கலப்புத் திருமணம் செய்த கவுசல்யா நீதிமன்றத்தில் ஆஜர்:

நீதிபதி முன்பு இரண்டரை மணி நேரம் ரகசிய வாக்குமூலம்

உடுமலையில் காதல் கணவர் சங்கர் கொலை செய்யப்பட்டது குறித்து பல்லடம் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு கவுசல்யா, நேற்று இரண்டரை மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.
கலப்புத் திருமணம் செய்த தம்பதியர் சங்கர் கவுசல்யா ஆகியோர் கடந்த 13-ம் திகதி, உடுமலை பஸ் நிலையப் பகுதியில் தாக்கப்பட்டதில், சங்கர் இறந்தார். படுகாயம் அடைந்த கவுசல்யா, கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் முன்பு ஆஜராகி கவுசல்யா ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
முன்னதாக, கோவை அரசு மருத் துவமனையில் இருந்து 108 அம்புலன்ஸ் மூலம், உடுமலை காவல் ஆய்வாளர் தவமணி தலைமையிலான பொலிஸார் கவுசல்யாவை அழைத்து வந்தனர். கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்துக்குள் பிற்பகல் 1.30 மணிக்கு ரகசிய வாக்குமூலம் அளிக்கத் தொடங்கினார். நீதிமன்ற வளாகத்தில் இருந்தோர் வெளியேற்றப்பட்டனர். ரகசிய வாக்குமூலம், மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. இரண்டரை மணி நேரம், சங்கர் கொலை சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றது. இதில், கவுசல்யாவுடன் கொலைச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியங்களும், நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், பல்லடம் நீதிமன்றத்தில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு கவுசல்யா அழைத்து செல்லப்பட்டார்.

கோவை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கும் கவுசல்யா உடல்நிலை தேறியிருப்பதாக மருத்துவமனை முதல்வர் எட்வின் ஜோ தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, "கொலை சம்பவத்தின்போது இவரது தலையில் ஏற்பட்ட பலத்த வெட்டுக் காயத்துக்கு 36 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அது இன்னும் பிரிக்கப்படவில்லை. தொடர்ந்து அவருக்கு தலை நரம்பியல் சிகிச்சை தேவைப்படுகிறது" என்றார்.
கோவை அரசு மருத்துவமனையில் இருந்து நேற்று காலை பல்லடம் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட கவுசல்யா.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top