சர்வதேச நாடுகளில் உள்ள முஸ்லிம் மக்கள் தொகையை பற்றி
Ipsos Mori என்ற நிறுவனம் செய்துள்ள ஆய்வு
சர்வதேச நாடுகளை ஒப்பிடுகையில் பிரான்ஸ் நாட்டில் அதிகளவில் இஸ்லாமிய மக்கள் வசித்து வருகிறார்கள் என்ற எண்ணம் அந்நாட்டு மக்களிடம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சர்வதேச நாடுகளில் உள்ள இஸ்லாமிய மக்கள் தொகையை பற்றி Ipsos Mori என்ற நிறுவனம் அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
அதாவது, ஒவ்வொரு நாடுகளில் உள்ள இஸ்லாமியர்களின் எண்ணிக்கை தொடர்பான சரியான தகவல்கள் அந்நாடுகளின் குடிமக்களிடம் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் இஸ்லாமிய மக்களின் உண்மையான எண்ணிக்கையை விட அதிகளவில் தங்களது நாட்டில் உள்ளதாக பிரான்ஸ் குடிமக்கள் எண்ணி வருவது தெரியவந்துள்ளது.
அதாவது, கடந்த 2010-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 31 சதவிகிதத்தினர் இஸ்லாமியர்கள் என கணக்கிடப்பட்டது. ஆனால், இதே ஆண்டில் அந்நாட்டில் இருந்த இஸ்லாமிய மக்கள் தொகையின் உண்மையான எண்ணிக்கை 7.5 சதவிகிதமாகும்.
அதே போல், எதிர்வரும்
2020-ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்கள் தொகையின் எண்ணிக்கை 40 சதவிகிதமாக அதிகரிக்கும் என தவறாக கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு எதிர்மறையாக 2020-ம் ஆண்டில் பிரான்ஸில் இஸ்லாமிய மக்கள் தொகையின் எண்ணிக்கை 8.3 சதவிகிதம் மட்டுமே அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலரும் இஸ்லாமியத்தை பற்றி ஆய்வு செய்து வரும் Raphael Liogier என்பவர் பேசியபோது, ‘இஸ்லாமிய மக்கள் தொகை பற்றி இதுபோன்ற தவறான தகவல்கள் பரவி வருவதால் பிரான்ஸில் உள்ள இஸ்லாமியர்கள் மீது குடிமக்களுக்கு அதிருப்தி ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் எதிர்காலத்தில் இஸ்லாமியர்களுக்கு புகலிடம் அளிப்பதில் சிக்கல் ஏற்படும்’ என அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், இத்தாலி, ஜேர்மனி, பெல்ஜியம், அமெரிக்கா, ரஷ்யா, கனடா இந்தியா உள்ளிட்ட நாடுகளும் தங்களது நாட்டில் உண்மைக்கு எதிராக அதிகளவில் இஸ்லாமியர்கள் வசித்து வருவதாக எண்ணி வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment