ஹிஸ்புல்லாஹ் எம்.பி
புதிய ஜனாதிபதி மைத்திரிக்கு முழு ஆதரவு!




மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு தனது முழு ஆதரவையும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
காத்தான்குடியிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (14) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஹிஸ்புல்லாஹ் எம்.பி 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பொறுப்பேற்றாலும் நாடாளுமன்றத்தில் குறைந்த ஆசனங்களையே கொண்டுள்ளார். 135 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வைத்துள்ள சூழ்நிலையில், குறைவான ஆசனங்களுடன் தான் அவர் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். ஜனநாயக முறைப்படி, நாடாளுமன்றத்தில் 113 ஆசனங்களைக் கொண்ட ஒருவர்தான்  இந்த நாட்டினுடைய பிரதமராக வரமுடியும். 
இருந்தாலும் குறைந்த ஆசனங்களைக் கொண்ட கட்சிக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது. என்னுடன் சேர்ந்து பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம். அவர் முன் வைத்துள்ள வேலைத்திட்டங்களில் சமூகம் சார்ந்த, மக்களுக்கு நன்மை பயக்ககூடிய வேலைத்திட்டங்களுக்கு எங்களது முழு ஆதவையும் வழங்க தீர்மானித்துள்ளோம். 

தேர்தல் முடிந்த பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் அரசாங்கம், 113 பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் பெறுவதற்காக ஆதரவை வழங்குமாறு, எனக்கும் செய்தி அனுப்பியிருந்தார். அவருடன் நெருக்கமானவர்கள் என்னை வந்து சந்தித்து ஆதரவு தருமாறு கேட்டனர். அந்த வேண்டுகோளை ஏற்றுள்ளேன். 

நாங்கள் இந்த அரசாங்கத்துக்கு தற்போதைய ஜனாதிபதிக்கும் எங்களுடைய பூரண ஆதரவை வழங்க திர்மானித்துள்ளோம். ஆனால், அரசாங்கத்துக்குள் சென்று பதவிகளை பெறுகின்ற எந்தவொரு நோக்கமும் எமக்கு கிடையாது. ஏனென்றால் இன்னும் 95 நாட்களுக்கு மாத்திரம்தான் இந்த அரசாங்கம் இருக்கப்போகின்றது. ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, நாடாளுமன்ற தேர்தல் வைக்கவேண்டியேற்படும். அப்போது, ஒரு காபந்து அரசாங்கம் இருக்கும். தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை ஒரு தற்காலிகமான அமைச்சரவை. நூறு நாட்களுக்கு மாத்திரம் தான் இந்த அமைச்சரவை இருக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  அன்று அமைச்சரவை பொறுப்பேற்ற வைபவத்தின் போது கூறினார். இவ்வாறான சூழ்நிலையொன்றிலேயே நாம் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதற்கு முன்வந்துள்ளளோம். 
தற்போதுள்ள அரசாங்கத்தால் கொண்டு வரவுள்ள வரவு- செலவுத்துக்கு நான் எனது முழுமையான ஆதரவை வழங்கவுள்ளேன். சமூகத்துக்;கு எதிராக திட்டம் வரும் போது, அவற்றை நான் கடுமையாக எதிர்ப்பேன். 

இந்நாட்டில் சமாதானத்தைக் கொண்டு வந்த ஒருவர் என்ற காரணத்துக்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு ஆதரவளித்தோம். புதிய ஜனாதிபதியின் ஆட்சியிலும் எங்களது வேலைத்திட்டங்கள் அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் தங்கு தடையின்றி இடம் பெறும் என்பதை தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றேன். எங்களுடைய கோரிக்கையை ஏற்று வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top