பிரதமர் பதவியை ரணிலுக்கு  வழங்கப்போவதில்லை
விடாப்பிடியிலிருக்கும் மைத்திரி!
சர்வகட்சி கூட்டத்தை சபாநாயகர் பகிஷ்கரிப்பு


முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான கையொப்பங்கள் அடங்கிய மனுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில், இந்த சந்தரப்பத்தில் குறித்த மனுவை கையளிக்க ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.  

கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு, மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார்.

இதனையடுத்து கொழும்பு அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது. இந்த குழப்பங்களுக்கு தீர்வு காண்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ள போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.

அத்துடன், புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக நாடாளுமன்றில் இரண்டு முறை நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், ஜனாதிபதி அதனை நிராகரித்துள்ளார்.

இந்நிலையிலேயே, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு முடிவு காணும் வகையில் ஜனாதிபதி இன்று மாலை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான கையொப்பங்கள் அடங்கிய மனுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.
இதேவேளை, தனியே சந்திக்க ரணில் விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். சர்வ கட்சி கூட்டத்தில் பொதுவாக பேச வருமாறு தெரிவித்துள்ளதுடன் பிரதமர் பதவியை ரணிலுக்கு  வழங்கப்போவதில்லை என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேநேரம் இன்று இடம்பெறவிருக்கும் சர்வகட்சி கூட்டத்தை சபாநாயகர் கரு ஜயசூரியாவும் பகிஷ்கரிக்க விருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. இது குறித்து தொலைபேசி ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சபாநாயகர் அறிவித்துள்ளார் என்றும் தெரிய வருகின்றது.
இன்றைய சர்வகட்சிமாநாட்டை மக்கள் விடுதலை முன்னணி பகிஷ்கரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top