மீண்டும் ஒரு பிளவினை சந்திக்கும்
முஸ்லிம்காங்கிரஸ்
- ஜுனைட் நளீமி
கட்சிக்குள் தவிசாளருக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள் வலுவடைந்து வருகின்ற நிலைமையில் தேசியப்பட்டியல் விவகாரம் இன்னும் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாக அமைகின்றது. ஏனெனில் கிடைத்துள்ள இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களையும் எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்ற முரண் கருத்துக்களுக்குள்இ தவிசாளர் தனக்கே வழங்கப்பட வேண்டும் அல்லது செயலாளர் ஹசன் அலிக்கு வழங்கப்பட வேண்டும் என அழுத்தம் தெரிவித்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தலைவரினால் தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல், முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலையில் சந்தித்த பாரிய பின்னடைவு, குருநாகல் மாவட்டத்துக்கான பிரதிநிதித்துவம், கம்பஹாவுக்கான பிரதிநிதித்துவம், கல்குடாவிற்கான தேசியப்பட்டியல் என பட்டியல் விரிந்து கிடக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதில் முதன்மைப்படுத்தப்படாத விடயமாக தவிசாளரது கோரிக்கை காணப்படுவது தலைவர்மீதான எதிர்வலைகளை தவிசாளரினால் தோற்றுவிக்க காரணமாய் அமைந்துள்ளது. இதற்கு பக்க பலமாக கட்சியின் செயலாளருக்கு கூட இம்முறையும் தேசியப்பட்டியல் வழங்குவது நியாயமற்ற ஒன்றாக ரவூப் ஹகீம் அவர்களினால் கருதப்படுவதனால் செயலாளரும் தலைமைத்துவத்திற்கெதிராக செயற்பட வாய்ப்பாக அமையும் என தவிசாளர் கருதி தலைமைத்துவ மாற்றம் ஒன்றினை நோக்கிய காய்நகர்த்தல்களை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனை அரசியல் கல நிலவரங்கள் கோடிட்டு நிற்கின்றன. இத்தகைய மாற்றத்திற்கான ஒரு அணியை உருவாக்குவதில் கட்சியின் உயர்பீட உருப்பினர்கள், கிழக்கு மாகாண மூத்த போராளிகள், கட்சியை விட்டும் வெளிச்சென்ற முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் உள்ளிட்ட சிலரையும் உள்வாங்கியதான பேச்சுக்கள் இடம்பெற்றுவருவதாக தகவலகள் வெளியாகியுள்ளன. இதனை சுமுகமாக தீர்த்துக்கொள்ளும் முயற்சியில் தலைவர் ரவூப் ஹகீம் அவர்கள் இறங்கியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் ஹாஜி அவர்களை கட்சிக்குள் உள்வாங்குவதன் மூலம் வன்னிக்கான முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் என்ற கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளது. அதே போன்று அட்டாளைச்சேனைக்கான மாகாண சுகாதார அமைச்சும் பிந்திய இரண்டரை வருட பாராளுமன்ற தேசியப்பட்டியலும் என்ற கருத்துக்கு வழு சேர்க்க முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய விடயங்களின் இறுதி தீர்மானங்களை எட்டுவதற்காக இவ்வாரம் கட்சி தலைவர் பிரித்தானியா பயணமாக உள்ளதாகவும் தவிசாளருக்கான தேசியப்பட்டியல் விடயம் உடன்பாடு காணப்படாத விடத்து தலைமைத்துவ மாற்றத்திற்கான மாற்று அணியின் மூலம் ரவூப் ஹகீம் அவர்களது தலைமைத்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இனத்துவ கட்சிகளின் வரிசையில் இலங்கை முஸ்லிம்களின் அடையாள அரசியலை பிரதிபலிப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்றது. தமிழர் அரசியலில் உறவு கொண்ட வடகிழக்கு முஸ்லிம் அரசியல்இ கூர்மையடைந்த தமிழர் போராட்ட உணர்வுகளாலும், இந்திய அரசியல் காய்நகர்த்தளினாலும்; தனியான இனத்துவ கட்சியாக பிரசவித்தது ஒன்றும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல. கட்சியின் தோற்றத்திலிருந்து