ஈராக் கால்பந்து
மைதானத்தில் தாக்குதல்
41 பேர் பலி 105 பேர் காயம்
Iராக்கில் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட கால்பந்தாட்ட மைதானத்தில் சிதறிக் கிடக்கும் நாற்காலிகள். (உள்படம்) தற்கொலைத் தாக்குதலை நிகழ்த்திய சயிஃபுல்லா அல்-அன்சாரி. |
ஈராக் கால்பந்து மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை
நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 41 பேர் உயிரிழந்தனர். 105 பேர்
காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) பயங்கரவாத
அமைப்பு பொறுப்பேற்றது.
இதுகுறித்து பொலிஸார் தெரிவித்துள்ளதாவது:
தலைநகர் பாக்தாதுக்கு 40 கி.மீ. தொலைவில் உள்ள இஸ்கந்தரியா
நகரையொட்டிய அல்-அஸ்ரியா கிராமத்தில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்துப் போட்டி
நடைபெற்றது.
அந்தப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு இஸ்கந்தரியா மேயர்
அகமது ஷகீர் பரிசு வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக ஏராளமான கால்பந்து
ரசிகர்கள் அந்த மைதானத்தில் குவிந்திருந்தனர்., விளையாட்டுத் துறை அதிகாரிகளும், பாதுகாப்புப் படையினரும் அங்கு இருந்தனர்.
அப்போது கூட்டத்துக்குள் புகுந்த குண்டுதாரி, தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிபொருளை
வெடிக்கச் செய்தார். இதில், 41 பேர் உயிரிழந்தனர். 105 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் மேயர் அகமது ஷகீர், அவரது பாதுகாவலர், மற்றும் 5 பாதுகாப்புப் படையினர் அடங்குவர்
என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இஸ்கந்தரியா பகுதியைச் சேர்ந்த ஷியா படையினரைக் குறி வைத்து
அந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் சமூக வலைதளங்களில்
தெரிவித்தனர்.
தாக்குதல் நிகழ்த்தியவரின் பெயர் சயிஃபுல்லா அல்-அன்ஸாரி
என்று குறிப்பிட்ட அந்த அமைப்பு, பதின்ம வயதுத் தோற்றம் கொண்ட அவரது படத்தையும் வெளியிட்டது. தற்கொலைத்
தாக்குதல் நிகழ்த்தப்பட்டபோது, அந்த மைதானத்தில் பெரும்பாலும் இளைஞர்களே இருந்ததாக சம்பவத்தை நேரில்
பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
சன்னி பிரிவினரும்,
ஷியா பிரிவினரும் சம
எண்ணிக்கையில் வசிக்கும் இஸ்கந்தரியா, இன ரீதியிலான வன்முறைகள் அதிகம் நடைபெற்று வந்த
பகுதியாகும்.
ஐ.எஸ்.
பயங்கரவாதிகள் கடந்த 2014-ஆம் ஆண்டு ஈராக்கில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியபோது,
இந்தப் பகுதியிலிருந்து
அவர்களை விரட்டுவதற்குதான் ஈராக் அரசு முன்னுரிமை அளித்தது. சிரியாவிலும், ஈராக்கிலும் தங்கள் கட்டுப்பாட்டிலிருந்த நிலப்பரப்புகளை இழந்து வரும் ஐ.எஸ்.
பயங்கரவாத அமைப்பு, பொது இடங்களில்
தற்கொலைத் தாக்குதல்களை நிகழ்த்துவதை அண்மைக் காலமாக தீவிரப்படுத்தி வருவதாகக்
கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment