பிரித்தானியரால் தேசத்துரோகிகளாக அறிவிக்கப்பட்ட

ஏழு முஸ்லிம்கள் சுதந்திர வீரர்களாக பிரகடனப்படுத்துக!

ஜனாதிபதியிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை



பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக செயற்பட்ட காரணத்தினால் 1804ஆம் ஆண்டு தேசத்துரோகிகளாக அறிவிக்கப்பட்ட 7 முஸ்லிம்களையும், நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய முஸ்லிம் தலைவர்கள் என வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்துமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எஎம்.ஹிஸ்புல்லாஹ் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக ஊவா, வெல்லஸ்ஸ பகுதிகளில் கிளர்ச்சி செய்த சிங்கள தலைவர்கள் 19 பேர் 1818 ஆம் ஆண்டு தேசத்துரோகிகளாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில், புத்தசாசன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாசவின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவர்களுக்கு எதிரான பிரகடனம் ரத்து செய்யப்பட்டு போர்வீரர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், தேசத்துரோகிகளாக பிரித்தானிய ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ள 7 முஸ்லிம்களையும் தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்துமாறு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
பிரித்தானிய ஆளுகைக்கு உட்பட்டிருந்த இலங்கை திருநாட்டை அவர்களிடமிருந்து விடுவிப்பதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் கிளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால், பிரித்தானியரால் பல சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் தேசத் துரோகிளாக பிரகடனம் செய்யப்பட்டனர்.
1815 பிரித்தானியர் கண்டி இராச்சியத்தை கைப்பற்றி முழுநாட்டையும் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தமைக்கு எதிராக ஊவா, வெல்லஸ்ஸ மற்றும் வலப்பன பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சிகளுக்கு காரணமாக இருந்த 19 சிங்கள தலைவர்களும் தேசத்துரோகிகளாக 1818 ஜனவரி 10 ஆம் திகதி பிரகடனம் செய்யப்பட்டனர்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி என்ற அடிப்படையில் அந்த பிரகடனத்தை வர்த்தமானி அறிவித்தல் மூலம் அதிகாரபூர்மாக நீக்கி இரத்துச் செய்திருந்தீர்கள்.
இதே போன்று, பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக பல முஸ்லிம் தலைவர்களும் கிளர்ச்சி செய்து தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில், 1804 ஜுன் மாதம் 4ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு முஸ்லிம்களும், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று முஸ்லிம்களும் தேசத்துரோகிகளாக பிரகடம் செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மீரா ஒசன் அவ்வக்கர் (ராய்மூனை), ஒசன் லெப்பை உதுமா லெப்பை (ராய்முனை), அவ்வக்கர் ஈஸா முகாந்திரம் (சம்மாந்துறை), அனீஸ் லெப்பை (மருதமுனை) ஆகியோரும், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சேகு தீதி (தோப்பூர்), சலம்பதி உடையார் (குச்சவெளி), பீர் முகம்மது ஆகியோரும் இவ்வாறு தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் சுயாதீனத்தன்மையை பாதுகாப்பதற்காக பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக செயற்பட்ட குறித்த 7 முஸ்லிம் தலைவர்களுக்கும் எதிராக தேசத்துரோகிகள் என முன்வைக்கப்பட்டுள்ள பிரகடனத்தை வர்த்தமானி மூலமாக அதிகாரபூர்மாக இரத்து செய்து, நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய முஸ்லிம் தலைவர்கள் என பிரகடனம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்எனக் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top