இன்றுவரை முஸ்லிம் சமூகத்திற்குள்ளேயும் வெளியேயும் பல்வேறு சவால்களை சந்தித்து வந்துள்ளமையை அதன் வரலாறு சுட்டிநிற்கின்றது. குறிப்பாக தமிழ்த்தேசிய உணர்வாளர்களான விடுதலைப்புலிகளின் நெருக்குவாரங்களுக்குள் அஷ்ஷஹீட் அஹமட் லெப்பை போன்று பல போராளிகளை கட்சி இழந்து தேசிய கட்சியாக பரிணமித்ததை ஏற்றுத்தான் ஆகவேண்டும். இரண்டாவதாக இலங்கை அரசின் முக்கிய பேரம் பேசும் சக்தியாகவும் ஆட்சியினை தீர்மானிக்கின்ற சக்தியாகவும் அதன் பரிமாணங்கள் முஸ்லிம் சமூகத்தின் ஏக பிரதிநிதி என்ற அந்தஸ்த்தினை பெற்றுக்கொண்டது. இத்தகைய பரிணாம வளர்ச்சிகள் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியிலும் அண்டை நாடுகளிடத்திலும் தலையிடியாக அமைந்து விடும் வாய்ப்பாக காணப்பட்டது. இந்நிலைமையினை உணர்ந்து கொண்ட மர்ஹ_ம் அஷ்ரப் அவர்கள் இனத்துவ அடையாளத்தை கட்சியின் பெயரில் இருந்து மாற்றம் செய்து ஒரு பல்லின கட்சியாக தேசியரீதியில் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற தூர நோக்கோடு செயற்பட்டார். இதன் முதற் கட்டமாகத்தான் நுஆ கட்சி ஆரம்பிக்கப்பட்டதும் அசித்த பெரேரா உள்ளிட்ட தமிழ் சிங்கள அரசியல் வாதிகள் உள்வாங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. என்ற போதும் இந்த சதுரங்க ஆட்டத்தில் மர்ஹ_ம் அஷ்ரப் அவர்களின் மறைவின் பின்னர் முஸ்லிம் அரசியலை மலினப்படுத்தி, கூரு போடும் செயற்திட்டம் அமுல்நடாத்தப்பட்டது. குறிப்பாக புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம் தேசியம் தனித்தரப்பாக பேச்சுவார்த்தை மேடையில் அமரவேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம் சமூகத்தில் வழுப்பெற்றது. முஸ்லிம் சமூகத்தில் இருந்த ஏக போக அரசியல் உரிமையினைப் பயன்படுத்தி முஸ்லிம் காங்கிரஸ{ம் தமிழ்த்தரப்பு போன்று தனியழகு கோரிக்கையினை முன்வைக்க முற்பட்டது. இந்நிலையில்தான் முஸ்லிம் காங்கிரஸை துண்டாடும் செயற்திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. பேச்சுவார்த்தை மேடையை விட்டும் இரவோடிரவாக தலைவர் ஹகீம் அவர்கள் நாடு திரும்ப வேண்டி ஏற்பட்டது. ஏனைய முஸ்லிம் பிரதிநிதிகள் தமது அறைகளுக்குள்ளேயே குளிர்காய்ந்து விட்டு தாயகம் திரும்பியதும் வரலாறு. அப்போது முஸ்லிம் காங்கிரஸ் மீது வீசப்பட்ட குறியினால் ஏனைய சில்லறை முஸ்லிம் கட்சிகள் தோற்றம் பெற்றது மாத்திரம் இல்லாமல் அடுத்தடுத்து வந்த பேச்சுவார்த்தைகளில் யார் முஸ்லிம்களின் பிரதிநிதி என்ற வினாக்கலுக்குள்ளேயே முஸ்லிம்களது கோரிக்கைகள் பேச்சுவார்த்தை மேடைக்கு வராமல் மழுங்கடிக்கப்பட்டது. இத்தகைய சூழ்நிலைக்கைதியாக சில நேரம் தமிழ்த்தேசியவாதிகளான அண்ணன் பாலகுமார் உள்ளிட்ட பின்னனியாளர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் அள்ளுண்டு முஸ்லிம்களுக்கான தீர்வு உள்ளக பொறிமுறையில் புலிகளுடன் பேசி தீர்மானிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்பட்டது. முஸ்லிம் அரசியல்;இ வியாபார உருவமெடுத்த நிலையில் சந்தை விலைக்கமைய பேரினவாத கட்சிகளுக்குள் கறைந்து தீர்மான சக்தி என்ற நிலைமையினை; இழந்து போனது. சில்லரைக்கட்சிகளின் தோற்றம்இ முஸ்லிம் உரிமை என்ற பேரம் பேசலில் இருந்து அமைச்சுக்கள் பதவிகள் என்ற பேரம் பேசும் வட்டத்துக்குள் சுருக்கப்பட்டது. உரிமைக்கான அரசியலில் இருந்து அபிவிருத்தி அரசியலுக்குள் முஸ்லிம் சமூகத்தின் அடிநிலை மக்கள் மனநிலை திசை திருப்பப்பட்டது.
