அமெரிக்க 'செனட்' சபையை எதிர்க்கட்சி கைப்பற்றியது!
ஜனாதிபதி ஒபாமாவுக்கு பெருத்த பின்னடைவு!!



அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில் 'செனட்' சபையை எதிர்க்கட்சியான குடியரசு கட்சி கைப்பற்றி விட்டது. இது ஜனாதிபதி ஒபாமாவுக்கு பெருத்த பின்னடைவு ஆகும்.
அமெரிக்க பாராளுமன்றத்தில் 'செனட்' என்றழைக்கப்படும் மேல்-சபைக்கு 36 இடங்களுக்கும், பிரதிநிதிகள் சபை என்று கூறப்படும் கீழ்சபைக்கு 435 இடங்களுக்கும், 46 மாகாண சட்டசபைகளுக்கும், 36 மாகாண கவர்னர் பதவிக்கும் தேர்தல் நடந்தது. அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதி பதவி ஏற்று 6 ஆண்டுகள் முடிந்து, இன்னும் 2 ஆண்டு பதவிக்காலம் உள்ள நிலையில் தற்போதைய அவரது செல்வாக்கு என்ன என்பதை கூறுவதாக இந்த தேர்தல்கள் அமைந்ததால், உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் செனட் சபையில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி அமோக வெற்றி பெற்று, மெஜாரிட்டி பெற்று விட்டது. ஏற்கனவே பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சிதான் மெஜாரிட்டி பெற்றிருந்தது. இந்த தேர்தலிலும் குடியரசு கட்சியே வெற்றி பெற்று, பெரும்பான்மை பலத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் மூலம் அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு சபைகளும் ஜனாதிபதி ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியிடம் இல்லை. குடியரசு கட்சியின் வசமே உள்ளது. எனவே இது ஒபாமாவுக்கு பெருத்த பின்னடைவாக அமைந்து விட்டது. எனவே மீதமுள்ள 2 ஆண்டு பதவிக்காலத்தை ஒபாமா மிகுந்த கஷ்டத்துடன்தான் கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி ஒபாமா, வெள்ளை மாளிகையில் இருந்து டெலிவிஷனில் கவனித்துக்கொண்டிருந்தார். தேர்தல் முடிவுகள் குறித்து அவர் உடனடியாக வெளிப்படையாக கருத்து எதுவும் கூறவில்லை. அதே நேரத்தில் குடியரசு கட்சி தலைவர்களை தொலைபேசியில் அழைத்து தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தார். இரு சபைகளிலும் குடியரசு கட்சி மெஜாரிட்டி பெற்று விட்டாலும், சட்ட மசோதாக்களை அது தோற்கடித்தாலும், ஜனாதிபதி ஒபாமா தனது வீட்டோ உரிமை (மறுப்பு ஓட்டு) மூலம் நிறைவேற்றி விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top