ஜனாதிபதி மைத்திரியின் வெற்றி குறித்து

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் விடுத்துள்ள

வாழ்த்துச் செய்தி


பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகவும் சமத்துவமாகவும் சுயகெளரவத்துடனும் வாழ ஆரோக்கியமான ஒரு ஜனநாயக ஆட்சியையே நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அந்தவகையில் எமது நாட்டில் நல்லாட்சிக்கான அம்சங்கள் அனைத்தும் தங்கள் ஆட்சியில் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என தாம் நம்புவதாக புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டிருப்பதையிட்டு முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
தங்களின் வெற்றி பல கட்சிகளினதும் பல இன தலைவர்களினதும் கூட்டான முயற்சியில் பெற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வெற்றியாகும்.
சர்வாதிகாரத்திலிருந்து எமது நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காகவும் எமது உன்னத விழுமியங்களான சமத்துவம், நீதி, தன்மானம், சுதந்திரம் என்பனவற்றை மீளப் பெறுவதற்காகவும் தங்களை வெற்றி அடையச் செய்வதில் தமிழ் மொழி  பேசும் மக்கள் உரிய பங்களிப்பை தங்களுக்கு நல்கியுள்ளனர்.
இந்நாட்டில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகவும் சமத்துவமாகவும் சுயகெளரவத்துடனும் வாழ ஆரோக்கியமான ஒரு ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவேன் என மனட்சாட்சியைத் தொட்டுப் பேசிய நீங்கள் நிச்சயமாக தங்களது  வெற்றி சுதந்திர இலங்கையில் ஜனநாயகத்தைப் பேணி பாதுகாப்பதற்கு வாய்ப்பளிக்கும் என நம்புகின்றேன்.
எல்லாவத்திற்கும் மேலாக தங்களின் ஜனாதிபதி பதவியேற்பு வைபவத்தில் தாங்கள் பேசிய ”இரண்டாவது முறையாகவும்  இப்பதவியை தான் அடைவதற்கு ஒருபோதும் முயற்சிக்கப் போவதில்லை” என்று கூறிய வார்த்தை நீங்கள் ஒரு அரசியல்வாதியாக அல்ல அதற்கு மேலாக நாட்டில் நீதியை நிலை நாட்டும் தேசியவாதியாகவே இருக்கிறீர்கள் என்பதை நான் உணர்ந்தேன்.

தங்களாலும் தங்கள் அரசாங்கத்தாலும் நாடு பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி அடையும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. இவ்வாறு மன்சூரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top