கல்முனை மற்றும் சம்மாந்துறை பகுதிக்கான

அபிவிருத்திகளை துரிதப்படுத்தும் கலந்துரையாடல்

கல்முனை மற்றும் சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான திட்டமிடல் பணிகளை துரிதப்படுத்துமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இன்று 23 ஆம் திகதி திங்கட்கிழமை அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சரின் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தின்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கல்முனை மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பான திட்டமிடலை மேற்கொள்வதற்காக நகர திட்டமிடல் அமைச்சுக்கு 2017ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கல்முனை மற்றும் சம்மாந்துறை ஒருங்கிணைந்த பெருநகர அபிவிருத்தி தொடர்பான கருத்திட்டங்களை மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சிடம் ஒப்படைப்பதற்கு இக்கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.
இந்த அபிவிருத்தி திட்டங்களை ஆராய்வதற்கு அரசாங்க அதிபர் அல்லது அவரது பிரதிநிதி, உள்ளுராட்சி உதவி ஆணையாளர், சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
கல்முனை மற்றும் சம்மாந்துறை பாரிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டத்துக்குள் உள்ளடங்கும் முக்கியமான அணைக்கட்டு பாதையை செப்பனிட்டு நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் ஏற்கனவே அங்கீகாரமளிக்கப்பட்ட மாவடிப்பள்ளி - துறைநீலாவணை வரையான வீதியை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஒரு வழிப்பாதையாக அமைக்கப்படும் இவ்வீதி கரைவாகு வட்டை, இறைவெளி கண்டம் ஊடாக நற்பிட்டிமுனை தமிழ் பகுதியை ஊடறுத்து துரைவேந்திர மேடு ஊடாக பெரிய நீலாவணையை வந்தடையும்.
அபிவிருத்தி திட்டம் உள்ளடங்கும் பிரதேசத்தில் புகையிர பாதை அமைக்கப்படும் பட்சத்தில், அதனையும் கருத்திற்கொண்டு அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அபிவிருத்தி திட்டத்துக்காக 800 ஏக்கர் பரப்பளவிலான காணிகளை சுவீகரிக்கவேண்டியுள்ளது. இதன் முதற்கட்டமாக 200 ஏக்கர் காணிகளை தற்போது சுவீகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த காணி சுவீகரிப்பின்போது ஏற்படும் பிரச்சினைகளை கையாள்வதற்காக கமநல சேவை அதிகாரிகள், உள்ளுராட்சி உதவி ஆணையாளர், பிரதேச செயலளார்கள், நில அளவியல் திணைக்கள அதிகாரிகள் உள்ளடங்கிய அதிகாரிகள் குழுவொன்றை அமைப்பதற்கும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் பெரிய நீலாவணை தொடக்கம் காரைதீவு வரையான கடற்கரை வீதியை செப்பனிடுவதற்கும், கடற்கரை பிரதேசத்தில் பீச் பார்க் அமைப்பதற்கும் ஆலோசனை முன்வைக்கப்பட்டது. தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி திட்டத்துக்கு 45 மில்லியன் ரூபா செலவில் 500 மீற்றர் வரை கருங்கல் சல்லடை வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதன் எஞ்சியுள்ள வேலைகளை இயன்றவரை துரிதமாக பூர்த்திசெய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், காணி மீள்நிரப்பு அபிவிருத்தி கூட்டுத்தாபன அதிகாரிகள் உள்ளடங்கி குழுவொன்று குறித்த பிரதேசங்களில் ஒரு வாரத்துக்குள் விஜயம் செய்து நிலைமையை நேரில் பார்வையிட்டு அறிக்கையொன்றை தயாரிக்குமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இக்கூட்டத்தில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் எம்..எம். மன்சூர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கே.எம். அப்துல் றஸாக் (ஜவாத்), .எல்.எம். மாஹிர், கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் நிஸாம் காரியப்பர், கல்முனை மாநகர முன்னாள் உறுப்பினர்களான எம்.எஸ். உமர் அலி, .எல்.எம். முஸ்தபா, முஹம்மத் பிர்தௌஸ்,அமைச்சரின் இணைப்புச்செயலாளரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர், மு.கா. அம்பாறை மாவட்ட பொருளாளர் .சி. யஹியாகான், அமைச்சின் செயலாளர் என்.டி. ஹெட்டியாராச்சி, மேலதிக செயலாளர் எம். முயினுத்தீன், மேல் மாகாண, பெருநகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் காணி மீள்நிரப்பு அபிவிருத்தி கூட்டுத்தாபன அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.





0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top