கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டம்
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் உயர்மட்டக் கூட்டம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் ஒன்று நேற்று 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய நகருக்கான வரைபடத்திலுள்ள முக்கிய அம்சங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
புதிய நகருக்காக வயல் பகுதியில் சுமார் 800 ஏக்கர் காணியை நீரப்புவதர்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கல்முனை மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் இக்கூட்ட்த்தில் எடுத்துக் கூறினார்
நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் உதவிச் செயலாளர் பொறியியலாளர் ரமேஷ் கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் தொழில் நுட்ப விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தினார்.
இதனைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தமது கருத்துகளை முன்வைத்தனர். இதன்போது முன்வைக்கப்பட்ட சில பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் 26ஆம் திகதி அமைச்சின் உயர் அதிகாரிகள் கல்முனைக்கு விஜயம் செய்து கலந்துரையாடல்களை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், அலி சாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், கல்முனை பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி உட்பட மாநகர சபை உறுப்பினர்களும் மற்றும் அரசியல் பிரமுகர்களும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் பிரதேச  செயலாளர்கள் உட்பட திணைக்களங்களின் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.

கடந்த பொதுத் தேர்தலின்போது கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் மக்களுக்கு உறுதி வழங்கியிருந்தார்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top