இந்தோனேசியாவில் மாயமான பொலிஸ் விமானம்
கடலில் விழுந்து மூழ்கி விபத்துக்குள்ளானது
இந்தோனேசியாவில் மாயமான பொலிஸ் விமானம் கடலில் விழுந்து மூழ்கி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாயினர்.
இந்தோனேசியாவில் நேற்று முன்தினம் பங்கா தீவுக்கு உட்பட்ட பங்கல் பினாங்கில் இருந்து ரியு தீவுக்கு உட்பட்ட படாமுக்கு சிறிய ரக பொலிஸ் விமானம் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
அந்த ‘எம்.28 ஸ்கை ட்ரக்’ விமானத்தில் மொத்தம் 15 பேர் பயணம் செய்ததாகவும், அந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து விட்டதாகவும், அந்த விமானத்தை தேடும் பணி நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.ஆனால் அந்த விமானத்தில் 8 பொலிஸாரும், 5 சிப்பந்திகளும் பயணம் செய்ததாக இப்போது தெரிய வந்துள்ளது. அந்த விமானம், கடலில் 24 மீட்டர் ஆழத்தில் விழுந்து மூழ்கி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் கூறுகின்றன.
இதுபற்றி இந்தோனேசியாவின் தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமையின் தலைவர் ஹென்றி பாம்பாங் சோய்லிஸ்ட்யோ நேற்று கூறுகையில், ‘‘விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை விபத்து நடந்த இடத்தில் உள்ள கிராமவாசிகள் கண்டுள்ளனர். அங்கிருந்து தான் ஒரு இருக்கையும், பொலிஸ் ஆவணங்கள், ஒரு செல்போன் உள்ளிட்டவற்றுடனான ஒரு பையும் முதலில் கண்டெடுக்கப்பட்டன’’ என குறிப்பிட்டுள்ளார்.
கடலில் இருந்து பொலிஸ் சீருடைகள் மற்றும் பிற உடைகள் மீட்கப்பட்டதை டி.வி. சேனல்கள் காட்டின. மேலும், இந்தோனேசியா கடற்படை, கடல் பொலிஸ் படையினர் 518 சதுர கி.மீ. பரப்பளவில் விபத்துக்குள்ளான விமானத்தின் சிதைவுகளை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரு சிங்கப்பூர் விமானமும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
0 comments:
Post a Comment