தேசிய அரசை குழப்ப சில தீய சக்திகள்
பகீரத பிரயத்தனம்
எச்சரிக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
தேசிய அரசாங்கம் அமைத்து சுபீட்சமான புதிய நாட்டை உருவாக்கும் பயணத்தைத் தடை செய்வதற்கு சில சக்திகள் பகீரத பிரயத்தனம் மேற்கொள்வதாகவும் இது தொடர்பில் 24 மணித்தியாலமும் விழிப்புடன் செயற்பட வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
எதிரிகளை சுலபமாக எடைபோடக் கூடாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்களின் நோக்கங்கள் நிறைவேறுவதற்கு இடமளிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் 69வது மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி:- ஐக்கிய தேசியக் கட்சியுடன் தேசிய அரசாங்கம் அமைத்து மேற்கொள்ளும் பயணத்தில் இணைந்து செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தோழமைக் கரம் நீட்டுவதாகவும் அது தொடர்பில் பெரும் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 69வது மாநாடு நேற்று கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, செயலாளர் கபீர் ஹாசிம் உட்பட அமைச்சர்கள் முக்கியஸ்தர்களுடன் பல்லாயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்ட இம் மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தொடர்ந்தும் பேசுகையில் மேலும் தெரிவித்ததாவது,
சுமார் ஆறு தசாப்தங்களாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன தேர்தல்களின் போது எதிரெதிராய் செயற்பட்டு எத்தகைய இழப்புகளை சந்தித்துள்ளன என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களின் போது எத்தனை மோதல்கள் எவ்வளவு உயிர்கள் பலியாகியுள்ளன. எந்தளவு வளங்கள் அழிந்து போயுள்ளன என்பது தொடர்பிலும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
இவற்றைத் தடுப்பதற்கே நாம் புதிய நாடு என்ற வகையில் புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்கியுள்ளோம். எமக்குப் பொருந்தாததை இல்லா தொழித்துவிட்டு பொருத்தமானதை மேற்கொள்ளவே ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கைகோர்த்துக் கொண்டுள்ளன. இது தொடர்பில் நான் பெரும் மகிழ்ச்சியடைவதுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைத்து முன்னோக்கிப் பயணிக்கக் கிடைத்தமையும் பெரு மகிழ்ச்சிக்குரியது.
ஐக்கிய தேசியக் கட்சி என்மீது கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகள் தொடர்ப்புகள் தொடர்பில் நான் பெருமையடைகின்றேன். அதனை நான் நிறைவேற்றுவேன் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த நாட்டில் தற்போது வாழ்கின்ற மக்கள் மற்றும் பிறக்கப்போகும் எதிர்கால பரம்பரைக்குமான சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்ப ஆர்ப்பணிப்புடன் செயற்படுவேன். அதே போன்று தேசிய சர்வதேச சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப இளைஞர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்குவேன்.
அரசாங்கத்தைப் போன்றே பதவிகளை வகிப்பவர்களுக்கும் நம் எதிரில் ஆபத்துக்கள் இருப்பதை எவரும் மறந்து விடக்கூடாது. அத்தகைய ஆபத்துக்கள் உங்களுக்கும் எமது உயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் எமது எதிர்கால பயணம் மிகவும் சுலபமானதென நாம் கருதிவிடக் கூடாது. அது மிகுந்த மோசமானது என்பதையும் மறந்துவிடக் கூடாது.
மோசமான ஆட்சியை மாற்றி நாம் மேற்கொண்டுள்ள பயணத்தை பின்னடையச் செய்வதற்கு சில சக்திகள் பகிரத முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. அவற்றை வீழ்ச்சியுறச் செய்யும் சவாலை நாம் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
யுத்தத்தின் மூலமான அனுபவங்களுடன் நேர்மையானதும் நீதியானதும் ஊழல் மோசடிகளற்ற செயற்பாடுகளின் மூலம் சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மதமக்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு நாம் இந்தப் பயணத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியம்.
எம் அனைவரதும் நேர்மையான செயற்பாடுகள் மூலம் தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு நாட்டில் உள்ளவர்கள் இல்லாதவர்கள் என்ற இடைவெளியையும் நிவர்த்தி செய்ய வேண்டியது எமது கடமையாகும். நாட்டில் வேலையில்லாப் பிரச்சினைக ளுக்குத் தீர்வு கண்டு சிறந்த இலவசக் கல்வி சுகாதாரம், பலமான பொருளாதாரம் ஆகியவற்றைக் கொண்ட சக்திமிகு நாட்டைக் கட்டியெழுப்புவது எமது பொறுப்பாகும்.
பல வருடங்களாக நாட்டின் இரு பிரதான கட்சிகளும் தனித்து ஆட்சி செய்ததைத் தொடர்ந்து தற்போது நாம் ஒன்றிணைந்த ஆட்சியில் பயணிக்கத் தீர்மானித்துள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சகோதரக் கரம் நீட்டுகிறது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். ஐக்கிய தேசியக் கட்சியின் 69வது நிறைவு மாநாட்டின் தொனிப்பொருள் ‘புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ என்பதே. புதிய அரசியல் கலாசாரத்துடன் நம் அனைவரதும் ஆர்ப்பணிப்பு மிக அவசியம்.
இணக்கப்பாட்டுடனான தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். மக்கள் இந்த நாட்டை எம்மிடம் ஒப்படைத்து அவர்களின் அபிலாஷைகள் நிறைவேறுவதையே எதிர்பார்த்துள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் இதனை எந்தளவு நிறைவேற்றுவர் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
தேசிய அரசாங்கத்திற்காக ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்துள்ளமை போன்றே அமைச்சரவை இணைப்பும் புதிய அரசியல் கலாசாரத்தை வெற்றிகொள்ள உறுதுணையாக அமையும்
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தாம் செயற்பட சேர்ந்த விதம் அச்சமயம் பிரதமர் தமக்களித்த ஆதரவு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் அளித்த ஆதரவையும் பாராட்டிய ஜனாதிபதி ஒருபோதும் அதனை மறக்கமாட்டேன் என்றும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment