குத்துச்சண்டை என்றாலே நினைவுக்கு வருபவர்
ரசிகர்கள் மனத்தில் நிற்கும் மகத்தான வீரர்

முஹம்மது அலி! ஒரு பார்வை!!



அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரரான முஹம்மது அலியின் மரணம், விளையாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
1980-களில் முஹம்மது அலிக்கு பார்கின்சன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. (பார்கின்சன் என்பது மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி அதன்மூலம் மனிதனின் இயக்கத்தை முடக்கக்கூடிய ஒருவிதமான வாத நோயாகும்.) அந்த நோயின் பாதிப்பால் முஹம்மது அலிக்கு சுவாசக் கோளாறு பிரச்னை ஏற்பட்டு இன்று காலமாகியுள்ளார். பீனிக்ஸில் உள்ள பேரோ நியூராலஜிக்கல் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த மருத்துவர் ஆப்ரஹாம் லீபெர்மேன்தான், முஹம்மது அலிக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
74 வயதான  முஹம்மது அலி சமீபத்திய ஆண்டுகளில் பல முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹெவிவெயிட் பிரிவில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றவரான முஹம்மது அலி, குத்துச்சண்டை போட்டியில் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தபோது எதிராளிகளை தனது அபாரமான குத்துகளால் சாய்த்தார். அதற்கு அவருக்கு கூடுதல் ஆற்றல் தேவைப்பட்டது. அதன் காரணமாகவே அவர் பார்கின்சன் நோயின் பாதிப்புக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
1999-ல் ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் பத்திரிகை "நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர்' என்ற பட்டத்தை அளித்தது. அதேபோல் பிபிசி தொலைக்காட்சியும் அவருக்கு சிறப்பு விருது வழங்கி கெளரவித்தது. 2005-ல் அவருக்கு ஜனாதிபதி பிரஜைக்கான விருதை அப்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் வழங்கி கெளரவித்தார்.
1960-ம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முஹம்மது அலி, அதே ஆண்டில் தொழில்முறைக் குத்துச்சண்டை வீரராக உருவெடுத்தார். பின்னர், களமிறங்கிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிக் காற்று முஹம்மது அலி பக்கமே வீசியது.
தொடர்ந்து 4 ஆண்டுகளாக 19 குத்துச்சண்டை போட்டிகளில் வெற்றிபெற்ற முஹம்மது அலிக்கு 20-வது போட்டி, உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியாக அமைந்தது.
அந்தப் போட்டியில் அவருக்கு எதிராக அப்போதைய உலக ஹெவிவெயிட் சாம்பியனான சோனி லிஸ்டன் களமிறங்கினார். அன்றைய காலகட்டத்தில் உலகின் மிக ஆபத்தான வீரராக அறியப்பட்ட சோனி லிஸ்டனை 22 வயதே ஆன முஹம்மது அலி 1964-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் திகதி எதிர்கொண்டார். இப்போட்டியின் 7-வது சுற்றில் "டெக்னிக்கல் நாக்-அவுட்' முறையில் வெற்றி பெற்ற  முஹம்மது அலி, உலக சாம்பியன் ஷிப் பட்டம் வென்றார்.
இதன் பின்னர், 1965-ம் ஆண்டு மே மாதம் 25-ம் திகதி நடைபெற்ற மறு போட்டியிலும், முதல் ரவுண்டிலேயே ஒரே குத்தில் சோனி லிஸ்டனை முஹம்மது அலி நாக்-அவுட் செய்தார்.
குத்துச்சண்டை என்றாலே நினைவுக்கு வருபவர் முஹம்மது அலி. அமெரிக்காவில் 1942-ம் ஆண்டு ஜனவரி 17-ம் திகதி பிறந்த அவரது இயற்பெயர் காசியஸ் மார்செல்லஸ் கிளே ஜூனியர். அவருக்கு "தி கிரேட்டஸ்ட்', "தி சாம்ப்', "தி லூயிஸ்வில்லி லிப்' என்ற செல்லப் பெயர்களும் உண்டு.
1964-ல் இஸ்லாமிய தேசம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டபோது அதில் தன்னை இணைத்துக்கொண்டு தனது பெயரை முஹம்மது அலி என மாற்றிக்கொண்டார். பின்னர் 1975-ல் இஸ்லாம் மதம் மாறினார்.
இஸ்லாம் மதத்துக்கு மாறியதாலும், வியட்நாம் போருக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும் அமெரிக்க ராணுவத்தில் சேர அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பண மோசடி காரணமாக கைது செய்யப்பட்டபோது குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதுடன், அவரது குத்துச்சண்டை பட்டமும் பறிக்கப்பட்டது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று தனக்கென தனி முத்திரையை பதிவு செய்துகொண்டவர். பரமவைரிகளான ஜோ ஃபிரேஸியர், ஜார்ஜ் ஃபோர்மன் ஆகியோரை வீழ்த்தி உலக ஹெவிவெயிட் பட்டத்தை பெற்றவர்.
அவர் பங்கேற்ற சர்வதேச போட்டிகள் 61. அதில் 56 போட்டிகளில் பட்டம் வென்றார். அதில் 37 முடிவுகள் நாக்-அவுட் (எதிரி மீண்டும் போட்டியிடமுடியாத அளவுக்கு தாக்கி நிலைகுலையச் செய்வது) முறையிலும், 19 முடிவுகள் நடுவரின் தீர்ப்பு வாயிலாகவும் அவருக்கு பட்டம் வழங்கப்பட்டது. 5 முறை மட்டுமே போட்டிகளில் தோல்வியுற்றார்.
அமெச்சூர் போட்டிகள் மூலம் 100 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பெற்றுள்ளார்.
1960ல் ரோமில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் லைட் ஹெவிவெயிட் பிரிவில் தங்கம் வென்றார். வெள்ளை-கறுப்பர் பாகுபாடு காரணமாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கப் பதக்கத்தை ஓஹியோ ஆற்றில் வீசியதாக அவர் மீது சர்ச்சை எழுந்தது.
1960-63 வரை குத்துச்சண்டை போட்டி அவருக்கு பொற்காலமாக இருந்தது. பங்கேற்ற 19 போட்டிகளில் அனைத்திலும் பட்டம் வென்றார். பல முன்னணி வீரர்கள் அப்போது அவரிடம் தோல்வியைத் தழுவினர். அதற்கு பிறகு தொடர்ச்சியாக பல முன்னணி வீரர்களை தோற்கடித்து குத்துச்சண்டை போட்டியின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார்.

அவருக்குப் பிறகு அவருடைய மகள் லைலா அலி குத்துச்சண்டையில் கால்பதித்து அவருடைய புகழை நிலைநாட்டினார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top