குழந்தை சரிவரப் பேசாமலிருக்கிறதா?
பிறந்தது முதல் பலவிதமான ஒலிகளைக் கேட்டு வளரும் குழந்தை, எளிதில் நன்கு பேச ஆரம்பிக்கிறது. இப்படி பலவிதமான ஒலிகளுக்கும் குழந்தை என்ன செய்கிறது என்பதும் நமக்குத் தெரியும். கூப்பிட்டக் குரலுக்கு குழந்தை திரும்பிப் பார்க்கவில்லையானால் காது கேட்கும் திறன் குறைவு அல்லது மூளை வளர்ச்சி குறைவு என்று எடுத்துக் கொண்டு அதற்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளைப் பெற வேண்டும்.
குழந்தை சரிவரப் பேசாமலிருப்பது அல்லது தாமதமாகப் பேச ஆரம்பிப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.
1. காது கேளாமை – ஒன்று அல்லது இரண்டு காதுகளும்
2. மூளை வளர்ச்சிக் குறை (Mental Retardation)
3. அன்னப் பிளவு (Cleft lip / Palate)
4. நாக்கு அடியில் ஒட்டி இருத்தல் (Tongue Tie)
5. குரல்வளைப் பிரச்னைகள்
6. ஆட்டிசம் (Autism)
போன்றவை ஒரு சில உதாரணங்கள் ஆகும். மருத்துவ பரிசோதனைகள் தேவை. முக்கியமாக இரண்டு உண்மை நிகழ்வுகளைக் கூறலாம்.
குழந்தைக்கு காது சரியாகக் கேட்கிறதா என்று பெற்றோர்களிடம் கேட்டால் டிவியில் பாட்டுப் போட்டால் நன்றாக டான்ஸ் ஆடுவான் என்று பதில் சொல்வார்கள்.
டிவியின் வண்ணக் காட்சிகளைக் கண்ணால் பார்க்கிறது குழந்தை. உணர்வுகள் தூண்டப்பட்டு டான்ஸ் ஆடுகிறது. பாட்டு காதில் கேட்டுத்தான் டான்ஸ் ஆடுகிறது என்று எடுத்துக் கொள்ள முடியாது. இந்த அடிப்படைக் கருத்தைப் புரிந்து கொள்ளாத பல பெற்றோர்கள் குழந்தையை தாமதமாக மருத்துவரிடம் அழைத்து வருகிறார்கள். காது சரிவரக் கேட்கவில்லை என்பது அவர்களுக்குப் புரிகிறது. இது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.
குழந்தையைக் கண்ணோடு கண் பார்த்து பேசி, சிரித்து, குழந்தையின் முக பாவங்களை சரிவர கவனித்தால், குழந்தைக்கு ஏதும் குறைபாடு இருந்தால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
0 comments:
Post a Comment