மஹிந்த ராஜபக்ஸ 3–வது முறையாக

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடை இல்லை

உயர் நீதிமன்றம் கூறியுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா

பாராளுமன்றத்தில் அறிவிப்பு.


மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் போட்டியிடுவதில் எவ்விதத் தடையும் இல்லை என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. இதனை அடுத்து எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படுவது உறுதியாகியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபகஸ  2005 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றார். 2–வது முறையாக ஜனாதிபதியாக பொறுப்பேற்ற அவர் 4 ஆண்டுகளை முடித்துள்ளார். இலங்கையில் அடுத்து 2016–ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும்.
இலங்கையின் சட்டப்படி  முன்பு ஒருவர் 2 முறை தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விதி இருந்தது. ஆனால் 2010–ம் ஆண்டு 2 முறை மட்டுமே போட்டி என்ற வரையறையை நீக்கி சட்டதிருத்தம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் இது ராஜபக்ஸவுக்கு பொருந்தாது, அவருக்கு பின்னால் ஆட்சிக்கு வருபவர்களுக்கு தான் இது பொருந்தும் என்று பலரும் கருதினர்.
இந்த நிலையில் 3–வது முறையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்த ராஜபக்ஸ, இதற்காக உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர் நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு விசாரணை நடத்தியது. நேற்று முன்தினம் 9 நீதிபதிகளும் தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த நிலையில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலில் 3–வது முறையாக போட்டியிடுவதில் எந்த தவறும் இல்லை என்று உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளதாக பாராளுமன்றத்தில் நேற்று அறிவித்தார்.
அதேபோல மற்றொரு அமைச்சரான பஷீர் சேகுதாவூத்தும் இதனை ஒரு விழாவில் தெரிவித்தார். அவர் பேசும்போது, ‘‘சுப்ரீம் கோர்ட்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ 3–வது முறையும் போட்டியிடலாம் என்று அறிவித்துள்ள முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். அடுத்த 6 ஆண்டுகளுக்கான ஆட்சியிலே இடம்பெறக் கூடிய சமூக பொருளாதார வளர்ச்சியில் தங்களையும் சேர்த்து அபிவிருத்தி செய்கின்ற தலைவரை தேர்ந்தெடுக்கின்ற ஒரு வாய்ப்பை சிறுபான்மையினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளன. முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா பின்னணியில் இயங்கிவரும் எதிர்க்கட்சிகள், ‘‘ராஜபக்ஸ ஏற்கனவே 2 முறை தேர்வு பெற்ற பின்னரும் 3–வது முறையாக தேர்தலில் போட்டியிட இருப்பது சட்டவிரோதமானதுஎன்று கூறியுள்ளன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top