கால ஓட்டத்தின் மாற்றத்திற்கமைய யுத்ததிற்கு பின்னான முஸ்லிமரசியலில் பௌத்த பேரினவாதம் என்ற கோஷங்களால் முஸ்லிம் சமூகம் பாதுகாப்பற்ற நிலையினை எந்திர்கொண்டபோது மீண்டும் இனத்துவ அரசியல் சிந்தனை முஸ்லிம்களிடத்தில் சூடுபிடித்தாயிற்று. இத்தகைய நிலை மீண்டும் முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சிக்கு வாய்ப்பாக மாறும் நிலைமை ஏற்பட்டது. இதனை நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் இருந்து கண்டு கொள்ள முடியும். பேரினவாதக் கட்சிகளில் அடைக்கலம் பெற்றிருந்த சில அரசியல் கட்சிகள் மூடுவிழாக் கண்டதையும், பல மூத்த அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூகத்தினால் புறக்கனிக்கப்பட்டமையும் முஸ்லிம் காங்கிரஸிற்கு சாதகமாக கொள்ளப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் ஒரு பிளவினை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது. குறிப்பாக கடந்த காலங்களில் திவிநெகும, 18வது திருத்த சட்ட மூலம் போன்றவற்றிற்கு ஆதரவு அளித்த்தமையானது கட்சியின் நடவடிக்கைகளில், தீர்மானங்களில் மக்கள் அதிர்ப்தியினை ஏற்படுத்தியிருந்தது. கட்சி ஒரு தீர்மானத்தையும் தவிசாளர், செயலாளர், உருப்பினர்கள் என ஒவ்வொருவரும் மாற்றுக்கருத்துக்களுடன் செயற்பட்டமையும் கட்சியின் நம்பகத்தன்மை மீதான கேள்வியினை ஏற்படுத்தியது. இத்தகைய நிலையில் கட்சியையும் தலைமையினையும் மக்கள் மத்தியில் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நிலை தலைவர் ரவூப் ஹகீம் அவர்களுக்கு ஏற்பட்டது.
கட்சி சுத்திகரிப்பு.
முஸ்லிம் காங்கிரஸ் கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கப்பால் செயற்பட்டமைக்கு தவிசாளர் அவர்களே காரணம் என்ற எண்ணக்கரு காங்கிரஸ் போராளிகளிடத்தில் விதைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மஹிந்த அரசுடனான இனிமையான பொழுதுகளும், கட்சிக்கோ, உயர்பீடத்திற்கோ தெரியாமல் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சொன்றை பெற்றுக்கொண்டமையும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்கள் வெளியிட்டமையென பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அத்தோடு தவிசாளருக்கு இருமுறை தேசியப்பட்டியல் வழங்கப்பட்டமையும் பல்வேறு சந்தேகங்களை தலைவர் மீது ஏற்படுத்தியது. மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநித்துவம் கேள்விக்குறியாகும் அளவுக்கு வாக்கு வங்கியும் சரிந்து காணப்பட்டது. இவற்றுக்கான தீர்வினையும் விடைகளையும் பெறுவதாயின் தவிசாளரை அரசியல் அரங்கிலிருந்து ஓரம் கட்ட வேண்டிய தேவையும் தலைவருக்கு உள்ளார இருந்து வந்துள்ளமை கடந்த தேர்தலில் கட்சிதமாக தவிசாளரை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கியமையை காணலாம். இதற்கு சாதகமாக தற்போதய பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகிர மௌலானா அவர்களின் விடாப்பிடியான கோரிக்கையும் வாய்ப்பாக அமைந்தது. அதே போன்று கட்சி தனித்துப்போட்டியிடுவதா அல்லது சேர்ந்து போட்டியிடுவதா என்ற தீர்மானத்தில் தவிசாளரை கலந்தாலோசிக்காமல் செயற்பட்டமையும், அதற்கு பாடம் புகட்டுவதற்காக முஸ்லிம் காங்கிரஸினை தனது மாவட்டத்தில் தோற்கடிப்பதற்காக தனது ஆதரவாளர்களையும் முக்கிய காங்கிரஸ் உறுப்பினர்களையும் காத்தான்குடியில் முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் கல்குடாவில் முன்னாள அமைச்சர் அமீரலி அவர்களுக்கும் தேர்தல் வேலைகளில் ஈடுபடுமாறு உள்ளருப்புக்களை மேற்கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.
