கர்ப்பிணி தாய்மார்கள் ‘பாராசிட்டமால்’

மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொண்டால்

குழந்தைக்கு ஆஸ்துமா ஆபத்து!

ஆய்வில் தகவல்!!


கர்ப்ப காலத்தில் பெண்கள் பொதுவான வலி நிவாரணியான பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் அது பிறக்கும் குழந்தைக்கு ஆஸ்துமா நோய் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நோர்வே நாட்டு தாய்-சேய் நல ஆய்வுத் தகவல்களைப் பயன்படுத்தி கர்ப்பகாலத்தின் பல்வேறு சூழ்நிலைகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டு இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
இதில் 3 வயது முதல் 7 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோய் ஏற்பட்டதற்கு கர்ப்ப காலத்தில் இவர்களின் தாய்மார்கள் அதிகம் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆய்வு செய்யப்பட்ட சுமார் 114,500 குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா நோய் இருப்பதன் காரணம் இதுதான் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வை பிரிட்டனின் பிரிஸ்டல் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் நடத்தியுள்ளனர்.
அதாவது கர்ப்ப காலத்தில் பெண்கள் தலைவலி, காய்ச்சல், ஃப்ளூ ஆகியவற்றுக்கு பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்து கொள்கின்றனர். இதனால் பிறக்கும் குழந்தைகளிடத்தில் 3 வயது குழந்தைகளில் 5.7 சதவீதத்தினருக்கும், 7 வயது குழந்தைகளில் 5.1 சதவீதத்தினருக்கும் ஆஸ்துமா நோய் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் பாராசிட்டமால் எடுத்துக் கொள்வதற்கும் பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படுவதற்கும் மிகவும் சீரான, வலுவான அடிப்படையில் தொடர்பிருப்பதாக இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பாராசிட்டமாலுக்கும் ஆஸ்துமாவுக்குமான தொடர்பு குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்தாலும், இன்னும் இந்தத் தொடர்புகள் திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றாக மருத்துவ உலகம் கருதவில்லை.
இருப்பினும் இத்தகைய ஆய்வுகள் நமக்கு எச்சரிக்கையை அளிப்பதாகவே நாம் கருத வேண்டும் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வு இண்டெர்னேஷனல் ஜர்னல் ஆஃப் எபிடிமியாலஜி-யில் வெளியாகியுள்ளது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top