12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டி:
தங்க வேட்டையில் இலங்கை இரண்டாவது இடத்தில்



12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டாவது நாளான நேற்று இலங்கை நான்கு போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றது.
12வது தெற்காசிய விளை யாட்டுப் போட்டி அஸாம் தலை நகர் குவாஹாட்டியில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்நிலை யில் போட்டியை இணைந்து நடத் தும் மேகாலயா தலைநகர் ஷில் லாங்கில் நேற்று தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தெற்காசிய விளையாட்டு போட்டியில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், மாலத்தீவு, ஆப்கா னிஸ்தான், பூடான் ஆகிய 8 நாடு களை சேர்ந்த 2600க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்று 20 தங்க பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெற்றது. இந்தியாவின் பதக்க வேட்டை சைக்கிளிங் பந்தயத்தில் இருந்து தொடங்கியது. ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் முதல் இரு இடங்களை இந்தியா பிடித்தது. முதல் தங்க பதக்கத்தை மகளிர் பிரிவின் 30 கி.மீ. பந்தயத்தில் பித்யாலட்சுமி வென்றார்.
அவர் பந்தய தூரத்தை 49 நிமிடம் 24.573 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஷோவுபா தேவி 49 நிமிடம் 31.311 விநாடி களில் கடந்து வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார். பாகிஸ்தானின் ஷகிபா பிபி வெண்கலம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 50 நிமிடம் 10.598 விநாடிகளில் கடந்தார்.
ஆடவர் பிரிவின் 40 கி.மீ. பந்தயத்தில் இந்தியாவின் அரவிந்த் பன்வார் முதலிடம் பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 52 நிமிடம் 28.800 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான மன்ஜித் சிங் 54 நிமிடம் 1.183 விநாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் பெற்றார். இலங்கையின் ஹேமந்த குமர வெண்கலம் வென்றார்.
பளுதூக்குதலில் இந்தியா 2 தங்க பதக்கங்கள் வென்றது. 48 கிலோ எடை மகளிர் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் ஷாய்கோம் மிராபாய் ஷானு மொத்தம் 169 எடையை தூக்கி (ஸ்னாட்ச் பிரிவில் 79 கிலோ, கிளீன் மற் றும் ஜெர்க்கில் 90 கிலோ) தங்கம் வென்றார். இந்த பிரிவில் இவ் வளவு எடை தூக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
இலங்கையின் தினுஷா ஹன்சானி 145 கிலோ எடையை தூக்கி வெள்ளி பதக்கமும், வங்க தேசத்தின் மோலா ஷபிரா 143 கிலோ எடையை தூக்கி வெண் கலமும் கைப்பற்றினர்.
ஆடவர் 56 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் குருராஜா மொத்தம் 241 கிலோ எடை தூக்கி (104+137) தங்கம் வென்றார். இலங்கையின் சதுரங்க லக்மல் 239 கிலோவுடன் வெள்ளிப்பதக்கமும், பாகிஸ்தானின் அப்துல்லா ஹாபோர் 227 கிலோவுடன் வெண் கலமும் கைப்பற்றினர். மல்யுத்தத்தில் 5 தங்கம் இந்தியாவுக்கு கிடைத்தது.
நீச்சல்போட்டியில் இந்தியா 4 தங்கம், 3 வெள்ளி பதக்கங்கள் அள்ளியது. மூன்று சாதனைகளும் படைக்கப்பட்டது. பட்டர்பிளை பிரிஸ்டைல் 100 மீட்டர் மகளிர் பிரிவில் இந்தியாவின் தமினி கவுடா பந்தய தூரத்தை 1.04.921 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இலங்கையின் ஹிருணி பெரேரா 1:06.892 விநாடிகளில் கடந்து வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு இலங்கை வீரர் மச்சிகோ ரஹீம் வெண்கலம் வென்றார்.
ஆடவர் பிரிவில் இலங்கையின் மேத்யூ அபிசிங்கே 55.421 விநாடி களில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்றார். இந்தியாவின் சுப்ரியோ மோன்தால் 55.862 விநாடிகளில் கடந்து வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார். வெண்கல பதக் கத்தை இலங்கையின் ஷிரந்தா டி சில்வா பெற்றார்.
பிரீஸ்ட் ஸ்டிரோக் 200 மீட்டர் ஆடவர் பிரிவில் இந்தியாவின் சந்தீப் சேஜ்வால் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 2:20.661 விநாடிகளில் கடந்தார். இலங் கையின் கிரன் ஜயசிங்க 2:26.172 விநாடிகளில் வெள்ளி பதக்கமும், வங்கதேசத்தின் ஷரிப்புல் இஸ்லாம் வெண்கலமும் கைப்பற்றினர்.

பிரீஸ்டைல் 200 மீட்டர் மகளிர் பிரிவில் இந்தியாவின் ஷிவானி கட்டாரியா 2:08.681 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்றார். இலங்கையின் மச்சிகோ ரஹீம் 2:09.022 விநாடிகளில் வெள்ளியும், அதேநாட்டை சேர்ந்த இஷானி எரன்திக 2:11.633 விநாடிகளில் வெண்கலமும் வென்றனர்.
ஆடவர் பிரிவில் இலங்கையின் மேத்யூ அபிசிங்க 01:52.281 விநாடிகளில் தங்கமும், இந்தியாவின் சவுரப் சங்வேஹர் 1:53.032 விநாடிகளில் வெள்ளியும், வங்க தேசத்தின் மஹ்பிஜூர் ரஹ்மான் 01:56.193 விநாடிகளில் வெண்கலமும் கைப்பற்றினர்.

இந்தியா  16 தங்கம், 6 வெள்ளி 1 வெண்கலம் என மொத்தமாக 23 பதக்கங்கள் கைப்பற்றி பதக்க பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இலங்கை 5 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலத்துடன் 25 பதக்கம் பெற்று 2வது இடத்திலும் , பாகிஸ்தான் 1 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 6 பதக்கங்கள் பெற்று 3வது இடத்திலும் வங்களாதேஸ் 2 வெள்ளி, 8 வெண்கலத்துடன் 4வது இடத்திலும் இருந்தன.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top