இலங்கை - இந்தியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி
நாளை ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கிறது



இலங்கை - இந்தியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி 13 ஆம் திகதி நாளை (வியாழன்) கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கிறது.
கிரிக்கெட் வரலாற்றில் மூன்று மைதானங்கள்தான் மற்ற எல்லா மைதானங்களை விடவும் அதிக அங்கீகாரமும் கெளரவமும் பெற்றுள்ளன. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் (எம்.சி.ஜி), இங்கிலாந்தின் லார்ட்ஸ் மற்றும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ். இந்தியாவின் பெருமைமிக்க மைதானமான ஈடன் கார்டன்ஸூக்கு இந்த வருடத்தோடு 150 வயது. அதற்குச் சிறப்பு சேர்ப்பதற்காகத்தான் இந்தியா, இலங்கை இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை 13 ஆம் திகதி(வியாழன்) நடக்கிறது.
ஒரு பூந்தோட்டம், ஆடுகளமாக மாற்றப்பட்டதுதான் ஈடன் கார்டன்ஸ். 1836 முதல் 1842 வரை இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஆக்லாண்ட் பிரபுவின் தங்கைகள் எமிலி மற்றும் ஃபேனி ஈடன் ஆகிய இருவரும் அழகான பூங்கா ஒன்றை அமைத்தார்கள். ஆக்லாண்ட் சர்க்கஸ் கார்டன்ஸ் என்று முதலில் அதற்குப் பெயரிடப்பட்டது.
பின்னர் 1854-ல் ஆக்லாண்டின் குடும்பப் பெயரான ஈடன் என்ற பெயரை இணைத்து ஈடன் கார்டன்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1864-ல் தோட்டத்தின் கிழக்குப் பகுதி நீடிக்கப்பட்டது. அந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்தில், அங்கு கல்கத்தா கிரிக்கெட் கிளப் அலுவலகம் அமைக்கப்பட்டு அந்தப் பகுதியை மைதானமாகப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது.
முதல் டெஸ்ட் போட்டி, 1934-ல் நடந்தது. இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடந்த 4 நாள் டெஸ்ட் போட்டி,  வெற்றி தோல்வியின்றி  முடிந்தது. 1961-62-ல் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில்தான் இந்திய அணி இங்கு முதல் வெற்றியை ருசித்தது. கடைசி டெஸ்ட்போட்டி , 2013-ல் நடந்தது. அது, சச்சினின் 199-வது டெஸ்ட். சென்னை போலவே கொல்கத்தாவும் சச்சினுக்கு மறக்கமுடியாத மைதானம்.
1993 ஹீரோ கோப்பை அரையிறுதிப் போட்டியின் கடைசி ஓவரில் சச்சின் மூன்று ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து (வெற்றிக்கு ஆறு ஓட்டங்கள் தேவை) நம்பமுடியாத வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். புகழ்பெற்ற 2001 டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில், சச்சின் 3 விக்கெட்டுகள் (மூன்றும் எல்பிடபிள்யூ) எடுத்ததும் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
67,000 ரசிகர்கள் கிரிக்கெட் போட்டியைப் பார்க்கும் வகையில் 2011 உலகக்கோப்பையின்போது மைதானம் மாற்றியமைக்கப்பட்டது. ஈடன் கார்டன் ‘ஹவுஸ் ஃபுல்லாகவே இருக்கும். மைதானம் நிறைந்த ஈடன் கார்டன்ஸ், ஒரு கண்கொள்ளாக் காட்சி!


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top