தமிழ் மக்களைக் கொண்ட பத்து பிரதேசங்களுக்கு

முஸ்லிம் உறுப்பினர்கள் அபிவிருத்திக்குழு 
தலைவர்களாக நியமனமாம்:

த. தே. கூட்டமைப்பு எம்.பி யோகேஸ்வரன் கண்டனம்

நல்லாட்சி அரசாங்கம் என்று கூறுகின்ற இந்த அரசாங்கம் நல்லாட்சிக்கு எதிரான முறையில் தமிழ் பிரதேச செயலகங்களுக்கு முஸ்லிம் உறுப்பினர்களை நியமித்ததற்கு கடும் கண்டனத்தினை தெரிவித்துக்கொள்வதுடன் அவற்றினை இடைநிறுத்துமாறு உரிய தலைவர்களைக்கேட்டுக்கொள்கின்றேன். என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பார்வீதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்துள்ளார்
இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது,
இந்த அரசாங்கம் ஆட்சியமைப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும் பங்கையாற்றியுள்ள நிலையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இந்த அரசாங்கம் புறக்கணித்து வருவதை ஏற்றுக்கொள்ளமுடியாது
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அதிக எண்ணிக்கையான தமிழ் மக்களைக் கொண்ட பத்து பிரதேசங்களுக்கு முஸ்லிம் பிரதிநிதிகள் பிரதேச அபிவிருத்துக் குழவின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அது தொடர்பான கடிதங்கள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக நாம் அறிகின்றோம்.
முஸ்லிம் பிரதேச செயலகங்களுக்கு பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவர்களாக முஸ்லிம் அரசியல்வாதிகள் தலைவர்களாக நியமிக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.
மாறாக நல்லாட்சி அரசாங்கம் என்று கூறுகின்ற இந்த அரசாங்கம் நல்லாட்சிக்கு எதிரான முறையில் தமிழ் பிரதேச செயலகங்களுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை நியமித்ததற்கு கடும் கண்டனத்தினை தெரிவித்துக்கொள்வதுடன் அவற்றினை இடைநிறுத்துமாறு உரிய தலைவர்களைக்கேட்டுக்கொள்கின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பொறுத்தவரையில் மூன்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எட்டு தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளனர். மூன்று முஸ்லிம் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளனர்.
மாவட்ட அபிவிருத்திக்குழு தலைமைப்பதவியில் மூன்று முஸ்லிம்களும் ஒரு தமிழரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுபோன்று தமிழர் பகுதிகளில் உள்ள பிரதேச செயலகங்களிலும் முஸ்லிம் பிரதிநிதிகள் அதன் தலைவர்களாக வந்துள்ளதானது முற்று முழுதாக இந்த அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பினை புறந்தள்ளுவதை காட்டுகின்றது.
இது தொடர்பில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரின்  கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளேன்.
கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் பிரதேச அபிவிருத்துக்குழு மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர்கள் பதவியில் சமநிலை பேணப்பட்டது. தமிழ் பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு அன்று அரசாங்கத்தின் சார்பாக இருந்த தமிழ் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர்.
அதேபோன்று மாவட்ட அபிவிருத்திக்குழுவிலும் முன்னாள் முதலமைச்சரும் பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக செயற்பட்டார். அதன் காரணமாக தமிழ் மக்கள் தமிழர்கள் உள்ளார்கள் என்ற திருப்தியில் இருந்தனர்.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் உள்ளபோது 25 வீதமாகவுள்ள முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பிரதிநிதிகள் தமிழ் பிரதேச செயலகங்களில் பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளது அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
நாங்கள் இனரீதியாக பாகுப்படுத்தவில்லை. ஆனாலும் இந்த அரசாங்கத்தினை அமைத்தவர்கள். காலம்காலமாக ஒவ்வொரு கட்சியாக தாவிவந்தவர்கள் நாங்கள் அல்ல. கடந்த அரசாங்கத்திற்கு எதிராக நாங்கள் இருந்தபோதிலும் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவினை வழங்கியுள்ளோம்.
வேறுவேறு கட்சிகளில் இருந்துவிட்டு சந்தர்ப்பத்திற்கு வருபவர்களையெல்லாம் தமிழ் பிரதேச செயலகங்களுக்கு பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர்களாக நியமித்துவிட்டு இந்த அரசாங்கத்திற்கு ஆதரவாக என்றென்றும் இருக்கும் எங்களை புறந்தள்ளியிருப்பதை ஏற்கமுடியாது.

எனவே ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமிழ் பிரதேச செயலகப்பிரிவுகளில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அபிவிருத்திக்குழுவின் தலைவர்களாக நியமிப்பதற்கும் மாவட்ட அபிவிருத்திக்குழுவிலும் இன்னுமொரு உறுப்பினரை இணைப்பதற்கும் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் வேண்டுகோள் விடுகின்றேன். இவ்வாறு  மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top