இலங்கையில் 13-ஆவது திருத்தச் சட்டம்

மேலும் திருத்தி அமைக்கப்பட்டாலும், அது நன்மை பயக்காது

இலங்கையில் "அரசு வன்முறை' நீடிப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சென்னையில் தெரிவிப்பு


இலங்கையில் "அரசு வன்முறை' நீடிப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கை அரசுக்கு தாங்கள் எந்தவிதத்திலும் சளைத்தவை இல்லை என்பது போல நீதிமன்றங்களும் நடந்து கொள்கின்றன. இதனால், இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாகவே நடத்தப்படும் நிலை உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் சிவில் உரிமைக் கழகம் சார்பில் (பியூசிஎல்), "கே.ஜி.கண்ணபிரான் நினைவுச் சொற்பொழிவு' நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், "பாதுகாப்பையும் இறையாண்மையையும் காத்தல்' என்ற தலைப்பில் சி.வி.விக்னேஸ்வரன் பேசிய போது கூறியதாவது,
இலங்கை அரசியல் சட்டத்தில் 13-ஆவது திருத்தச் சட்டத்தால் எந்த பயனும் இல்லை. வடக்கு மாகாண அதிகாரத்தை வலுவற்றதாக்கி, ஆளுநரே அச்சட்டத்தை வைத்திருக்கும் வகையில் குறுக்கப்பட்டுவிட்டது.
இலங்கையின் மத்திய அரசாங்கம் மனமுவந்து, மாகாண ஆட்சிக்கு அதிகாரங்கள் கொடுத்தால்தான் தமிழ் மக்களுக்காகப் பாடுபட முடியும். தற்போதைய நிலையில், எல்லாவிதத்திலும் எங்களை இயங்கவிடாது தடுப்பதே, அரசாங்கத்தின் குறிக்கோளாக இருக்கிறது.
சிங்கள மக்களைத் தெற்கில் இருந்து வடமாகாணத்தில் குடியேற்ற இலங்கை மத்திய அரசாங்கம் சகல நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது.
இராணுவத்தினருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. தமிழ் பேசும் மக்களின் அரசாங்க அதிகாரிகளாக சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும், எங்களுக்குள்ள சொற்ப அதிகாரங்களைப் பயன்படுத்தி, அதற்கு முட்டுக்கட்டைகள் போட்டு வருகிறோம்.
"புலி வரப்போகிறது, புலி வரப் போகிறது' என்று கூறி, சுமார் ஒன்றரை லட்சம் படையினர் வடக்கு மாகாணத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளனர்.
கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையில் எல்லாவிதத்திலும் இராணுவத்தினர் தலையிடுகின்றனர். பெண்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தமிழர்களின் நிலங்களை இராணுவத்தினர் கைப்பற்றி, அதனை அவர்கள் பயிரிட்டு, தமிழர்களுக்கே விற்கின்றனர். தமிழர்களின் குடியிருப்புகள், கல்லூரிகள், கோயில்களை அழித்து பொழுதுபோக்கு இடங்களாகவும், கோல்ப் விளையாட்டு மைதானங்களாகவும், நீச்சல் தடாகங்களாகவும் கட்டி வருகின்றனர். மக்கள் உண்ண உணவின்றியும், உடுக்க உடையின்றியும், வாழ வழியின்றியும் உள்ளனர். தமிழர்களின் சமூகக் கலாசாரங்கள் சீரழிவுக்கு உள்ளாகின்றன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் புலிகளுடன் தொடர்பு உண்டு என்று கூறி, இராணுவத்தினர் விசாரணைக்கு அழைத்துச் செல்லக் கூடிய நிலை இருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமான இளம் விதவைகள் இருக்கின்றனர். தாய், தந்தையை இழந்த ஆதரவற்ற குழுந்தைகள் இருக்கிறார்கள். போரினால் மக்களின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதனைப் போக்குவதற்கு வேண்டிய வசதிகள்கூட எம்மிடம் இல்லை.
இந்தியாவின் வீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டிக் கொடுக்கப்படும் வீடுகளும் அரசியல் சகாயம் பெற்றவர்களுக்கே கிடைத்து வருகிறது.
தமிழகத்தில் பேசும் பேச்சுகள், வடக்கு மாகாண சபையைப் பாதிக்கக்கூடிய நிலை இருக்கிறது. உணர்ச்சிப்பூர்வமான எங்களது பேச்சுகளை வைத்து, எங்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்தி வடக்கு மாகாண சபையைக் கலைக்கவும் இலங்கை அரசு தயங்காது. அதேசமயம், எங்களது நிதானப் போக்கை வைத்து கையாலாகாதவர்கள் என்ற கருத்தைப் பரப்பாதீர்கள்

இலங்கையில் 13-ஆவது திருத்தச் சட்டம் மேலும் திருத்தி அமைக்கப்பட்டாலும், அது நன்மை பயக்காது. தமிழர்களின் தனித்துவத்தை, சுய நிர்ணய உரிமையை உள்ளடக்கியதாக அரசியல் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். இதற்கு இந்தியா குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top