திரு.ஸ்ரீ றங்கா அவர்களே
இது உங்களின் கவனத்திற்கு!

-ஜெம்ஸித் அஸீஸ்-



கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு (02.11.2014) 8.00 மணிக்கு சக்தி ரீவியில் ஒளிபரப்பான செய்தியைப் பார்க்கக் கிடைத்தது.
கொஸ்லந்தையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சக்தி, சிரஸ ஊடக வலையமைப்பு மேற்கொண்ட நிவாரண உதவிகள் பற்றிய செய்திகளே அந்த செய்தி அறிக்கையை ஆக்கிரமித்திருந்தன.பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்.... நன்றிகள்...
ஊடகப் பயணத்துக்கு அப்பால் மனித நேயப் பணிகளிலும் ஈடுபடுவதை பாராட்டாமல் இருக்க முடியாது.நீங்களும் களத்தில் இருந்தீர்கள். மகிழ்ச்சி.
ஊடகவியலாளராகவும் அரசியல்வாதியாகவும் இருக்கும் நீங்கள் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உரையாடிபோது ஒரு சந்தர்ப்பத்தில்
 தர்கா டவுனில் இருவரது உயிர் பறிபோனதற்காக என்ன பாடு பட்டார்கள். இங்கு 100க் கணக்கான உயிர்கள் பறிபோயிருக்கின்றன. இதைப் பற்றி யாரும் அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை
என ஆவேசப்பட்டீர்கள். அப்போது உங்களது மனித நேயத்தின் ரகத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.
தர்கா டவுனில் உயிர் பறி போனாலும் கொஸ்லந்தையில் உயிர் பறி போனாலும் போனவை மனித உயிர்கள்தாம். அதற்காக மனித நேயம் கொண்டவர்கள் அனைவரும் நிச்சயமாக வருந்தியிருப்பார்கள்.வருந்த வேண்டும்; மனம் வெதும்ப வேண்டும்.குறைந்தபட்சம் மனம் வருந்தினால்தான் மனிதன். இல்லாவிட்டால் மனித உருவில் காட்சியளிக்கும் ஒரு பிண்டம்.
தர்கா டவுனில் நடந்தது உங்களுக்கு நன்கு தெரியும்.அது சுத்த இன அழிப்பு; இனக்கலவரத்தை துண்டும் காடையர்களின் சீற்றம்.ஆனால், கொஸ்லந்தையில் நடந்ததோ இயற்கையின் சீற்றம்.தர்கா டவுனில் ஓர் இனம் குறிவைக்கப்பட்டது; குதறப்பட்டது.ஆனால், இயற்கைக்கு ஓர் இனத்தைக் குறிவைக்கத் தெரியாது.இதற்கு சுனாமியும் வெள்ளப் பெருக்கும் வரட்சியும் வேறு அனர்த்தங்களும் சாட்சி.
தர்கா டவுனில் மண்ணில் புதைந்தது மனித உயிர்கள் மட்டுமல்ல, மனிதமும் நீதியும் ஒரு சமூகத்தின் கண்ணீரும் சேர்ந்தே புதைந்து போயின.
தர்கா டவுன் துவம்சத்தின் சூத்திரதாரிகள், மறைகரங்கள், மர்மங்களையெல்லாம் எம்மை விட ஊடகவியலாளராகவும் அரசியல்வாதியுமாக இருக்கும் உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.
அப்படியிருந்தும் நீங்கள் தர்கா டவுனில் படுகொலை செய்யப்பட்ட உயிர்களைக் கொச்சைப்படுத்தி, தர்கா டவுன் காடைத்தனத்தோடு இயற்கை அனர்த்தத்தின் பாதிப்பை ஒப்பிட்டு கிண்டல் செய்கிறீர்கள்.அரசியலுக்காக வாய்க்கு வந்ததையெல்லாம் பேசலாமா?
கொஸ்லந்தையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உங்களைப் போன்று பல முஸ்லிம்கள், முஸ்லிம் நிறுவனங்கள் இரவு பகல் பாராமல் உழைத்தன என்பதையும் நீங்கள் அறிவீர்கள் என நினைக்கின்றேன்.
உங்களது இனத்துக்காக குரல் கொடுப்பது உங்களது கடமைதான். குரல் கொடுக்கின்றபோது மற்றைய இனங்களின் குரல்வளையை நசுக்க வேண்டாம் என்கிறேன்.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர், ஊடகவியலாளர் திரு.ஸ்ரீ றங்கா அவர்களே! இது உங்களின் கவனத்திற்கு.
கொஸ்லந்தையில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள் பூரணமான நிவாரணப் பணிகளை மேற்கொண்டு அவர்களது வாழ்வாதாரமும் வாழ்வும் சிறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும்.
இப்படிக்கு,

ஜெம்ஸித் அஸீஸ்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top