சர்ச்சைக்குரிய அரசுப் பொறுப்பிலிருந்து
பாகிஸ்தான் பிரதமரின் மகள் மர்யம் விலகல்

பாகிஸ்தானில், இளைஞர் கடனுதவித் திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸ், அந்த நியமனம் குறித்த சர்ச்சையால் அப்பதவியிலிருந்து விலகினார்.
முன்னதாக, ரூ.10,000 கோடி (பாகிஸ்தான் ரூபாய்) மதிப்பிலான கடனுதவித் திட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிப்பதற்குரிய அனுபவம் மரியம் நவாஸூக்கு இல்லை என லாகூர் உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை கூறியது.
மேலும், தகுதியுடைய நபரை வெளிப்படைத் தன்மையுடன் அந்தப் பதவியில் அமர்த்துமாறு அந்த நீதிமன்றம் அரசை வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில், தனது பதவியை புதன்கிழமை இராஜினாமா செய்த மரியம் நவாஸ், செய்தியாளர்களிடம் கூறுகையில்,
 ""பதவி விலகுமாறு யாரும் என்னை வற்புறுத்தவில்லை. இளைஞர் கடனுதவித் திட்டத்தின் தலைவர் பதவிக்குத் தகுதி வாய்ந்த நபரை நியமிப்பதற்கு வசதியாகவே பதவி விலகுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
மரியம் நவாஸின் நியமனத்துக்கு எதிராக இம்ரான் கானின் தெஹ்ரீக்--இன்ஸாஃப் கட்சியின் உள்ளூர் தலைவர் ஜுபைர் நியாஸி லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

நவாஸ் ஷெரீஃபின் மகள் என்பதற்காகவே மரியமுக்கு இளைஞர் கடனுதவித் திட்டத்தின் தலைவர் பதவி அளிக்கப்பட்டதாகவும், அவரது நியமனம் பல்வேறு சட்டப் பிரிவுகளுக்கும், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகளுக்கும் எதிரானது எனவும் அந்த மனுவில் நியாஸி குறிப்பிட்டிருந்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top