மர்ஹும் எஸ்.எச்.எம் ஜெமீல்
கல்வித்துறையில் பெரும் பணியாற்றியுள்ளார்
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம்

“அறிஞர் எஸ்.எச்.எம்.ஜெமீல் எமது நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்து செயற்பட்டார். அவரின் சேவையினால் இன்று நாட்டில் ஆயிரக்கணக்கான கல்வி அதிகாரிகள் உருவாக்கப்பட்டுள்ளார்கள். அவர் முஸ்லிம் சமுகத்துக்கு மட்டுமன்றி நாட்டில் வாழும் முழு சமூகத்தினருக்கும் கல்வித்துறையில் பெரும் பணியாற்றியுள்ளார்.
இவ்வாறு தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய, அறபு மொழி பீட கேட்போர் கூடத்தில் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் மர்ஹும் அறிஞர் எஸ்.எச்.எம்.ஜெமீல் நினைவுப் பேருரையும் அன்னாரது   நினைவுகள் பற்றிய கண்காட்சியும் நினைவரங்கும் அவரது நூல் தொகுப்பு கண்காட்சியும் நேற்று 2015.11.04 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய, அறபு மொழி பீடத்தின் ஏற்பாட்டில் பீடாதிபதி அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம்.மஸாஹிர் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன
இந்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் மேலும் கூறியதாவது;
பண்பாட்டு ஆய்வாளராக திகழ்ந்த ஜெமீலின் இழப்பு முஸ்லிம் சமூகத்துக்கு ஓர் இடைவெளியை தோற்றுவித்துள்ளது. ஜெமீல் ஒரு பன்முக ஆளுமை செயற்திறமையில் தொடர்ந்து தன்னை உறுதிப்படுத்தியவர். அவரது இயல்பான திறமைகள் அவரைப் பல படித்தரங்களுக்கு உயர்த்தியுள்ளது என்றார்.
பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் மெய்யியல் துறை பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் உரையாற்றுகையில் கூறியதாவது;
மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல் முஸ்லிம் சமூகப் பரப்பில் ஒரு பண்முக ஆளுமை கொண்ட அறிஞராக திகழ்ந்தார்.  
 அறிஞர் எஸ்.எச்.எம்.ஜெமீல் சிறந்த ஆய்வாளராகவும் தேடல்மிக்க ஒருவராகவும் இருந்ததுடன் அடுத்த சந்ததியினருக்காக அவற்றை நூலுருவாக்கியும்  வந்துள்ளார். அந்த வகையில் அவர் ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருந்தார்.
அவரது அறிவு, ஆற்றல், அனுபவங்கள் அனைத்தும் சமூகத்திற்கு பிரகாசத்தை கொடுத்திருந்தது. அவர் ஒரு பெறுமதியான சிந்தனையாளராக நம்மத்தியில் காணப்பட்டார். கல்வி, மற்றும் இலக்கியம் ஊடாக தமிழ், முஸ்லிம் சமூகங்களின் உறவுப் பாலமாகவும் அவர் திகழ்ந்தார். அவரது மறைவினால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்வதற்கு நம் சமூகத்தில் ஒருவர் பிறந்து வருவாரா என்பது சந்தேகமேஇவ்வாறு பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முதுநிலை விரிவுரையாளர் எம்.எஸ்.எம்.ஜலால்தீன், மணிப்புலவர் மருதூர் .மஜீத், சட்டத்தரணி எம்.சீ.ஆதம்பாவா ஆகியோரும் உரையாற்றினார்.
ஆரம்ப நிகழ்வாக தென்கிழக்குப் பல்கலைக்கழக அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்தில், மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்கள் எழுதிய மற்றும் அவருடன் தொடர்புடைய நூல்கள் அடங்கிய கண்காட்சியை மர்ஹும் ஜெமீல் அவர்களின்  மகன் நஸீல் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்தின் நூலகர் எம்.எம்.றிபாயுடீன் தலைமையில் மர்ஹும் ஜெமீல் அவர்களது நாட்டார் பாடல்கள் அடங்கிய இணையத்தளத்தை உபவேந்தர் எம்.எம்.எம்.நாஜிம் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் மனைவி ஜனாபா ஜெமீல், உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் கல்வியலாளர்கள் அவரது நண்பர்கள் விசுவாசிகள் மாணவர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top