இலங்கை – இந்தியா மோதும் 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி
கொல்கத்தாவில் இன்று நடக்கிறது
                      

இலங்கை - இந்தியா மோதும் 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று 13 ஆம் திகதி (வியாழக் கிழமை)  நடக்கிறது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கட்டாக், ஆமதாபாத், ஐதராபாத்தில் நடந்த முதல் மூன்று ஆட்டங்களிலும் மிக எளிதாக வெற்றிகளை குவித்த இந்திய அணி தொடரை கைப்பற்றியதுடன்  3–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இலங்கை - இந்தியா இடையிலான 4–வது ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதுசம்பிரதாய மோதல்என்று வர்ணிக்கப்பட்டாலும், புகழ்பெற்ற ஈடன்கார்டனில் நடப்பது கூடுதல் சிறப்பாகும். ஈடன்கார்டன் மைதானம் தொடங்கப்பட்டு தற்போது 150–வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நடப்பதால் இந்த ஆட்டத்தை காண ரசிகர்கள் கூட்டம் படையெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்திய மண்ணில் இதுவரை நேரடி ஒரு நாள் போட்டித்தொடரை வென்றதில்லை என்ற சோகத்துக்கு இந்த முறையும் விடைகொடுக்க முடியாமல் ஏமாற்றத்திற்குள்ளான இலங்கை அணி ஆறுதல் வெற்றிக்காக களம் இறங்குகிறது. முதல் மூன்று ஆட்டங்களிலும் எவ்வித சவாலும் இன்றி சரண் அடைந்த இலங்கை அணி, தோல்விகளுக்கு பரிகாரம் தேடும் வகையில் பதிலடி கொடுக்க கடுமையாக முயற்சிக்கும்.
விக்கெட் கீப்பர் சங்கக்கார இந்த ஆட்டத்தில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக சன்டிமால் விக்கெட் கீப்பராக செயல்படுவார். சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் சேர்க்கப்பட்டிருப்பது இலங்கை அணிக்கு பலமாகும்.
66 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட ஈடன்கார்டன் மைதானத்தில் இந்திய அணி 18 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 10–ல் வெற்றியும், 7–ல் தோல்வியும் சந்தித்துள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இலங்கை அணி இங்கு 7 ஆட்டங்களில் பங்கேற்று 3–ல் வெற்றியும், 3–ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.

 இலங்கையும் இந்தியாவும் இங்கு நேருக்கு நேர் 4 ஆட்டங்களில் மோதி 2–ல் இந்தியாவும், ஒன்றில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை. 2009–ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தின் அதிகபட்சமாகும். மொத்தம் 12 வீரர்கள் சதங்களை பதிவு செய்திருக்கிறார்கள். ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–
இந்தியா: ரோகித் ஷர்மா, ரஹானே, அம்பத்தி ராயுடு, விராட் கோலி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, அஸ்வின், அக்ஷர் பட்டேல், உமேஷ் யாதவ், தவால் குல்கர்னி, வினய்குமார் அல்லது ஸ்டூவர்ட் பின்னி.
இலங்கை: குசல் பெரேரா, தில்ஷன், தினேஷ் சன்டிமால், மஹேல ஜெயவர்த்தன, திரிமன்னே, மெத்யூஸ் (கேப்டன்), திசரா பெரேரா, பிரசன்னா எரங்கா அல்லது காமகே.அல்லது பிரியஞ்சன், அஜந்தா மென்டிஸ், குலசேகர, கமகே



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top