இந்தியா ஆசிய கிண்ணம் டி20: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது



ஆசிய கிண்ணம் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் வங்கதேச அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
ஆசிய கிண்ணம் டி20 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் இறுதி ஆட்டம்  நேற்று நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் டோனி பந்து வீச்சை தெரிவு செய்தார்.
மழை காரணமாக 5 ஓவர்கள் குறைக்கப்பட்டன. இதனையடுத்து வங்கதேசத்தின் துவக்க வீரர்களாக தமிம் இக்பால் மற்றும் சவும்யா சர்கர் களமிறங்கினர்.
15 ஓவர்கள் ஆட்டம் என்பதால் அடித்து ஆட வேண்டிய கட்டாயத்துக்கு வீரர்கள் தள்ளப்பட்டனர்.
இந்நிலையில் சர்கர் 14 ஓட்டங்களிலும் தமிம் 13 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தார்.
பின்னர் இணைந்த சபீர் ரஹ்மான் மற்றும் ஷாகிப் அல் ஹாசன் பொறுப்புடன் விளையாடியனர்.
அணியின் எண்ணிக்கை 64 ஓட்டங்களாக இருந்தபோது ஹாசன் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ரஹிம் மற்றும் மொர்டாசா சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அந்த அணியின் மொகமதுல்லா இறுதி கட்டத்தில் இந்திய வீரர்களின் பந்தை அடித்து ஆடினார்.
இதனால் வங்கதேசம் 15 ஓவர்களில் 120 ஓட்டங்கள் எடுத்தது. ரஹ்மான் 32 ஓட்டங்களுடனும் மொகமதுல்லா 33 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து 121 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் சர்மா 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
எனினும் தவான் மற்றும் விராத் கோஹ்லி இணை சிறப்பாக விளையாடியது. குறிப்பாக தவான் வங்கதேச வீரர்களின் பந்தை அடித்து துவம்சம் செய்தார்.
இந்நிலையில் 9 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 60 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தவான் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 99 ஓட்டங்களாக இருந்தது.
பின்னர் கோஹ்லியுடன் இணைந்த டோனி சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.
அதன்படி 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 122 ஓட்டங்கள் எடுத்து இந்தியா வெற்றிபெற்றது.
கோஹ்லி 5 பவுண்டரி உட்பட 41 ஓட்டங்களுடனும் டோனி 1 பவுண்டர் 2 சிக்ஸர் உட்பட 20 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் முதல் ஆசிய கிண்ணம் டி20 தொடரை  வென்ற அணி என்ற சாதனையை இந்தியா பெற்றுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top