ராஜித குடும்பம் என்னை பழிவாங்க முயற்சி!

அவர்களின் காலடியில் சரணடைவேன் என்று எதிர்பார்க்கின்றார்கள்.

நான் ஒருபோதும் இறங்கி வர மாட்டேன்

மஹிந்த ராஜபக்ஸ ஆவேசம்!!

அமைச்சர் ராஜித சேனாரத்னவின் குடும்பம் தன்னைப் பழிவாங்க முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாம் புதல்வர் யோசித்த தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் நுகேகொடை இல்லத்தில் ஏராளமான ஆதரவாளர்கள் நாளாந்தம் திரண்டு வந்து ஆறுதல் கூறத் தொடங்கியுள்ளனர்.
அவ்வாறு ஆறுதல் கூற வந்தவர்களிடம் அமைச்சர் ராஜித சேனாரத்ன குடும்பத்தினருக்கு எதிராக மஹிந்த பொரிந்து தள்ளியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ராஜித குடும்பமே என்னைப் பழிவாங்க முயற்சி செய்கின்றது. அவ்வாறு பழிவாங்கினால் நான் பயந்துவிடுவேன் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அத்துடன் நான் அவர்களின் காலடியில் சரணடைவேன் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் நான் ஒருபோதும் இறங்கி வர மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்ஸவின் சர்வாதிகார ஆட்சிக்கு சாவு மணியடிக்க அமைச்சர் ராஜித சேனாரத்னவின் புதல்வர் சதுர சேனாரத்ன முன்னின்று செயற்பட்ட விவகாரம் மஹிந்த ராஜபக்ஸவுக்குள் இன்னும் தணியாத கோபமாக உள்ளதையே இது குறிப்பிடுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலின் போது பொது அபேட்சகர் ஒருவரே களமிறக்கப்பட வேண்டும் என்று முதன்முதலில் வலியுறுத்தியதுடன், அவ்வாறான பொது அபேட்சகர் ஒருவருக்கு ஆதரவு திரட்டியும், மஹிந்தவுக்கு எதிராகவும் சதுர சேனாரத்ன மாபெரும் கூட்டமொன்றை நடத்திக் காட்டியிருந்தார்.
இப்பொதுக் கூட்டத்தின் மூலமாகவே பொது அபேட்சகருக்கு ஆதரவாக எதிர்க்கட்சியின் அனைத்து தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருந்தன. அத்துடன் அனைத்து அரசியல் தலைவர்களும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
கொழும்பு, முத்தையா மைதானத்தில் நடைபெற்ற குறித்த கூட்டத்தின் பின்னரே எதிர்க்கட்சியினர் மத்தியில் ஒரு உத்வேகம் பிறந்திருந்தது. அத்துடன் மைத்திரிபாலவும் நம்பிக்கையுடன் பொது அபேட்சகராக களமிறங்க முன்வந்திருந்தார்.
மேலும் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது பொது அபேட்சகரின் ஊடகப் பேச்சாளராகவும், ராஜபக்ஸவினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் முன்வைத்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தும் அமைச்சர் ராஜித பாரிய பங்களிப்பொன்றை வழங்கியிருந்தார். இதன் காரணமாகவே பொதுமக்களின் கருத்துக்கள் ராஜபக்ஸவினருக்கு எதிராக திரும்பியது.

அது தொடர்பான பழிவாங்கும் உணர்வு மஹிந்தவின் மனதில் இருந்து கொண்டிருப்பதையே யோசித்தவின் கைதுடன் ராஜித்த குடும்பத்தினரை அவர் தொடர்புபடுத்தி விமர்சித்திருப்பதிலிருந்து தெரிய வந்துள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top