ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து

அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும்

கொழும்பில் இன்று கூட்டங்கள்


நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் இன்று கொழும்பில் கூட்டங்கள் இடம்பெறுகின்றன.  
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்க கோரியும் இல்லையேல் பொது வேட்பாளரின் மூலம் அரசை கவிழ்ப்போம் என எச்சரித்து அதுரலியே ரத்ன தேரர் தலைமையில் ஒரு கூட்டமும் ஜனாதிபதியை ஆதரித்து விமல்வீரவன்ச தலைமையில் ஒரு கூட்டமும் இடம்பெறுகின்றது.  
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்கக்கோரி எதிர்க்கட்சியின் பொது எதிரணியினர் இன்று கொழும்பில் கங்காராமை முத்தையா மைதானத்தில் எதிர்ப்பு பேரணிக்கூட்டம் நடத்தவுள்ளனர்.    அரசாங்க பங்காளிக்கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் இணைத்தலைவர் அதுரலிய ரத்ன தேரர் மற்றும் கோட்டை நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரின் தலைமையில் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.   இவ் எதிர்ப்பு பேரணியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள், மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் சட்டத்தரணிகள் சங்கம் சுதந்திர ஊடக மையம், ஜனநாயகத்திற்கான தேசிய இயக்கம் சமகி இயக்கம் ஆகிய அமைப்புக்களும் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்வதுடன்,   அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய, இடதுசாரி மக்கள் முன்னணி, சோசலிசக்கட்சி ஆகிய கட்சிகளும் இணைந்து கொள்கின்றன.  

இதேவேளை ஜனாதிபதி முறைமையினை நீக்குவது அடுத்தவொரு தீவிரவாதத்திற்கு வித்திடும் எனக்குறிப்பிட்டு அரசாங்கத்தினை வலுப்படுத்த அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தினால் இன்று கொழும்பு சுகததாச மைதானத்தில் அரச ஆதரவு பேரணியொன்று இடம்பெறவுள்ளது 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top