எதிர்ப்பு நடவடிக்கைகளை வழிநடாத்தும் தலைவர்கள்
வெள்ளை வேன்களில் காணாமல்
ஆக்கச் செய்ததைப்போல் செயலாற்றுவது
தற்போதைய அரசின் கொள்கையல்ல

முஸ்லிம் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் ஜனாதிபதி


நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் என்பன காரணமாக கூட்டங்கள் நடாத்துவதற்கும் ஊர்வலங்களை மேற்கொள்வதற்கும் அனைவருக்கும் சுதந்திரம் உள்ளதாகவும் அதனை வழிநடாத்தும் தலைவர்கள் வெள்ளை வேன்களை அனுப்பி ஆட்களை காணாமல் செய்ததுபோன்று செய்வது தற்போதைய அரசின் கொள்கையல்ல என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
எவ்வாறான கோசங்களை முன்வைத்தபோதும் எதிர்வரும் 5 ஆண்டுகள் நிறைவடையும் வரை அரசாங்கத்தை மாற்றுவதற்கு எவராலும் முடியாதெனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தோல்வியடைந்த அரசியல் சக்திகள் மேலும் தோல்விகளைத் தழுவி அரசியலில் இருந்து ஒதுங்கும் விதமாக எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள் இந்நாட்டுக்குத் தேவையான சமூக, பொருளாதார மாற்றத்தை மேற்கொள்வதற்கு பாடுபடுவதாக குறிப்பிட்டார்.
இன்று 19  ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் பாலமுனை விளையாட்டரங்கில் இடம்பெற்ற 19வது முஸ்லிம் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் உரையாற்றியபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
அப்போதிருந்த ஆட்சியை மாற்றியமைப்பதற்காக இந்நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் பெரும்பான்மை மக்கள் மத்தியில் இருந்த தேவைக்காக 2015 ஜனவரி 08ஆம் திகதி பேரலையாக இந்நாட்டு மக்கள் தன்னைச் சுற்றி ஒன்று திரண்டதாக நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், புதியதோர் அரசாங்கம் புதியதொரு வேலைத்திட்டத்துடன் முன்னோக்கி அலைபாயும் மக்கள் கூட்டத்தினை எவராலும் பின்னோக்கி நகர்த்துவதற்கு முடியாதெனக் குறிப்பிட்டார்.
புதியதோர் அரசாங்கத்தை அமைப்பதற்கு தன்னிடம் அரசாங்கத்தை ஒப்படைக்குமாறு இன்று ஒருசிலர் தனது நெஞ்சில் அடித்துக்கொண்டு மேடைகளில் கூக்குரலிட்டபோதும் அவர்களின் செயற்பாடுகள்பற்றி இந்நாட்டு மக்கள் நன்கறிவார்கள் என குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், நெஞ்சில் அடித்துக்கொள்பவர்களுக்கு தான் பயப்படாததன் காரணமாகவே அப்போதிருந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறி புதியதோர் அரசாங்கத்தை அமைத்ததாகக் குறிப்பிட்டார்.
நாட்டில் இன்று காணப்படுவது நேற்று இன்று உருவான பிரச்சினைகள் அன்றி 10, 15 ஆண்டுகளாக காணப்பட்ட பிரச்சினைகள் ஆகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், இவ்வனைத்துப் பிரச்சினைகளுக்கும் குறுகிய காலத்திற்குள் தீர்வு காண முடியாதபோதும் ஒவ்வொன்றாக இப்பிரச்சினைகளை தீர்த்து மக்களுக்கு நியாயம் வழங்குவதற்கு அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மின்சாரம் தடைப்பட்டமை தொடர்பில் ஒருசிலர் அரசாங்கத்தை குறை கூறினாலும் இவை இவ்வாறு இடம்பெறுவதற்கு காரணம் 10, 15 வருடங்களாக அவை திருத்தங்களுக்கு உட்படுத்தப்படாமை என பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும்போது சர்வதேசத்திற்கு அடிபணிவதாகவும் அந்நாடுகளுடன் பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போது நாட்டைக் காட்டிக் கொடுப்பதாகவும் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியபோதும் எச்சந்தர்ப்பத்திலும் எவருக்கும் இந்நாட்டை அடிபணியச் செய்வதற்கு இடமளிக்கப் போவதில்லை என்பதுடன் ஒருபோதும் தாய் நாட்டை காட்டிக்கொடுக்க மாட்டேன் எனவும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம். அமைச்சர்களான சரத் பொன்சேகா, தயா கமகே, பிரதி அமைச்சர் அனோமா கமகே ஆகியோரும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் உள்ளிட்ட மாகாணத்தின் அரசியல் பிரதிநிதிகள், தூதுவர்கள், உள்நாட்டு வெளிநாட்டு அழைக்கப்பட்ட அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top