பெல்ஜியத்தில் தொடர் குண்டு வெடிப்பால் 35 பேர் பலி
மர்ம நபர் ஒருவரை பெல்ஜியம்
பொலிஸார்தேடிவருகின்றனர்
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 35 பேர் பலியானார்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
ஐரோப்பாவை உலுக்கிய இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொடர் குண்டுவெடிப்பால் பிரஸ்ஸெல்ஸ் நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதுகுறித்து பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் தொலைக்காட்சியில் கூறியதாவது:
பிரஸ்ஸெல்ஸ் நகர விமான நிலையத்திலும், மெட்ரோ ரயில் நிலையத்திலும் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் கண்மூடித்தனமானது; கொடூரமானது; கோழைத்தனமானது. இன்றையச் சம்பவம் துக்க கரமானது மட்டுமல்ல கருப்பு தினமுமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பிரஸ்ஸெல்ஸ் நகரிலேயே பதுங்கியிருக்கலாம் என்று கருதுவதாக அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் தீதர் ரெய்ன்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
பாரீஸ் நகர தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு தேடப்பட்டு வந்த சலா அப்தேசலாம் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு பிரஸ்ஸெல்ஸ் நகரில் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது. கைது செய்யப்பட்ட அப்தேசலாம், விசாரணையின்போது பிரெஸ்ஸல்ஸ் நகரில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறித்து தெரிவித்திருந்ததால் பெல்ஜியத்தில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த தாக்குதலில் 35 பேர் பலியாகியுள்ளனர்.
ஸாவன்டம் விமான நிலையத்தில் காலை 8 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. மூன்றாவது குண்டு நகரின் மையப்பகுதியில் உள்ள மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடித்தது. மக்கள் நெரிசல் மிகுந்த ரயில் நிலையத்தில் பயணிகள் வேலைக்குச் செல்வதற்காக ரயிலில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தபோது இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது.
விமானநிலையத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 14 பேரும், மெட்ரோ ரயில்நிலைய குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 20 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் இரு சம்பவங்களிலும் 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பிரஸ்ஸெல்ஸ் நகர மேயர் யுவன் மேயூர் தெரிவித்துள்ளார்.
விமானநிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்த இடம் ரத்த வெள்ளமாகக் காட்சியளித்ததாகவும் பலர் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்ததாகவும் சிலர் பீதியில் அங்கும் இங்கும் ஓடியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு முன்னதாக ஒருவர் அராபிக் மொழியில் கோஷமிட்டதாகவும் விமான நிலைய அதிகாரி அல்போன்ஸ் தெரிவித்தார். மேலும் சம்பவ இடத்திலிருந்து வெடிக்காத குண்டுகளுடன் கீழே கிடந்த பெல்ட்டைபொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களை அடுத்து ஸாவன்டம் விமான நிலையம் மூடப்பட்டது. விமானங்கள் இயக்கப்படவில்லை. மெட்ரோ ரயில்நிலையமும் மூடப்பட்டு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நகரில் பஸ்களும் இயக்கப்படவில்லை.
பிரஸ்ஸெல்ஸ் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, அண்டை நாடான பிரான்ஸின் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விமானங்கள், கப்பல்கள், ரயில்கள் மூலம் மக்கள் பிரான்ஸுக்குள் செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எல்லைப் பகுதிகளில் கூடுதலாக 1,600 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். உரிய பயணச் சீட்டுகள் மற்றும் அடையாள அட்டைகள் வைத்திருப்பவர்கள் மட்டுமே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் பெர்னார்டு காஸனூவ் தெரிவித்துள்ளார்.
பிரஸ்ஸெல்ஸ் குண்டு வெடிப்புத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இன்னும் சுதந்திரமாக உலவுவதாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், அந்தத் தாக்குதல் குறித்த பொலிஸாரின் விசாரணை குறித்த தகவல்களை ஊடகங்கள் வெளியிடுவது பயங்கரவாதிகள் தப்ப வழியளிக்கும் என பெல்ஜியம் அரசு தலைமை வழக்குரைஞர் ஃபிரெடெரிக் வேன் லீயு கூறியுள்ளார். எனவே, அந்த விசாரணை தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டாம் என ஊடகங்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தத் தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலுள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. லண்டன், பராகுவே, ஆம்ஸ்டர்டாம், வியன்னா உள்ளிட்ட முக்கிய நகரங்களின் விமான நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ரஷியாவும் தனது விமான நிலையப் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தேடப்படும் மர்ம நபர்
விமான நிலையத்தில் டிராலியில் பெட்டியை வைத்து தள்ளிக் கொண்டு செல்பவர்தான் பெல்ஜியம் போலீஸாரால் தேடப்பட்டு வரும் மர்ம நபர்.
0 comments:
Post a Comment