எகிப்திய எயார் லைன்ஸ் விமானம் கடத்தல் நாடகம்

முடிவுக்கு வந்தது! கடத்தியவரும் கைது!!

எகிப்து விமானத்தை கடத்தியவன் கைது செய்யப்பட்டுள்ளதாக சைப்ரஸ் வெளியுறவு அமைச்சு  தெரிவித்துள்ளது. இதனை அடுத்த பல மணிநேரமாக நடந்து வந்த கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது.
கடத்தல்காரன் பிடித்து வைத்திருந்த பிணைக் கைதிகள் பத்திரமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடத்தலின் நோக்கம், அவனைப்பற்றிய விபரங்கள் குறித்த உண்மையான தகவல்கள் விரைவில் வெளியாகும்.
முன்னதாக, எகிப்து நாட்டின் துறைமுக நகரமான அலெக்சாண்ட்ரியாவில் இருந்து தலைநகர் கெய்ரோ நோக்கி சென்ற விமானத்தை 50 வயது மதிக்க தக்க ஆண் ஒருவன் கடத்தினான்.
கடத்தப்பட்ட எகிப்து நாட்டுக்கு சொந்தமான MS181 தடம் எண் கொண்ட அந்த விமானத்தில் 55 பயணிகளும், விமானி உள்பட ஏழு பேரும் இருந்ததாக தெரியவந்தது.
அந்த விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள சைப்ரஸ் தீவில் உள்ள லர்னாகா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தை கடத்தியவன் தனது இடுப்பில் வெடிகுண்டுடன் கூடிய பெல்ட்டை கட்டியிருந்துள்ளான். இதனால் பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கவில்லை.
முன்னதாக அந்த விமானத்தில் இருந்து பெண்கள், குழந்தைகள் மட்டும் வெளியே செல்ல கடத்தல்காரன் அனுமதி அளித்தான். இதையடுத்து, சுமார் 40 பேர் வெளியேறினர். ஆனால் விமான ஊழியர்கள் மற்றும் சில பயணிகளை கடத்தல்காரன் பிடித்து வைத்திருந்தான்.

கடத்தல்காரன் தனக்கு சைப்ரஸ் தீவில் குடியேற அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், விமானத்தை தகர்த்து விடுவேன் என சைப்ரஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளான். சைப்ரஸ் நாட்டு பெண்ணான தனது முன்னாள் மனைவியை சந்தித்துப் பேச வேண்டும் எனவும் அந்த கடத்தல்காரன் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இதையடுத்து, அவன் போலீசாருக்கு அளித்த ஒரு கடிதத்தில் உள்ள முகவரியின் அடிப்படையில் அந்தப் பெண்ணை கண்டுபிடித்த போலீசார், அந்தப் பெண்ணை விமான நிலையத்துக்கு அழைத்து சென்றதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top