தாருஸ்ஸலாம் மர்மம் :

நூல் வெளிவந்த பின்னர் நூலுக்கு எதிராகக் கருத்துக்கூற வந்த

சிலரின் பதில்கள் மேலும் சந்தேகத்தை அதிகரிப்பதாகவே உள்ளன.

-.பீர் முகம்மது-


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஹக்கீம் ஹசனலி ஆகியோருக்கிடையிலான முரண்பாடு இணக்கத்திற்கு வந்தும் வராமலும் உள்ளநிலையில் 'தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்' என்ற தலைப்பிலான ஒரு நூல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
நீண்டகால வரலாற்றைக் கொண்ட அரசியல் கட்சிகளுக்கே மாடிகளைக் கொண்ட தலைமைக் கட்டிடம் தலைநகர் கொழும்பில் இல்லாதிருந்தவேளையில் தலைவர் அஷ்ரப் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பொதுமக்களினதும் தனவந்தர்களினதும் ஒத்துழைப்போடு இல 53இவொக்ஷால் லேன்இ கொழும்பு -2 இல் ஏழு தட்டுகளைக் கொண்ட ஸ்ரீ..மு.காவின் தலைமையகத்தைக் கட்டித் திறந்து வைத்தார்.
தாருஸ்ஸலாம் (சாந்தி இல்லம் ) என்ற இத்தலைமையகத்தின் உரிமை, பரிபாலனம் , வருமானம் என்பது தொடர்பில் இப்போது கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
தலைவர் அஷ்ரபின் மறைவுக்குப் பின்னரான பதினாறு வருட காலத்தில் தாருஸ்ஸலாம்பற்றி பல கேள்விகள் அடிக்கடி கேட்கப்பட்டே வந்துள்ளன. எனினும் திருப்தியான பதில் வழங்கப்பட்டதாக அறிய முடியவில்லை.
இதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது 'தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்' என்ற தலைப்பில் நூல் வெளிவந்து கட்சிப் போராளிகளையும் ஆதரவாளர்களையும் முக்கிய உறுப்பினர்களையும் ஏன் முஸ்லிம் சமூகத்தையே உசுப்பிவிட்டுள்ளது. இந்த நூலை 'தாருஸ்ஸலாம் மீட்பு முன்னணி' என்ற அமைப்பு வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
'பூமியில் இருந்து மறைந்தாலும் நம் இதயத்தில் இருந்து வாழும் நமது தலைவர் தந்த நமது தாருஸ்ஸலாம் நமக்கே உரியது. தாறுமாறாய் மாறாட்டம் செய்யும் எந்த எஜமானருக்குமானது அல்ல' என்ற கோசத்தோடு வெளிவந்துள்ள இந்நூல் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள்  சமூகப் பிரமுகர்கள்  முக்கியஸ்தர்கள் எனப் பலருக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. தபால்மூலமும் அனுப்பப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பத்திரிகைகளும் இணையங்களும் சமூக வலைத்தளங்களும் இந்நூல்பற்றிய செய்திகளை வெளியிட்டு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி வருகின்றன.
கட்சியை செழுமைப்படுத்தி வளர்க்கும் நோக்கத்தில் தலைவர் அஷ்ரப் லோட்டஸ் என்னும் நம்பிக்கை நிதியத்தை உருவாக்கினார். தாருஸ்ஸலாம் அமைந்துள்ள கட்டடமும் காணியும், அதனை அண்டியுள்ள இன்னுமொரு காணித்துண்டு, தலைவர் வாழ்ந்த கல்முனை அம்மன் கோவிலடி வீடு, ஒலுவில் வீடும் சுற்றியுள்ள காணியும், ஆலிமுட கண்டம் மற்றும் சில இடங்களிலுள்ள பதினொரு ஏக்கர் நெற்காணி, ஆறு பிரபல கம்பனிகளில் உள்ள 8000 இற்கு மேற்பட்ட பங்குகள் என்பன இந்நிதியத்தின் சொத்துக்களாக உள்வாங்கப்பட்டிருந்தன. அஷ்ரப் உட்பட 14 பேர் கொண்ட பணிப்பாளர் சபையொன்றும் நியமிக்கப்பட்டது.
மேலும் தலைவர் அஷ்ரப், ஸ்ரான்லி ஜெயராஜ், வசந்த டீ தேவகெதர ஆகிய மூவரையும் ஸ்தாபகப் பணிப்பாளர்களாகக் கொண்டு 15.11.1988 இல் யூனிட்டி பில்டேஸ் தனியார் கம்பனி உருவாக்கப்பட்டிருந்தது. தாருஸ்ஸலாம் மற்றும் சொத்துக்களின் பராமரிப்பு, வருமான சேகரிப்பு, அதன் முகாமைத்துவம் என்பவற்றை இக்கம்பனியே கவனித்து வந்தது. தலைவரின் மறைவின் பின்னர் இக்கம்பனி ஹாபிஸ் நசீரின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததாகச் சொல்லப்படுகின்றது.
