2020 ஆம் ஆண்டுக்கான இலவச பாடப்புத்தகம்
இன்று (16) உத்தியோகபூர்வமாக விநியோகம்

அரச பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவேனா மாணவ தேரர்களுக்கான இலவச பாடப் புத்தகங்கள் விநியோக நடவடிக்கை இன்று (16) உத்தியோகபூர்வமாக இடம்பெற்றது.

இவ்வைபவம், இன்று (16) முற்பகல் 10.30மணியளவில், ஹோமாகம பிட்டிபனவிலுள்ள கல்வி வெளியீட்டுத் திணைக்கள களஞ்சிய வளாகத்தில், கல்வி அமைச்சர் அகில விராஜ் கரியவசம் தலைமையில் இடம்பெற்றது.

இலவச பாடப் புத்தகங்களை வழங்குவதற்காக, அரசாங்கம் ரூ. 4,165 மில்லியனை ஒதுக்கியுள்ளதோடு, 448 வகையான புத்தகங்களின் 43 மில்லியன் பிரதிகள் மாணவர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

இதில் தரம் 01முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களும், 12 ஆம் வகுப்புக்கான பொது ஆங்கில புத்தகங்களும் உள்ளடங்குவதோடு, பிரிவேனா மாணவ தேரர்களுக்கான தரம் 01முதல் 05வரையான 54 வகையான புத்தகங்களும் உள்ளடங்குகின்றன.

2019 பாடசாலை விடுமுறைகள் நிறைவடைவதற்கு முன்னர் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் 2020 கல்வியாண்டிற்கான பாடநூல்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் வழிகாட்டல் கையேடுகளை வழங்குமாறு, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

பாடப்புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டல் கையேடுகளும், அனைத்து தேசிய பாடசாலைகள் மற்றும் 1,500 இற்கும் மேற்பட்ட மாகாண பாடசாலைகளுக்கும் கல்வி வெளியீட்டு திணைக்களத்தினால் நேரடியாக வழங்கப்படுவதோடு, ஏனைய அனைத்து பாடசாலைகளுக்கும், நாட்டில் காணப்படும் 1,175 கல்வி அலுவலக பிரிவு மற்றும் தெரிவு செய்யப்பட்ட விநியோக மையங்களினால் வழங்கப்படும் என கல்வி ஆணையாளர் நாயகம் ஜயந்த விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top