வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
நிவாரணத்தினை பெற்றுக் கொடுக்குமாறு கோரி

அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட மூன்று அமைச்சர்களுக்கு கடிதம்!

வடக்கு கிழக்கில் வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தினை பெற்றுக் கொடுக்குமாறு வலியுருத்தி புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ் அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதம் மூன்று அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரயதர்ஷன யாப்பா, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் முகாமைத்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கே அனுப்பி வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த 17 ஆம் திகதியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காலநிலை காரணமாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வீழ்ச்சி கண்டுள்ளதால் விவசாய நிலங்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளதுடன், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய வறட்சி தொடர்பாக விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமொன்று கடந்த 13ஆம் திகதி நடத்தப்பட்டது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவிலும் இதுவரை சுமார் 68 ஆயிரம் ஏக்கர் விவசாய காணி அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் 13,164 விவசாயிகளும், நீர்ப்பற்றாக்குறை காரணமாக 76,199 பொது மக்களும் பாதிப்படைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள இம்மக்களுக்கான நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க தங்களது அமைச்சுக்களினால் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top