தனிக்கட்சி அமைக்குமாறு
மஹிந்தவிற்கு ஆதரவாளர்கள்
அழுத்தம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனிக்கட்சியொன்றைத்
தொடங்கி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்று பல்வேறு
தரப்புகளிடமிருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இது தொடர்பான கோரிக்கையை
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மஹிந்த ராஜபக்ஸவிடம் முன்வைத்திருந்தார்.
எனினும் அதுகுறித்து அவர் எதுவித பதிலும் அளிக்கவில்லை.
இந்நிலையில் வார இறுதியில் தங்காலை இல்லத்தில் தங்கியிருந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவைச் சந்திப்பதற்கு ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டு
வந்திருந்தனர்.
அவ்வாறு வருகை தந்திருந்த ஆதரவாளர்களும் மஹிந்த ராஜபக்ஸ
தனிக்கட்சியொன்றைத் தொடங்கி, அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளதாக அறியக்
கிடைத்துள்ளது.
அத்துடன் தற்போதைக்கு உள்ளுராட்சி மன்றங்களில்
தலைவர்களாகவும், உறுப்பினர்களாகவும்
இருக்கும் பலரும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணிக்குப் பதிலாக தனிக்கட்சியில் போட்டியிடும் ஆர்வத்தை மஹிந்த ராஜபக்ஸவுக்கு
தெரியப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தற்போது
தீவிரமாக ஆலோசித்து வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments:
Post a Comment