கட்சியை பிரித்தாளும் தேசியப்பட்டியல்
தவிசாளர் அவர்களது மௌனமும் காத்துக்கிடப்பும் தனக்கு கட்சி தேசியப் பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்கும் என்ற நம்பிக்கையே. கடந்த காலங்களில் கட்சியின் தலைமைத்துவத்திற்கான போட்டி ஏற்பட்ட போது தலைவராக தொடர்ந்தும் ரவூப் ஹகீம் அவர்களே செயற்படுவதற்கு பல்வேறு காய் நகர்த்தல்களை செய்திருந்தமையும், கட்சியினை சர்வதேச அங்கீகாரம் பெருவதற்கு ஏதுவாக அவ்வப்போது ஆட்சிப்பங்;காளியாக மாற்றியமைத்த சாணக்கியமும் தனக்கே உரியது என தவிசாளர் கருதுகின்றார். கட்சியின் ஜனநாய விழுமியங்களுக்கமைய தான் தனிப்பட்ட முறையில் அவ்வப்போது கருத்துக்களை வெளியிட்ட போதும் கட்சியின் தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டு செயற்பட்டு வந்துள்ளேன் என்ற தனது பக்க நியாயத்தையும் முன்வைப்பதனை அவதானிக்க கூடியாதக உள்ளது. மைத்ரி பால சிறி சேன அவர்களை ஆதரிப்பதாக கட்சி முடிவு எட்டியபோது தனது அமைச்சுப்பதவியினைக்கூட தூக்கியெரிந்து விட்டு வந்ததாக அவரது வாதம் தொடர்கின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கிழக்கினுள்ளே அமைய வேண்டும்
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை கிழக்கினுள்ளே அமைய வேண்டும் என்ற கோஷம் அவ்வப்போது தேர்தல் காலங்களில் வேற்பாளர் பட்டியல் தயாரிப்பின் போதும், தேர்தலுக்கு பின்னரான தேசியப்பட்டியல் விநியோகத்தின் போதும் எழுவது வழக்கம். உண்மையில் இலங்கை முஸ்லிம் அரசியல் ஊருக்கு" எம்பி வேண்டும்" பிரதேசத்துக்கு தலைமை வேண்டும் என்ற குறுகிய பிரதேச வாத சிந்தனையால் கவரப்பட்டு வந்துள்ளது. இதன் வெளிப்பாடு உள்ளூர் மற்றும் தேசிய அரசியலில் பொருத்தமற்றவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக சமூகத்தை விற்று பிழைப்பு நடாத்த காரணமாக அமைந்து விட்டது என்பதனை எவரும் மறுப்பதற்கில்லை. இத்தகைய பிரதேசவாத முன்னெடுப்புக்கள் முஸ்லிம் சமூகத்தின் தேசிய அரசியலை கூரு போட்டு பிராந்திய அரசியல் சிந்தனைகளுக்கே வழிவகுக்கும். ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம் அரசியலை வழினடாதுவதாயின் வடகிழக்கும், ஏனைய பிராந்தியங்களும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான நல்லதொரு தலைமையே பொருத்தப்பாடாகும். இத்தகைய தலைமைகளை பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் முன்னிலைப்படுத்தி முஸ்லிம் அரசியல் சிந்தனையில் மாற்றத்தினை ஏற்படுத்தி நல்லதொரு அரசியல் கலாச்சாரத்தினை விதைப்பதே காலத்தேவையாகும். குண்டாஞ்ச்சட்டிக்குள் குதிரை ஓட்டத்தெரியாதவ்ர்களைக்கூட தலைவர்களாக ஆக்க நினைப்பதும், கூட்டு வியாபாரத்தில் பங்கு பிரச்சினையால் எதிர்க்கடை போட நினைப்பதும் முஸ்லிம் அரசியலில் ஒருவகையான நோயாக பார்க்கப்பட வேண்டியதே. தமிழ்த்தேசிய அரசியல் இன்று முக்கிய புள்ளி நிலையில் அமரக்காரணம் சோரம் போகாத கொள்கைவாதமும் மக்கள் அங்கீகாரமும் தனித்துவ அரசியலுமேயாகும். போருக்குப்பின்னான தீர்வுச்சூழலில் தமிழ்த்தரப்பு பலமான எதிர்க்கட்சியாக களமிறங்கி தீர்வினை மெற்றுக்கொள்ளும் தருவாயில் முஸ்லிம் அரசியல் இன்னும் மலினப்படுத்தப்பட்டு பலவீனமாவது அரசியல் வியாபாரிகளுக்கு இலாபமாக அமைந்தாலும் முஸ்லிம் சமூகத்துக்கு சாபமாகவே அமையும்.
0 comments:
Post a Comment