கல்முனை கல்வி அபிவிருத்தி

பிரதி அமைச்சர் ஹரிஸ் அவர்களின் மேலான கவனத்திற்கு

சாய்ந்தமருது ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட அவசர தீர்மானத்திற்கு அமைய சாய்ந்தமருது கல்வி அபிவிருத்தி சம்மந்தமான குழு கூட்டம்  கடந்த 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (2017/01/29) பிரதி அமைச்சர் எச்.எம்.எம்..ஹரிஸ் அவர்களின் தலைமையில்  சாய்ந்தமருது பள்ளிவாசல் மேல் மாடியில் நடைபெற்றது.
எதிர்வரும் பெப்ரவரி 13-19 வரையிலான ஒரு வார காலத்தில் சாய்ந்தமருது கோட்டத்திற்கான விசேட கல்வி வாரமாக பிரகடனம் செய்யப்பட்டு அவ் வாரத்தில் பல்வேறுபட்ட கல்வி அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது.
உண்மையாகவே  பிரதி அமைச்சர் எச்.எம்.எம்..ஹரிஸ் அவர்கள் மாணவர்களின் கவி முன்னேறம் குறித்த இந்த சிந்தனை வரவேற்கத்தக்கது மாத்திரமல்லாமல் பாராட்டத்தக்கதுமாகும்.
சாய்ந்தமருது கல்வி அபிவிருத்திக்கு குறிப்பாக கல்முனை, சாய்ந்தமருது பிரதேச மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பிரதான இடம் வகிக்க வேண்டியது ஸாஹிறாக் கல்லூரியின் நடவடிக்கைகளும் கல்வி போதனைகளும் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
இதுமாத்திரமல்லாமல்  இப்பிரதேச (கல்முனை, சாய்ந்தமருது) மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழிகாட்டுவதுடன் அதனை நிர்வகிப்பதிலும் பிரதான பங்கு வகிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் அதிகாரிகளிடமும்  இருந்து கொண்டிருக்கிறது.
கல்முனை வலயக் கல்வி அலுவலகம், கல்முனை ஸாஹிறாக் கல்லூரி இவைகளின் நிர்வாகம் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்..ஹரிஸ் அவர்கள் கட்சி நலனை அப்பால் வைத்துவிட்டு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தம் ஒன்றை பிரதான நோக்காகக் கொண்டு நடுநிலையாக சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டும் என மக்களால் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
தற்போது கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் நிர்வாகம் கல்முனைப் பிரதேசத்திலுள்ள சகல ஊர்களையும் பிரதிநிதித்துவப் படுத்தாமல் மருதமுனையைச் சேர்ந்த கல்வி அதிகாரிகளைக் கொண்டு செயல்படுவதை எம்மால் அவதானிக்க முடியும்.
1.   எம்.எஸ்.ஏ.ஜலீல்   வலயக் கல்விப்பணிப்பாளர் (மருதமுனை)
2.   எஸ்.எல்.ஏ றஹீம் பிரதிக் கல்விப்பணிப்பாளர் (மருதமுனை)
3.   எம்.வை.அறபாத்   பிரதிக் கல்விப்பணிப்பாளர் (மருதமுனை)
4.   எஸ்.எம்.உமர் மெளலானா பிரதிக் கல்விப்பணிப்பாளர் (மருதமுனை)
5.   திருமதி ஜிஹானா ஆலிப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் (மருதமுனை)
6.    றிஸ்வி ஜவஹர்ஷா கணக்காளர் (மருதமுனை)
7.   ஏ.எல்.சக்காப் கல்முனை கோட்டக்கல்வி அதிகாரி (மருதமுனை)
இவ்வாறு ஒரு ஊரைச் சேர்ந்த பலர் கல்வி சம்மந்தமான முடிவுகளை நிறைவேற்றும் அதிகாரிகளாக ஒரு அலுவலத்தில் கூட்டாகச் செயல்படும் போது முடிவுகள் எவ்வாறு ஒரு கை ஓசையாக அமைந்து செயல்படுத்தப்படும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இதேவேளை சாய்ந்தமருதைச் சேர்ந்த ஒரு இளம் கல்வி அதிகாரி களுவாஞ்சிக்குடியில்  கடமை செய்கின்றார் என்பதையும் இங்கு குறிப்பிட்டுக் காட்டுகின்றார்கள்.
இது போன்று கல்முனை ஸாஹிறாக் கல்லூரிக்கு இதுவரையும் ஒரு நிரந்தர அதிபர் நியமிக்கப்படாமல் தற்காலிகமாக மருதமுனையைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதும் குறைந்த எண்ணிக்கையான கல்முனை, சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் இங்கு கல்வி போதிப்பதும் சிந்திக்கப்படவேண்டிய விடய்மாகும்.
மருதமுனையைச் சேர்ந்த கல்விச் சிந்தனையுள்ள சகோதரர்களுக்கு இருக்கும் சிந்தனை கல்முனை, சாய்ந்தமருது சகோதரர்களுக்கு இல்லாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும். இதற்கு ஒரு உதாரணத்தை குறிப்பிட்டுக்காட்ட முடியும்.
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் பிரதி அதிபராக இருந்த கல்முனையைச் சேர்ந்த றிபா ஹுஸைன் அவர்கள் மருதமுனை மத்திய கல்லூரிக்கு இடமாற்றம்  செய்யப்பட்டிருந்தார். அந்த கல்லூரியில் அதிபர் வெற்றிடம் ஏற்பட்ட போது  தகுதியும் தரத்துடனும் இருந்த கல்முனையைச் சேர்ந்த றிபா ஹுஸைன் நியமிக்கப்படல் வேண்டும். ஆனால் அந்த ஊரில் உள்ள கல்விச் சமூகம் அதற்கு இடமளிக்காமல் அந்த ஊரைச் சேர்ந்த ஒருவரையே அதிபராக நியமித்திருக்கிறது.
இது குறித்தும் கல்முனை, சாய்ந்தமருது கல்விச்சமூகம் சிந்திக்க வேண்டும். தற்போதய கால கட்டத்தில் கல்முனை ஸாஹிறாக் கல்லூரிக்கு அதிபராக நியமிக்கப்படவேண்டியவர் கல்முனை அல்லது சாய்ந்தமருதைச் சேர்ந்த ஒருவராக இருக்க வேண்டும். அப்போதுதான் பெற்றார்களுக்கு பதில் சொல்ல வேண்டியவராக அந்த அதிபர் இருப்பதுடன்  இப்பிரதேச மாணவர்களின் கல்வி முன்னேறத்திலும் அதிக அக்கறையும் காட்டி செயல்படுவார்.
தற்போதய  சூழ்நிலையில் கல்முனை ஸாஹிறாக் கல்லூரிக்கு அதிபராக இருப்பவர் கல்முனை அல்லது சாய்ந்தமருதில் பிறந்தவராக இருக்க வேண்டும் அல்லது  அந்த பாடசாலையின் பழைய மாணவராக இருக்க வேண்டும் அல்லது தனது பிள்ளைகள் அங்கு கல்வி கற்பவர்களாக இருந்து கொண்டிருக்க வேண்டும் என்ற நிலை இருக்கும் போதுதான் கல்லூரியுலும் இப்பிரதேச மாணவர்களினதும் அக்கறை காட்டி நிச்சயமாகச் செயல்படமுடியும் என்ற கருத்து தெரிவிக்கப்படுகின்றது.
இது மாத்திரமல்லாமல் தற்போதய தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருக்கும் அதிபர் கல்வி அலுவலகத்தில் முரண்பாடுகளை வளர்த்துக்கொண்டிருப்பதால் இதன் மூலம் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களின் வருடாந்த சம்பள உயர்வு போன்ற நலன்கள் பாதிக்கப்படுவதாகவும்   கவலை வெளியிடப்படுகின்றது
கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களின் நிலை மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கமாக மாகாணக் கல்வித்திணைக்களத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் அண்மையில் இக்கல்லூரிக்கு விஜயம் செய்த போது மாணவர்களின் பிரச்சினைகள் பற்றி ஆராயும் அந்த இடத்தில் அதிபர் பங்கு கொள்ளாமல் உதவி அதிபர் ஒருவரை  அந்த அதிகாரியிடம் அனுப்பி விட்டு அதிபர் தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கல்லூரி மாணவர்களின் கல்வி முன்னேற்றம் பற்றி கண்டறியும் இக்  கூட்டத்தில் கல்லூரி அதிபர் பங்குபற்றி மாணவர்களுக்குள்ள இடர்பாடுகள் பற்றி மாணவர்கள் உயர் அதிகாரியிடம் கூறும் விடயங்களை தான் அறிந்து கொள்ளாமல் ஒரு உதவி அதிபரை அவ்விடத்திற்கு அனுப்பிவிட்டு காரியாலயத்தில் அமர்ந்திருப்பது எந்த வகையில் இவர் மாணவர்களின் கல்வியி அக்கறை காட்டுகின்றார் என்ற கேள்வி இது தொடர்பாக எழுப்பப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இதுமாத்திரமல்லாமல் இப்பிரதேசத்தில் அதிபர்கள், ஆசிரியர்கள் அவர்களின் தரத்திற்கு ஏற்ப இடமளிக்கப்படவில்லை என்ற கருத்தும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அதிபர் சேவையை சேர்ந்த ஏ.எம்.சாதீக் என்பவர் மருதமுனை அக்பர் கிராமத்தில் ஒரு ஆசிரியர் சேவையில் உள்ளவரின் கீழ் கடமையாற்றுவதாகவும் இலங்கை அதிபர் சேவையை சேர்ந்த திருமதி கபூர் என்பவர் இஸ்லாமாபாத் பாடசாலை ஒன்றில் இவ்வாறு ஆசிரியர் சேவையில் உள்ளவரின் கீழ் கடமையாற்றுவதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

இப்படியான சில பிரச்சினைகாளுக்கு தீர்வுகளைக் காண்பதன் மூலம் இப்பிரதேசத்தில் பின்னடைந்துவரும் கல்விக்கு ஊக்கம் கொடுக்க முடியும் என இப்பிரதேச கல்வி சிந்தனையாளர்கள் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top