காணாமல் போன சைக்கிளும்
முஹம்மது அலி எடுத்த முடிவும்
முஹம்மது அலி ஒரு புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரராக உருவெடுப் பதற்கு உந்துசக்தியாக இருந்ததே அவர் பிரியமாக வைத்திருந்த சைக்கிள்தான். 12-வது வயதில் அவர் ஆசையாக வைத்திருந்த சைக்கிள் திருட்டு போனது. இதனால் கோபமடைந்த முஹம்மது அலி, அந்த சைக்கிள் திருடன் தன் கையில் கிடைத்தால் அவன் முகத் தில் ஓங்கிக் குத்துவேன் என்று போலீஸ்காரரிடம் கூறினார். தான் உறுதியான உடல்கட்டையும், குத்துச் சண்டையையும் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் என்று அப்போது அவர் முடிவெடுத்தார்.
அந்த வழக்கை விசாரித்த ஜோ மார்ட்டின் என்ற பொலிஸ்காரரிடம் தன் எண்ணத்தைக் கூற, அவர் முஹம்மது அலிக்கு பயிற்சி கொடுத் தார். அப்போது அவரது உடல் எடை 89 பவுண்டுகள் மட்டுமே. ஆனால் சில காலம் கழித்து குத்துச்சண்டை களத்தில் பீமனாய் நின்றபோது அவரது எடை 210 பவுண்டுகள் உயரம் 6.3 அடிகள்.
முஹம்மது அலி புகழ்பெறுவதற்கு முன்பு கறுப்பர் என்பதால் சில ஓட்டல்களுக்குள் அவரை அனுமதிக்கவில்லை. இதனால் பல சமயங்களில் முஹம்மது அலி காரில் காத்திருக்க, அவரது பயிற்சியாளர் மார்ட்டின், ஓட்டலில் இருந்து உணவை வாங்கிவந்து கொடுப்பார். ஆனால் அவர் தங்கப் பதக்கம் வாங்கிய பிறகு நிலைமை மாறியது. முன்னர் அவரை அனுமதிக்காத ஓட்டல்களே பின்னர் அவருக்கு பாராட்டு விழாக்களை நடத்தின.
1967-ம் ஆண்டு வியட்நாமுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய போரின்போது ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற முஹம்மது அலிக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டது. ஆனால் முஹம்மது அலி இதை ஏற்க மறுத்தார். இதனால் 1964-ல் இவர் பெற்ற ஹெவிவெயிட் சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டது. 1970-ம் ஆண்டுவரை குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொள்ள அவருக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இதற்கெல்லாம் கலங்காத முஹம்மது அலி, இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஆர்வம் காட்டினார். 1971-ம் ஆண்டு முஹம்மது அலி மீண்டும் குத்துச்சண்டைப் போட்டிகளில் பங்கேற்கலாம் என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து மீண்டும் அவர் குத்துச்சண்டை களத்தில் குதித்தார்.
0 comments:
Post a Comment