முஸ்லிம் காங்கிரஸ் தேசிய மாநாட்டின் வெற்றியும்

அதன் முக்கியஸ்தர்களின் உள்ளக் குமுறல்களும்!

-எம்.எல்.பைசால் காஷ்பி


பாலமுனை கிராமத்தில் கடந்த வாரம் நடைபெற்ற மு. கா கட்சியின் 19 வது தேசிய மாநாடு நிறைவடைந்துள்ள கையோடு அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் நீண்ட காலமாக தங்களது உள்ளங்களில் வைத்திருந்த கருத்து வேறுபாடுகளை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த மூன்று வாரங்களாக அதன் தலைவர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் அம்பாரையில் முகாமிட்டு மாநாட்டுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்தனர்.
இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.நீண்ட இடைவெளியின் பின் மக்கள் பிரதிநிதிகள் கட்சிக்காக பணிசெய்தனர்
கிராமங்களில் விழிப்புக் கருத்தரங்குகள் ஏற்படுத்தப்பட்டு முழு மாவட்டமும் ஆயத்த நிலையில் இருந்தது.
தலைவர் அம்பாரை மட்டுமல்ல நாட்டின் அநேகமான பிரதேசங்களுக்குச் சென்று மாநாட்டுக்கான ஆயத்தப் படுத்தல்களில் இறங்கியிருந்தார்.
இருப்பினும் மாநாட்டு ஏற்பாடுகளின் போது கட்சியின் குறிப்பிட்ட சில முக்கியஸ்தர்களின் பிரசன்னம் காணக் கிடைக்கவில்லை. இந்நிலை மாநாட்டின் பின்னர் வெளிப் படுத்தப் படலாம் என்பது நிரூபுணமாகியுள்ளது.
ஆங்காங்கே சிலர் மு. கா கட்சியினை விமர்சிப்பதர்க்கென்று Letter Head அமைப்புக்களின் மூலம் மாநாட்டினை பகிஸ்கரிக்குமாறு சமூக வலைத் தளங்களில் விட்ட அறிக்கைகள் பெரும்பாலும் கணக்கில் கொள்ளப் படவில்லை.
நாட்டின் தலைவர்களின் பங்கு பற்றுதலுடன் அக்கட்சிப் போராளிகளின் ஆதரவுடன் மாநாடு நிறைவடைந்தது.
இம்மாநாட்டின் சில நிகழ்வுகள் விமர்சிக்கப்படும் அதேவேளை மாநாடு நடைபெறுவதர்க்கு முன்பு முக்கியஸ்தர்களிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் சந்திக்கும் வந்துள்ளன.
தலைவரின் மாநாட்டு உரை, தீர்மானம் இல்லாத மாநாடு, தலைவருக்காக கூட்டப்பட்ட மாநாடு,சம்பந்தன் ஐயா அவர்களின் உரை,நாட்டின் தலைவர்கள் முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் பற்றி கருத்துத் தெரிவிக்காமை போன்ற விமர்சனங்களை சிலர் பேசிக் கொண்டிரிக்கின்றனர்.
இதற்கான பதிலுரைகள் மாநாட்டுக்குரியவர்களால் முன்வைக்கப் படுகின்றன.
இருப்பினும் மாநாட்டின் தீர்மானம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிப்பதை காதுகளில் ஒலிக்கக் கேட்கின்றது
நாட்டின் தலைவர்கள் இருக்கத் தக்கதாக திரண்டிரிந்த மக்கள் சமுத்திரத்தில் முஸ்லிங்களின் தனி அலகு,கரையோர மாவட்டம், சாய்ந்தமருது பிரதேச சபை, நுரைச்சோலை வீட்டுத் திட்டம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கலாம்”.
இக்கோரிக்கைகள் முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்காக தலைவர்களும் ஏதோ சொல்லி மாநாட்டினை நிறைவு செய்திருக்க வேண்டும் என்பதே விமர்சகர்களின் விருப்பமாகும்.
மறுநாள் முஸ்லிம்களுக்கு கிழக்கிஸ்தானை ஜனாதிபதியும், பிரதமரும் ரஊப் ஹகீமின் தலைமையில் தாரைவார்த்துக் கொடுத்து விட்டார்கள்என்று தூங்கிக் கிடக்கும் இனவாதிகளும், இணைந்த எதிர்கட்சிகளும் கோசமிட்டு அரச தலைவர்களை நிர்பந்தத்திற்குள்ளாக்கும் நிலை வரும்போதே இன்று விமர்சிப்பவர்கள் :ரஊப் ஹகீம் மக்களை காட்டிக் கொடுத்து, சரியான கோரிக்கையினை பிழையான சந்தர்பத்தில் முன்வைத்து அரசாங்கம் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டதை இவர் கெடுத்துவிட்டார்என்று விமர்சிப்பர். அவ்வாறான நிலை வரவேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். கடந்த கால வரலாறும் இதுவே.
அதற்காக பொதுவான தீர்மானங்கள் இன்றி கலைந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமலுள்ளது. சில வேளை பொதுச் செயலாளின் பொறுப்பில் கூட இருக்கலாம்.
மாநாடு தீர்மானங்களை நிறைவேற்றவில்லை என்பதர்க்காக முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை பக்குவமாகவும் அதேவேளை பொறுப்பாகவும் உரிய முறைப்படி பெற்றுக் கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளின் தலைமேல் சுமத்தப்பட்டுள்ளது என்பதை மறந்து செயற்ட முடியாது.
பாராளுமன்றம் அரசியலமைப்புப் பேரவையாக மாற்றப்பட்டுள்ள நிலையில் மக்கள் பிரதிநிதிகள் வாய் மூடி மௌனியாக இருந்து விட்டு தங்களது இயலாமையினை வெளிப்படுத்தும் போதே மக்கள் அவர்களுக்கு உரிய பதிலளிப்பர்.மு .கா கட்சி பிரதிநிதிகளுக்கு இந்த அரசாங்க காலம் பரீட்சைக்களம் என்பது நினைவில் இருக்கும்.
முக்கியஸ்தர்களால் அல்லது விமர்சகர்களால் முன்வைக்கப்படும் கருத்து வேறுபாடுகளை பின்வருமாறு நோக்கலாம்:
1. தலைவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரம் குறைக்கப்படல்.
2. பொதுச் செயலாளரின் பொறுப்புக்கள் மீள ஒப்படைக்கப்படல்.
3. கண்டி மாவட்டத்தினை சேர்ந்தவர் கிழக்கு முஸ்லிம்களுக்கு தலைமை தாங்க வேண்டிய அவசியம் ஏன்?
4. கிழக்கு வாழ் மக்களின் தேவைகளை நிறைவேற்ற முன் நிற்காமை
5. உயர்பீட உறுப்பினர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படாமை.
6. தேசிய பட்டியல் பாராளுமன்ற நியமனம் முக்கியஸ்தர்களுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு கைகூடாமை.
ரஊப் ஹகீம் அவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவர்களின் அரசில் பிரிந்தது முதல் மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள ஏதோ ஒரு காரணத்தினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கட்சியின் முக்கியஸ்தர்கள் படிப்படியாக பிளவுபட்டுச் சென்றனர்.
பேரியல் அஸ்ரப் அவர்கள் ஆரம்பித்த இப்பணி அதாஉள்ளாஹ் அவர்கள் மூலம் வலுப்பெற்று இன்று வரை தொடர்கின்றது.
பிரதேச வாதத்திற்கு அப்பால் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சியின் பிரதிநிதிகள், இன, குல, நிற, பிரதேச வேற்றுமைகளுக்கப்பால் சமத்துவத்தினை போதிக்கும் மார்கத்தினை பின்பற்றும் முக்கியஸ்தர்கள், சில மார்க்க அறிஞர்கள் கூட இஸ்லாம் அடியோடு வெறுத்த மடமைக்கால சிந்தனையினை அற்ப சொற்ப இலாபத்திற்காக மக்கள் சமூகத்தின் முன் பிரதேச, ஊர் வாதங்களைப் பேசி கேவலமான அரசியல் நடாத்துவதை ஏற்க முடியாதுள்ளது.
முஸ்லிம் இளைஞர்களின் உள்ளங்களில் பிரதேச வாத உணர்வினை வளர்த்து,முஸ்லிம் சமூக தலைவர்களை இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிக்கும் நிலை விதைக்கப்பட்டுள்ளது.
கௌரவ அமைச்சர் ரஊப் ஹகீம் அவர்களின் தலைமையினை ஏற்று அவரோருடன் இணைந்து கட்சிப் பணியாற்றிய கட்சியின் முக்கியஸ்தர்கள் அவரின் தலைமைத்துவத்தின் அதிகாரங்களை குறைக்கவேண்டும் என்றோ அல்லது கட்சி கூட்ட தீர்மானங்களின் பிரகாரம் நடைமுறைப்படுத்திய விடயங்கள் கூட்டங்களின் போது கலந்தாலோசிப்பதர்கு பதிலாக சந்திக்கு கொண்டு வந்ததையோ சகிக்க முடியவில்லை.