தாருஸ்ஸலாம்  லோட்டஸ் நம்பிக்கை நிதியம்யூ னிட்டி பில்டேஸ் தனியார் கம்பனி என்பன தொடர்பில் ஏதோவொரு மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலொன்று முன்னெடுக்கப்படுகின்றது என்று கட்சியின் முக்கியஸ்தர்களும் உயர்பீட உறுப்பினர்கள் சிலரும் சந்தேகம் கொண்டிருந்தாலும் வெளிப்படையாகக் கேள்விகளை எழுப்ப எவரும் முன்வரவில்லை. பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற பிரச்சினை இருந்தது.
இந்த நிலையில்தான் கட்சியின் பிரதி தவிசாளரும் ஹக்கீம் சார்பு உயர்பீட உறுப்பினருமான நயிமுல்லா தலைமையில் 12 உயர்பீட உறுப்பினர்கள் கையொப்பமிட்டு செயலாளர் நாயகத்துக்கு 15.10.2015 இல் கடிதம் எழுதி தாருஸ்ஸலாம்பற்றி விளக்கம் கேட்டனர். கையொப்பமிட்டவர்களில் மூன்றுபேர் தலைவரின் நம்பிக்கைக்குரியவர்கள் என்பதுடன் அவர்களில் ஒருவர் தலைவரின் உறவினரும் ஆவார்.
கடிதத்தைப் பெற்றுக் கொண்ட செயலாளர் நாயகம் ஹசனலி இதுபற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்று உண்மையைப் போட்டு உடைத்தார். அனைத்தும் தலைவருக்கே தெரியும் என்றும் கூறினார். உயர்பீட உறுப்பினர்களின் சந்தேகம் மேலும் வலுத்தது.
நிலைமை பாரதூரமாகிப் போகாமல் இருப்பதற்காக உச்சபீடக் கூட்டத்தில் தலைவர் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் ஆகியோரால் விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தலைவரோடு முரண்பாட்டில் இருந்த கட்சியின் தவிசாளர் பசீர் சேகு தாவூத் உயர்பீடக் கூட்ட விளக்கம் தனக்குத் திருப்தி தரவில்லையென்று கூறி தாருஸ்ஸலாம் பற்றிய பன்னிரெண்டு கேள்விகளை உள்ளடக்கி 03.06.2016 இல் தலைவருக்குக் கடிதமொன்றை எழுதினார். தனது கேள்விகளுக்குத் திருப்திகரமான பதில் கிடைக்காவிட்டால் மக்கள் முன் விடயத்தைக் கொண்டு செல்வேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். பதில் கிடைக்காததால் ஒருமாத காலத்தின் பின்னர் பத்திரிகைகளின் ஊடாக தவிசாளர் விடயத்தை வெளியே கொண்டு வந்தார்.
இதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது 'தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்' என்ற பெயரில் நூல் வெளிவந்துள்ளது. ஹக்கீம், எம்.எச்.எம். சல்மான், ஹாபிஸ் நசீர் ஆகியோர்மீது நூலின் உள்ளடக்கம் விரல் நீட்டுவதாகவே தோன்றுகின்றது.
'தலைவர் ஹக்கீம் 29.01.2015 இல் கம்பனிப் பணிப்பாளராக நியமனம் பெறுகிறார். சரியாக ஒரு வாரத்தின் பின் 06.02.2015 இல் ஹாபிஸ் நசீர் தலைவரின் ஆசீர்வாதத்தோடு முதலமைச்சர் நியமனம் பெறுகிறார். இங்கே பண்டமாற்று வியாபாரம் நடைபெற்றுள்ளதா' ? என்ற சந்தேகத்தை நூல் விதைக்கின்றது.
'தாருஸ்ஸலாம் கட்டிடத்தை தலைவரும் முதலமைச்சரும் கபளீகரம் செய்வதாகக் கதைகட்டி விடுகிறார்கள். இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை புத்தகமாக வெளியிட்டவர்களும் இந்தக் கட்சிக்குள்தான் இருக்கிறார்கள்' என்று புத்தளத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் றவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளமையும் இதன் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் உள்ளன என்று முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் தெரிவித்துள்மையும் இந்நூல்பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன. எனினும் இந்நூலை வெளியிட்டவர் யார் என்று நூலில் குறிப்பெதுவும் இல்லை.
தாருஸ்ஸலாம் பிரச்சினை இப்போது மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளது. மர்மங்கள் துலங்குமா? தொடருமா ? என்பதுதான் எல்லோர் மனத்திலும் எழும் கேள்வியாகும்.
நூல் வெளிவந்த பின்னர் நூலுக்கு எதிராகக் கருத்துக்கூற வந்த சிலரின் பதில்கள் மேலும் சந்தேகத்தை அதிகரிப்பதாகவே உள்ளன.
இந்த நூலின் பின்னணியில் பசீர் சேகு தாவூத் உள்ளார் என்றும் கட்சிக்குத் தெரியாமல் அமைச்சர் பதவி பெற்ற இவருக்கு தாருஸ்ஸலாம்பற்றிக் கேள்வி கேட்க அருகதை இல்லை என்றும் கூறுகின்றார்கள். நூலில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இதுவா பதில்?
கட்சிக்குத் தெரியாமல் அமைச்சர் பதவி பெற்றார் என்று வாதத்திற்காக வைத்துக் கொண்டால்கூட இவருக்கு தாருஸ்ஸலாம்பற்றிக் கேள்வி கேட்க அருகதை இல்லை என்று யார் சொன்னது? இவருக்கு இனி கேள்வி கேட்கும் எந்த உரிமையும் கிடையாது என்று எந்த உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள்?
திருமதி பேரியல் அஷ்ரப் 2000 - 2001 வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்தார். தலைவரின் மரணத்தின் பின்னர் தலைமைப்பதவி தானாகவே அவரிடம் வந்து சேரும் என்பது நம்பிக்கை நிதியத்தில் சொல்லப்பட்ட விதி. இது தெரிந்துதான் அவரைக் கட்சியில் இருந்து துரத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோ என்று பொதுமகன் ஒருவனின் மனதில் கேள்வி எழுவது நியாயம்தானே ?
பேரியல் அஷ்ரப் இல்லையென்றால் நம்பிக்கை நிதியத்தின் தலைமைப்பதவி அமான் அஷ்ரபிற்கு வந்து சேரும் என்பது நிதியத்தின் விதிமுறையாகும். தலைவர் மரணித்து பதினேழு வருடங்கள் கடந்து விட்டன. இத்தனை வருடத்தில் ஒரு நாளாவது அமான் அஷ்ரப் தானாகவே கட்சியில் சேரவேண்டுமென்று யோசிக்கவில்லையா ? அல்லது அவர் கட்சியில் சேர்வதை யாராவது தடுத்தார்களா ? என்ற கேள்விகளை ஒருபுறம் வைத்துவிட்டு கட்சிக்குள் இருந்து இத்தனை வசதிகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவராவது அவரைக் கட்சிக்குள் உள்வாங்குவோம் என்று முயற்சிக்காமல் விட்டது ஏன் ? எத்தனையோ தடவைகள் முயற்சித்தபோதிலும் அமான் அஷ்ரப் கட்சியின் பக்கம் தலைவைத்தும் படுக்கமாட்டேன் என்று சொல்லி விட்டார் என்று எங்களை ஏமாற்ற வெளிக்கிடாதீர்கள் என்று கட்சிப் போராளி சொன்னால் உங்களின் பதில் என்ன? இந்தக் கேள்வியை பசீர் சேகு தாவூத்திடம் போய் கேளுங்கள் என்பதுதான் பதிலாகி விடுமோ ?
பெருமளவு ஆவணங்களின் புகைப்படப் பிரதிகள் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் பொய் சொல்லுமா ? இவைபற்றி என்ன சொல்லப் போகின்றார்கள்.?
இப்படி மர்மம் நிறைந்த பல விடயங்களுக்குப் பதில் சொல்லாமல் தப்பிக் கொள்ள அவர்களுக்கு எவ்வளவோ வழிகள் இருக்கும்.
நீதிமன்றத்தில் இந்நூல்பற்றியோ இந்நூலுடன் தொடர்புபட்டவர்கள் என்று கருதப்படுபர்களுக்கெதிராகவோ வழக்கொன்றைத் தாக்கல் செய்வதன்மூலம் இந்நூல்பற்றிய கதையாடல் தொடராமல் இருக்க ஏதாவது வழி கண்டுபிடிப்பார்களா ? அல்லது 'பொதுமக்களே நம்பி விடாதீர்கள் இவைகளெல்லாம் போலியான குற்றச்சாட்டுகள் அதனால்தான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளோம்' என்று மக்களை நம்ப வைக்க முயற்சிப்பார்களா?
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியிருக்கின்றது.

தோணியில் கால் வைத்து ஏறத் தெரிந்தவனுக்கு ஏணியில் கால் வைத்து இறங்கத் தெரியாமலா போகும்?

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top