முஸ்லிம்கள் நிம்மதியாக வாழும் சூழலை
அரசு ஏற்படுத்த வேண்டும்

கூட்டு எதிர்க்கட்சி செய்தியாளர் மாநாட்டில் அஸ்வர்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.க்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவிரோத செயல்களை முடக்குமாறு ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் சொன்னோம் என்று அறிக்கை விடுகிறார்களே தவிர, அதனை செயல் வடிவில் காட்டுகின்றோம் என்று யாரும் சொன்னதில்லை என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபரும் முன்னாள் முஸ்லிம் கலாசார ராஜாங்க அமைச்சருமான .எச்.எம். அஸ்வர் கூறினார்.
கொழும்பு என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளுடைய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
நல்லாட்சி என்று சொல்லக் கூடிய இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவருக்கும் இப்பொழுது மூச்சு திணறுகின்ற நிலையில் அங்கலாய்க்கின்றனர். பத்திரிகையில் வரும் செய்திகளைப் பார்த்தால் மிகவும் பகிடியாகவிருக்கின்றது. அவர்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவிரோத செயல்களை முடக்குமாறு ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் சொன்னோம் என்று அறிக்கை விடுகிறார்களே தவிர அதனை செயல் வடிவில் காட்டுகின்றோம் என்று இங்கு யாரும் சொன்னதில்லை.
அன்று எதிர்க்கட்சி செய்த பணியை இவர்கள் செய்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்க்கின்றார்கள். முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து ஜனாதிபதி பிரதமரைச் சந்திக்கும்படிதான் நாங்கள் சொல்கின்றோம். ஆனால் அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடந்தது ஒரு வினோதமான காட்சி. ஏனென்றால், முஸ்லிம்கள் மீது வசை மாறி பொழிகின்ற தேரரை, சமுதாயமும் நாடும் இனங் கண்டுள்ள அந்த முக்கிய தேரரை, சமரச பேச்சுக்காக அழைத்திருப்பது ஒரு வேடிக்கையாக இருக்கின்றது.
நேற்றைய நவமணியைப் பத்திரிகையைத் தூக்கிப்பிடித்துக் காட்டி ஊடகங்களுக்கு பேசிய அஸ்வர், முஸ்லிம்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று இந்த அரசாங்கத்திலே முக்கியமாக அங்கம் வகிக்கின்ற அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறுகின்றார். இதிலிருந்து எவ்வளவு தூரத்துக்கு விஷயம் மோசமாகியுள்ளது என்பதை மக்கள் உணரக் கூடியதாகவிருக்கின்றது. மேலும் முஸ்லிம் அமைச்சர்களும் இது குறித்து நடவடிக்கை எடுங்கள் என்று தினமும் பேசி வருவதை ஊடகங்கள் மூலம் நாம் காண்கின்றோம். இதைப் பார்க்கும் போது முஸ்லிம்களுடைய முகங்கள் சுழித்துவிட்டன.
பிரதம அமைச்சர் இன விரோத செயல்களுக்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி வருகின்ற சந்தர்ப்பத்தில்,இன்று நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக 60 சம்பவங்கள் நடைபெற்றுள்ளமை பற்றிய தகவல்களை நாங்கள் திரட்டி வைத்திருக்கின்றோம். எனவே இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முஸ்லிம்களின் மனநிம்மதியாக வாழ்வதற்கேற்ற சூழ்நிலையை இந்த அரசாங்கம் நிச்சயம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

எதிர்க்கட்சியினர் செய்கின்ற பணியை அரசாங்கத்தில் உள்ளவர்கள் செய்ய முற்பட்டால் அது ஊடக களியாட்டமாக முடியுமே தவிர, உண்மையான பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top