இன்று பகிரங்கமாக அறிகைகளை விடும் இவர்கள் இக்கட்சியினை கௌரவ அமைச்சர் ரஊப் ஹகீம் அவர்களுடன் தோளோடு தோள் நின்று அஷ்ரெப் அவர்களின் காலம் முதல் தியாகத்துடன் கட்சியினை பாதுகாத்து வளர்த்த, கட்சியின் மூத்த உறுப்பினர்களாகும்
முஸ்லிம் சமூகம் தங்களுக்கென தனித்துவமான அரசியல் கட்சி இன்றி அரசியல் பலத்தினை இழந்துள்ளதுஎன்று ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்தவர்கள் கருத்து வேறுபாடுகளால் குறிப்பிட்ட கால கட்டங்களில் பிரிவதும், சேர்வதும், வசை பாடுவதும் ஆரோக்கியம் அல்ல.
பிரிந்து சென்றவர்களை உள்வாங்க வேண்டியுள்ள நிலையில் முக்கியஸ்தர்கள் வெவ்வேறு திசைகளில் பயணிக்க எத்தனிப்பது அவர்கள் இது வரை காலமும் தொடர்ந்த அரசியலின் பெறுமானம் தான் என்ன?
தேசிய பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை கையாள்வதில்தான் இங்கு அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் விமர்சனங்களில் முதன்மையாகக் கொள்ள முடியும்.
பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்தது முதல் இன்று வரை இக்கட்சியின் தலைமை இதனை தீர்த்து வைப்பதில் சிக்கலை எதிர் கொன்டுதான் உள்ளது.பல முக்கியஸ்தர்கள் இதில் குறி வைத்திரிப்பதே இதை முடிவுக்கு கொண்டுவருவதில் உள்ள தாமதமாக இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய பலம் அதன் போராளிகளே.கட்சிக்கும் அதன் தலைமைக்கும் பிரச்சினைகள் வரும்போது களத்தில் நின்று குரல் கொடுத்து, தலைவனுடன் நேரடி தொடர்பினை பேணுகின்றார்கள். இக்கட்சியினை தலைவர் சிறப்பாக வழி நடாத்திச் செல்கின்றார் என உறுதியாக நம்புகின்றார்கள். நடைபெற்ற மாநாட்டின் வெற்றி கூட தலைவருக்கும் போராளிகளுக்குமிடையில் இருந்த உறவின் பலம் என்று சொன்னால் மிகையாகாது.
காலத்திற்கு காலம் கட்சியின் முக்கியஸ்தர்கள் கருத்து வேறுபாடுகளால் வெவ்வேறு திசைகளில் பயணிக்கும் நிலையில் சிலர் முக்கியஸ்தர்களின் கவர்ச்சியில் பிளவுபட்டுப் போனாலும் பெரும்பாலான போராளிகள் இக்கட்சியினை பாதுகாத்து வருகின்றனர்.
இக்கட்சியின் வீழ்ச்சி , உயர்ச்சி இரண்டிலும் எதிர்பார்புக்களின்றி களத்தில் போராடும் போராளிகள் வெறுமனே தேர்தல் காலங்களில் சொல்லப்படும் வார்த்தைகளை கேட்பதர்கு தயார் இல்லாத மனோ நிலையி்ல் உள்ளனர்.
அரங்கில் பேசப்பட்டவை முக்கியஸ்த்தர்களால் அம்பலப் படுத்தப்பட்டுள்ள நிலையில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படும் போது போராளிகள் பார்வையாளர்களாக கலந்து கொள்ளல் அவசிம்.
வெற்றியில் தாங்களும் பங்குதாரர்களாக இல்லாது தங்ளது உள்ளக் குமுறல்களை அறிக்கைகளாக வெளியிடுவதை மு. கா வின் போராளிகள் கட்சியின் எதிர் காலம் பற்றி மிகுந்த கவலைகளை வெளிப்படுத்துகின்றனர்.
சமூகத்தின் பொதுவான தேவைகளை முதன்மைப்படுத்தி செயலாற்றுவதன் மூலம் கட்சிக்கும், சமூகத்திற்கும் நல்ல பயன் கிடைக்கும்.
மீண்டு்ம் ஒரு தடவை இக்கட்சி பிளவு படக்கூடாது என்பது எல்லோரி்ன் விருப்பமாகும்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top