மர்ஹும் கே. அபூபக்கர் சாகிப் மறைந்து இரு வருடங்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது------------------------


சமூக எழுச்சிக்கு பின்னணியிலிருந்து

பங்களிப்பு செய்தவர் அபூபக்கர் சாஹிப்



நான் தினகரனில் பணிபுரியும் போது ஆலமுல் இஸ்லாம் பகுதிக்கு பொறுப்பாக இருந்தேன். அப்பகுதியில் சமூகத்துக்கு சிந்தனையூட்டும்நல்லதைச் சொல்கின்றேன்”  என்ற தலைப்பில் ஒரு பத்தி வாரா வாரம் எழுதிவந்தேன். ஒரு முறை களுத்துறைக்கு விஜயம் செய்த ஒரு முஸ்லிம் பெரியாரை வரவேற்பதற்கு ஹெலிகொப்டரில் மலர் தூவப்பட்ட நிகழ்வை  விமர்சித்து எழுதிய குறிப்புக்காக நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்வதற்கு சட்டத்தரணி ஒருவர் முன்னறிவித்தலொன்றை அனுப்பியிருந்தார்.
இத்தகவல் வெளியானதும் கொழும்பிலுள்ள பள்ளிவாசல்களில் ஒரு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டிருந்தது. நல்லதைச் சொல்வதற்கு 10 இலட்சம் ரூபா நஷ் ஈடா? என்ற தலைப்பிலே அந்த துண்டுப்பிரசுரம் அமைந்திருந்தது.
 பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய துண்டு பிரசுரம் எனது கரத்திற்கும் ஜும் தொழுகையின் பின் பகிரப்பட்ட போது கிடைத்தது. எனக்கு எதிராக வழக்கா? என அசைந்து போயிருந்த எனக்கு இந்த துண்டுபிரசுரம் ஆறுதலையளித்தது.
சமூக சீர்திருத்தத்திற்காக மற்றும் சமூகத்தில் நடைபெறுகின்ற தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தியதற்காக 1980 மற்றும் 90 தசாப்தங்கள் இவ்வாறான துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு சமூகத்தை அறிவூட்டும் மர்ஹும் கே. அபூபக்கர் சாகிப்தான் இத்துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டார் என்பதை பல மாதங்களுக்குப் பின் நான் அறிந்துகொண்டேன். துண்டுப்பிரசுரத்தின் தாக்கமோ என்னமோ என்மீதும் பத்திரிகை மீதும் வழக்கு தொடரப்படவில்லை.
நான் மேலே குறிப்பிட்ட மர்ஹும் அபூபக்கர் சாகிப் இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தின்  சிந்தனை மாற்றத்திற்காக பெரும் பங்களிப்பு செய்த பெரியாராவார். அவர் இறைவனடி எய்தி இரு வருடங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் அவர் செய்த நிறைந்த சேவைகள் ஒரு சிலவற்றை நினைவு கூருவதில் இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாகும்.
அபூபக்கர் சாகிப் தமிழ் நாட்டில் தேங்காய் பட்டணத்தில் பிறந்தவராவார். வர்த்தக நோக்கமாக இலங்கைக்கு வந்த அவர் ஆரம்ப காலத்தில்நூர் டெக்ஸ்என்ற சிறுவர் ஆடைத்தொழிற்சாலையை நடாத்தி வந்தார் இந்த சிறுவர் ஆடைகளை விற்பனை செய்வதற்காக நாட்டில் நாலா புறங்களுக்கும்  செல்லும் போது அவர் சமூகத்தின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக இஸ்லாமிய நூல்களை எடுத்துச் சென்று இலவசமாக பகிர்ந்தளித்துள்ளதாக  இலங்கை ஜமா அத்தே இஸ்லாமிய முன்னாள் தலைவர் செய்யித் முஹம்மத் தெரிவித்தார்.
தலைநகரில் இரு பிரதான உணவகங்களை நடத்தி வந்தார். அவை வெறும் உணவகங்களாக மட்டுமன்றி சமூகத்தினர் கூடும் மையங்களாக  இருந்து வந்தன. புறக்கோட்டையிலிருந்த யூசுபியா ஹோட்டலும் ஹல்ஸ்டொப்பிலிருந்த இக்பால் ஹோட்டலும் அக்காலத்தில் மிகப் பிரபலமான ஹோட்டல்களாகும்.
கொழும்பு சட்டக்கல்லூரி அருகிலிருந்த இக்பால் ஹோட்டல் அக்காலத்தில் சட்டக் கல்லூரியில் படிக்கும் வசதி குறைந்த முஸ்லிம் மாணவர்களுக்கு கைகொடுக்கும் ஒரு ஹோட்டலாகவே இருந்தது. இன்றுள்ள முன்னணி சட்டத்தரணிகள் பலரும் இந்த ஹோட்டலில் அனுசரணையைப் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் சட்டக்கல்லூரி மாணவராக இருக்கும் போது இந்த உணவகங்களை நாடி வந்துள்ளார். நாட்டில் பிரபலங்கள் ஒன்றிணைந்த இந்த உணவகங்களில் சமூகத்தின் எதிர்காலம் தொடர்பாக பல விடயங்கள் கலந்துரையாடல்கள் நடைபெற்றது மட்டுமன்றி அவற்றின் ஆரம்பமும் இங்கிருந்தே உருவாகினஇலங்கையில் பிரபல சன்மார்க்க இயக்கங்களில் ஒன்றான ஜமாஅத்தே இஸ்லாமி ஆரம்ப கால அங்கத்தவர்களில் ஒருவராக இருந்த அபூபக்கர் சாகிப், அதன் அபார வளர்ச்சியில் முக்கிய பங்காளராக திகழ்ந்தார். ஜமாஅத் நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளிலிருந்து வரும் முக்கியஸ்தர்களை நாட்டில் நாலாபக்கங்களுக்கும் அழைத்துசெல்லும் பொறுப்பை இவரே ஏற்றிருந்தார்.
அவர்களுக்குரிய வாகன மற்றும் உணவு, தங்குமிட வசதி இவரே ஏற்றுக்கொண்டிருந்தார். புனித நோன்புக்காலங்களில் தலைநகரில் நடைபெற்ற பல்வேறு இப்தார் நிகழ்வுகளுக்கும் இவரது உணவகங்களிலிருந்தே சிற்றுண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டமை பற்றி இன்றும் பலர் நினைவு கூருகிறார்கள்.
முஸ்லிம்களுக்காக பலமான ஊடகமொன்றை உருவாக்குவதற்காக நிறைந்த பங்களிப்புச் செய்தவர் அபூபக்கர் சாகிப் எனக் குறிப்பிடலாம் நவமணி, வார இதழாக வெளிவருமுன் வெளிவந்த எழுச்சிக்குரல் பத்திரிகை உருவாகுவதற்கு இவரும் காரண கர்த்தாவாக இருந்தார். முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் தேசிய தினசரிகள் வெளிவரவேண்டும் என அவர் கனவு கண்டார். அவரது கனவு நிறைவு பெற முன் அவர் இறைவனடி எய்தார்.
வாசிப்பில் தீவிர அக்கறையுடைய இவர், பல்லாயிரம் நூல்களை வாசித்துள்ளார். அவரது வீட்டில் ஒரு நூலகமே இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஈரான் இஸ்லாமியப்புரட்சி தீவிர ஆதரவாளராக இருந்துள்ளார். கடும் நோய்வாய்ப்பட்டிருந்த போது இவரை ஈரானுக்கு அழைத்து சிகிச்சை அளித்தமை குறிப்பிடத்தக்கது.
 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற முஸ்லிம்களுக்காக முதலாவது அரசியற் கட்சி உருவாவதற்கு பின்னணியிலிருந்து நிறைந்த பங்களிப்பை செய்தவராக அபூபக்கர் சாகிப் திகழ்ந்தார்.
இதனை இளைய தலைமுறையினர் எத்தனைபேர் அறிவாரோ? தர்ம சிந்தனை மிக்க தாராளமாக எவருக்கும் உதவும் இவர் கடைசி வரை கூலி வீட்டிலே வாழ்ந்து வந்தார். தன் நலனைப்றறி சிந்திக்காது தாம் சம்பாதித்ததை எல்லாம் வாரி வாரி மகிழ்ந்த ஒரு பெரியாரே இவர்.
ஹெம்மாத்தகம மடுல்போவையில் பிரபலமான குடும்பத்தைச்சேர்ந்த மர்ஹும் யூசுப் ஆலிம் மகளை (முன்னாள் ஜமாஅத்தே இஸ்லாமி அமீர் செய்யித் முஹம்மது) சகோதரியை வாழ்க்கைத்துணைவியாக கொண்டு இரு பெண்பிள்ளைகளுக்கும் ஒரு பெறா மகனுக்கும் தந்தையானார்இவரது திருமணமும் ஒரு புரட்சிகரமானது. அக்காலத்தில் ஐவருடன் மணமகனாகச் சென்றுள்ளார். இவர் 2015 ஜனவரி 21 ஆம் திகதி தனது 80 ஆவது வயதில் வத்தளையிலுள்ள தனது இல்லத்தில் இறைவனடி எய்தினார். அன்னாரது பாவங்களை மன்னிக்க ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க பிரார்த்திப்போமாக!
- என்.எம்.அமீன்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top