவாசலில் புதிதாக வாங்கிய ஒரு கட்டில் இருந்தது. அந்த கட்டிலில் தான் பிரபாகரன் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றோம். இறந்தவர்களுக்கு பயன்படுத்துவதற்கு வாங்கிய கட்டில் பிரபாகரனுக்கு முதல் முதலாக பயன்படுத்தப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் பலருக்கும் நெகிழ்ச்சியான ஒன்றாக இருந்தது. இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
0 comments:
Post a Comment