5 மீனவர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்

அப்பீல் மனுவை வாபஸ் பெற முடியாது

இந்தியா தெரிவிப்பு


தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களுக்கும் பொது மன்னிப்பு அளிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தயாராக இருந்தபோதிலும், அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது.
ராமேசுவரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் மெர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 பேரும் கடந்த 2011–ம் ஆண்டு கடலுக்குள் மீன் பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 5 பேர் மீதும் போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
3 ஆண்டுகளாக நடந்த விசாரணையின் முடிவில், கடந்த மாதம் 30 ஆம்  திகதி அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், 5 மீனவர்களையும் இந்திய சிறைக்கு மாற்றுவது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், 5 பேரையும் இந்திய சிறைக்கு மாற்ற ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஸ  சம்மதம் தெரிவித்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழக மீனவர்களின் தூக்கு தண்டனையை எதிர்த்து இலங்கைஉயர் நீதிமன்றத்தில்  இந்தியா நேற்று முன்தினம் அப்பீல் செய்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இலங்கை தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பிரதி அமைச்சர் பிரபா கணேசன். நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து பேசினார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை சிறைகளில் உள்ள 24 மீனவர்கள், அவர்களது 79 படகுகளை விடுவிக்க வேண்டும் என்று நான் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினேன். அதற்கு அவர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க தயாராக இருப்பதாக கூறினார்.
அதே சமயத்தில், இந்திய தூதரகம் அப்பீல் வழக்கை நடத்தினால், அது முடிய 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிடும் என்றும் ஜனாதிபதி கூறினார். அது, பொது மன்னிப்பு வழங்கும் நடவடிக்கைக்கு தடையாக இருக்கும் என்பதால், அப்பீல் மனுவை வாபஸ் பெற்றால், முன்நிபந்தனையின்றி பொது மன்னிப்பு வழங்க தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
பொது மன்னிப்பு வழங்கும் பட்சத்தில், 5 மீனவர்களும் 3 நாட்களில் விடுதலை ஆகிவிடுவார்கள் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறினார். இவ்வாறு பிரதி அமைச்சர் பிரபா கணேசன் கூறியுள்ளார்.
பின்னர், கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை பிரதி அமைச்சர் பிரபா கணேசன் சந்தித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் முடிவை தெரிவித்தார். இதுகுறித்து தூதரக அதிகாரிகள், டில்லியில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பொது மன்னிப்பு வழங்கும் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஸவின் முடிவு பற்றி ராமேசுவரம் மீனவ சங்க தலைவர் தேவதாசிடமும் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில், பொது மன்னிப்பு யோசனையை இந்தியா நிராகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘5 மீனவர்களையும் உடனடியாக, எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்றுதான் நாங்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம். அதற்கான வழிமுறைகளில் தொடர்ந்து ஈடுபடுவோம்என்று தெரிவித்தன.

இதன்மூலம், அப்பீல் மனுவை வாபஸ் பெற முடியாது என்று இந்தியா சூசகமாக தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top