இலங்கை கடற்படையின் முதலாவது அதி தொழில்நுட்ப
ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் ”சயுரல”
இலங்கை கடற்படையின் முதலாவது அதி தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் ”சயுரல” என பெயரிடப்படுதல் முப்படைகளின் தளபதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில் நேற்று 2 ஆம் திகதி பிற்பகல் கொழும்பு துறைமுக கிழக்கு இறங்குதுறையில் இடம்பெற்றது.
இந்திய கோவா கப்பல் கட்டும் தளத்தில் இலங்கை கடற்படைக்காக இந்த கப்பல் கட்டப்பட்டது. இலங்கை கடற்படையின் தேவைக்கமைய கப்பல் கட்டும் நிறுவனத்தினால் கட்டப்பட்ட முதலாவது கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நவீன கப்பல் கடந்த மாதம் 28 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை அடைந்த போது கடற்படை பாரம்பரியத்துக்கமைய வரவேற்கப்பட்டது.
இந்த கப்பல் இலங்கை கடற்படையின் 67 ஆண்டு வரலாற்றில் முதற்தடவையாக புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட அதி தொழில்நுட்பத்தை கொண்ட கப்பலாகும்.
இந்த நவீன போர் கப்பல் மூலம் இலங்கையின் கடல் எல்லையில் ரோந்து, தேடுதல், மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரண செயற்பாடுகள் போன்றவற்றை மேற்கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளது. வெளிவாரி தீயணைப்பு நடவடிக்கைகளுக்கும் உதவ முடியும். இலகுரக ஹெலிகொப்ரர் இறங்குதளமும் கப்பலில் உள்ளது.
105.7 மீற்றர் நீளமான இந்த கப்பல் 13.6 மீற்றர் அகலமானது. அதன் வேகம் மணித்தியாலத்துக்கு 26 கடல் மைல்களாகும்.
துறைமுக வளாகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணவர்த்தன அவர்களால் வரவேற்கப்படார்.
விசேட கடற்படை அணிவகுப்பு ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஜனாதிபதி அவர்களால் புதிய கப்பலின் கட்டளை அதிகாரி கப்ரன் நிசாந்த அமரோஸாவிடம் கப்பலுக்கான அதிகார பத்திரம் வழங்கப்பட்டது.
சர்வமத ஆசீர்வாதத்துடன் கப்பலின் பெயர்ப்பலகை மற்றும் உத்தியோகபூர்வ சின்னம் ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
கப்பலில் கண்காணிப்பில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்கள் கப்பலின் செயற்பாடுகள், தயார்நிலை மற்றும் தயாரிப்பு தொடர்பில் கண்காணித்தார்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் இத்தகைய ஆணையிடும் நிகழ்வில் பங்கேற்றது இதுவே முதல்முறையாகும்.
அமைச்சர் மகிந்த சமரசிங்க, ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, இந்திய பாதுகாப்பு உற்பத்தி செயலாளர் ஏ.கே.குப்தா, இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்ர அபேகுணவர்த்தன, இந்திய தெற்கு கடற்படை பிரதம அதிகாரி வைஸ் அட்மிரல் ஏ.ஆர். கார்வ் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment