டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி
இந்தியா- பாகிஸ்தான். போட்டி கொல்கத்தாவுக்கு மாற்றம்
இந்தியா பாகிஸ்தான் மோதும் இருபது ஓவர் உலகக் கிண்ணப் போட்டி தர்மசாலாவிலிருந்து கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மார்ச் 8-ம் திகதி முதல் ஏப்ரல் 3-ம் திகதி வரை இந்தியாவின் 8 நகரங்களில் நடைபெறுகின்றன. தகுதிச் சுற்று, பிரதான சுற்று என இரு நிலைகளில் போட்டிகள் நடைபெறுகிறது.
அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி, மார்ச் 19 அன்று தர்மசாலாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நடத்தமுடியாது. அதற்குத் தேவையான பாதுகாப்பை வழங்க இயலாது என ஹிமாசலப் பிரதேச மாநில முதல்வர் வீரபத்ர சிங், உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். மேலும், சில முன்னாள் ராணுவத்தினரும் தர்மசலாவில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிசிசிஐக்குக் கடும் நெருக்கடி எழுந்துள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தர்மசாலாவுக்கு வந்து பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர். பாதுகாப்பு குறித்து அவர்கள் அதிருப்தி தெரிவித்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தான் மோதும் போட்டி தர்மசாலாவுக்குப் பதில் கொல்கத்தாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி அதே நாள், அதே நேரம் தர்மசாலாவுக்குப் பதில் கொல்கத்தாவில் நடைபெறும் என, சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் முதன்மை செயல் அலுவலர் டேவ் ரிச்சட்ர்சன் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment