சுவர்கள் எழுப்ப இது தருணமல்ல:
ட்ரம்ப் மீது ஈரான் ஜனாதிபதி கடும் விமர்சனம்
நாடுகளிடையே சுவர்கள் எழுப்ப இது சரியான தருணமல்ல என்று ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் புதிய அகதிகள் கொள்கை மீது விமர்சனம் செய்துள்ளார்.
தெஹ்ரானில் இது குறித்து ரூஹானி கூறியதாவது:
பெர்லின் சுவர் பல ஆண்டுகளுக்கு முன்பு வீழ்த்தப்பட்டதை அவர்கள் மறந்து விட்டனர். நாடுகளுக்கிடையே சுவர்களை எழுப்பும் நேரம் இதுவல்ல, சுவர்கள் இருந்தால் அவற்றை அகற்றும் காலமாகும் இது.
உலக நாடுகளுடன் அணு ஒப்பந்தம் மேற்கொண்ட பிறகு ஈரான் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கதவுகளை திறந்துள்ளது. இந்நிலையில் ட்ரம்பின் விசா தடை உத்தரவு வரவேற்கத்தக்கதல்ல.என்று கூறியுள்ளார் ஜனாதிபதி ரூஹானி.
அமெரிக்காவில்
10 லட்சத்துக்கும் அதிகமான ஈரானியர்கள் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் ட்ரம்பின் விசா தடை உத்தரவினால் பல குடும்பங்கள் ஈரானிலும் அமெரிக்காவிலும் கவலையடைந்துள்ளன.
விசா தடையை எதிர்த்து ஈரானின் புகழ்பெற்ற நடிகை தாரானே அலிதூஸ்தி ட்வீட் செய்த போது, “ஈரானியர்களுக்கு ட்ரம்பின் விசா தடை நிறவெறித்தனமானது. இந்தத் தடை உத்தரவுக்கு பண்பாட்டு நிகழ்வுகள் விதிவிலக்காக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடுத்த மாதம் அங்கு நடைபெறும் அகாடமி விருதுகளை நான் புறக்கணிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
90 நாட்களுக்கு 7 நாடுகளிலிருந்து வருகையாளர்கள், குடியேற்றம் பெறுவோர் ஆகியோருக்கு விசா இல்லை என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்குள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் நுழைய வேண்டுமெனில் பல்வேறு விரிவான சொந்தத் தகவல்களை அளித்த பிறகே சாத்தியம்.
ஜனாதிபதி ட்ரம்பின் திடீர் அதிரடி நடவடிக்கை குறித்து ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெஹ்ரானில் சிலரை கருத்து கேட்ட போது, “அமெரிக்கர்களில் பெரும்பாலானோர் குடியேறிகளே. இதில் சில நாடுகளை மட்டும் பொறுக்கி எடுத்து அவர்களை பயங்கரவாதிகள் என்று கூறுவது அறிவுடைமையாகத் தெரியவில்லை” என்று ஈரான் குடிமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
27 வயது சிமா என்பவர் கூறும்போது, “இது பயங்கரவாதம் குறித்து அல்ல. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் சுமுக உறவுகள் இல்லை. அமெரிக்கா சவூதி அரேபியாவுடன் நல்லுறவு பேணி வருகிறது, ஆகவே சவூதியிலிருந்து எவ்வளவு பயங்கரவாதிகள் வந்தாலும் அமெரிக்காவுக்கு கவலையில்லை” என்று சாடினார்.
0 comments:
Post a Comment