முன்னாள் அமைச்சர் மன்சூருக்கு கலாநிதி பட்டம்

வழங்கியமைக்கு பாராட்டு : வாழ்த்துக்கள்!

சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப்பேரவையின்

அம்பாறை மாவட்ட க்கிளை வாழ்த்து!

(காரைதீவு  நிருபர் சகா)


முன்னாள் அமைச்சர் .ஆர்.மன்சூருக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கிக்ளெரவித்த தென்கிழக்கு பல்கலைக்கழக நிரவாகத்திற்கு பாராட்டுக்கள். மாவட்டத்தின் இன ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும்    கல்விக்கும் தன்னை அர்ப்பணித்த முன்னாள் அமைச்சர் மன்சூருக்கு     வழங்கப்பட்ட   கௌரவம் பெருமையளிக்கின்றது.நாமும் மகிழ்வடைகின்றோம். அவருக்கு எமது வாழ்த்துக்கள்.
இவ்வாறு சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப்பேரவையின் அம்பாறை மாவட்டக்கிளையின் தலைவர் டாக்டர் எம்..எம்.ஜெமீல் பொதுச்செயலாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் வாழ்த்துச்செய்தியினை வெளியிட்டுள்ளனர் .
அவர்களது வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது:
'முன்னாள் அமைச்சர் .ஆர்.மன்சூர் குவைத் நாட்டுக்கான தூதுவராக பதவி வகித்த சுமார் இரண்டு வருட காலப் பகுதியில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பை செய்திருந்தார்.
குறிப்பாக இப்பல்கலைக் கழகத்தின் பௌதீக வள அபிவிருத்திக்காக குவைத் நிதியத்தின் மூலம் சுமார் 600 கோடி ரூபாவை அவர் நன்கொடையாக பெற்றுக் கொடுத்திருந்தார்.
இந்த பாரிய நிதியின் மூலமே தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான கட்டுமானப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு பல்கலைக்கழகமாக இன்று அது தலை நிமிர்ந்து காட்சியளிக்கிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர்- முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் தனது அரசியல் அதிகார பலத்தின் மூலம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை ஸ்தாபித்தார். அதனை பௌதீக வள ரீதியாக கட்டியெழுப்பிய பெருமை முன்னாள் அமைச்சர் மன்சூரையே சாரும்.
தனது குறுகிய கால தூதுவர் பதவிக் காலத்தில் அவர் மேற்கொண்ட இந்நடவடிக்கை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியதொரு விடயமாகும். அது எதிர்கால சந்ததியினருக்கு சரித்திரம் சொல்வதற்கு மாத்திரமன்றி பதவிகளை அலங்கரிக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் பாடம் கற்பதற்கும் சான்றாக அமையும் எனலாம்.
முன்னாள் அமைச்சர் மன்சூர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பின்னர் அமைச்சராகவும் பதவி வகித்த காலத்தில் கல்முனைத் தொகுதியில் அபிவிருத்திப் புரட்சியை செய்து காட்டினார். அவரது காலத்தில் இன மத பிரதேச வேறுபாடுகள் எதுவுமின்றி அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருந்தார். அவரது பதவிக் காலம் கல்முனைத் தொகுதியின் பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது.
தனது சுய அரசியல் இலாபங்களுக்காக அவர் இனவாதம் பேசவுமில்லை பிரதேச வாதம் பேசவுமில்லை. கல்முனைத் தொகுதியில் ஒரு தூய்மையான நேர்மையான அரசியலை அவர் செய்து காட்டியிருந்தார். அந்த உயர்ந்த மனிதரின் சேவைகளை நினைத்து கல்முனைத் தொகுதி மக்கள் இன்றும் ஏங்கித் தவிக்கின்றனர்.

இத்ததகைய ஒரு கனவான் அரசியல்வாதிக்கு கௌரவம் அளிப்பதன் மூலம் அவர் பெருமையடைவதை விட கல்முனைத் தொகுதியும் ஒட்டுமொத்த சமூகமுமே பெருமையுடன் மகிழ்ச்சியடைகிறது என்பதில் சந்தேகம் கிடையாது'





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top