தன் தந்தையை காப்பாற்றச் சொல்லி பதாகை ஏந்தியிருக்கும்
மீனவர் பிரசாத்தின் மகன் ஜெயஸ். உடன் தாய் ஸ்கெனிடா.

மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும்

5 தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு

இலங்கையில் நாளை மேல்முறையீடு

தமிழக மீனவர்கள் ஐந்து பேரை மரண தண்டனையில் இருந்து விடுவிக்க, இலங்கை உச்ச நீதிமன்றத்தில் நாளை திங்கள்கிழமை (நவ.10) மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
மேல்முறையீடு உள்ளிட்ட வழக்குச் செலவினங்களுக்காக, இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு இந்திய ரூபாயில்  ரூ.20 லட்சம் சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்  தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய ஐந்து மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களைக் கைது செய்த இலங்கைக் கடற்படையினர், போதைப் பொருள் கடத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டி வழக்கு தொடுத்தனர். கொழும்பு உயர் நீதிமன்றம் 5 மீனவர்களுக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் .பன்னீர்செல்வம், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேரும் மேல் முறையீடு செய்யும் வகையில் உரிய சட்ட உதவிகளை வழங்க இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்துக்கு உத்தரவிடவேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு ஆகும் அனைத்துச் செலவுகளையும் ஏற்க தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளால் கொழும்பு உயர் நீதிமன்ற உத்தரவின் நகல் பெறப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பின் உத்தரவானது சிங்கள மொழியில் இருந்ததால், அதை ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து, 5 மீனவர்களை விடுதலை செய்ய, நாளை திங்கள்கிழமை (நவ.10) இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் ஐந்து மீனவர்கள் சார்பில் ஆஜராவதற்காக, மிகச் சிறந்த சட்ட வல்லுநர்கள் இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சட்ட வல்லுநர் குழு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஆகும் மொத்த செலவினத்தை தமிழக முதல்வர் .பன்னீர்செல்வத்தின் உத்தரவுப்படி இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு கடந்த சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 
(இடமிருந்து) அகஸ்டஸ், பிரசாத், லாங்லெட், வில்சன், எமர்சன்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top