எகிப்து விமானத்தைக் கடத்தியவருடன்
செல்ஃபி எடுத்த பிணைக்கைதி!

தனது சொந்த பிரச்னைக்காக, எகிப்து நாட்டின் பயணிகள் விமானத்தைக் கடத்திய நபருடன், பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுத்துக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்தின் கடலோர நகரான அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து, தலைநகர் கெய்ரோவை நோக்கி எகிப்து}ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் 56 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களுடன் செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.
அப்போது, அந்த விமானத்தில் பயணம் செய்த சயீஃப் அல்தீன் முஸ்தஃபா என்பவர், தனது உடலில் வெடிகுண்டைப் பொருத்தியிருப்பதாகக் கூறி, அந்த விமானத்தை துருக்கி அல்லது சைப்ரஸ் நாட்டுக்குக் கொண்டு செல்லுமாறு மிரட்டினார்.
அதையடுத்து சைப்ரஸ் நாட்டின் லார்னகா விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.
அங்கு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 3 வெளிநாட்டுப் பயணிகள், 4 விமானப் பணியாளர்களைத் தவிர மற்ற அனைவரையும் சயீஃப் அல்தீன் முஸ்தஃபா விடுவித்தார்.
தொடர்ந்து அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது, தனக்கு சைப்ரஸில் அடைக்கலம் வேண்டும் எனவும், தனது முன்னாள் காதலியை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சயீஃப் அல்தீன் முஸ்தஃபா நிபந்தனை விதித்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு பல மணி நேரம் நீடித்த பரபரப்புக்குப் பிறகு அந்த விமானத்தில் எஞ்சியிருந்த பயணிகளும், பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறியதாகவும், அவர்களில் ஒருவர் விமானிகள் அறையின் சாளரம் வழியாகக் குதித்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
 அதைத் தொடர்ந்து சயீஃப் அல்தீன் முஸ்தஃபா விமானத்திலிருந்து வெளியேறி, பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தார்.
முன்னதாக, விமானத்தில் கடத்தல்காரரிடம் பிணைக்கைதியாக இருந்த பிரிட்டனைச் சேர்ந்த 26 வயது இளைஞர் பெஞ்சமின் இன்னெஸ், விமானத்தைக் கடத்திய முஸ்தஃபாவுடன் செல்ஃபி எடுத்து அதனை சமூக தளத்தில் வெளியிட்டுள்ளார்.

கடத்தல்காரருடன் செல்ஃபி எடுத்திருக்கும் இளைஞரின் பதிவு சமூக தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top