குப்பை பேசுகிறது!
*** டாக்டர் ஆரிப் ***
காகங்களின் கா கா சத்தம்
அடங்கிப் போயிருந்தது
பொழுதும் நன்றாகவே
விடிந்திருந்தது.
இன்று சனிக்கிழமை
அதனால் தானோ வீதியும்
வெறிச்சோடிப் போயிருந்தது
வெண்புறாக்களின் ஆரவாரமின்றி.
எங்கும் ஒரே நிசப்தம்
எனக்குள் ஒரே படபடப்பு
இயற்கையின் சீற்றத்துக்கு
அறிகுறியோவென்று.
ஏதும் விபரீதம் நடந்து
விடுமோவென்று
நிமிடங்களும் எனக்கு
மணித்தியாலமாய் போனது.
பயத்தில் நானும் கண்களை
இறுக்க மூடிக் கொண்டேன்.
திடீரென ஒரு ஆரவாரம்
என்பதை விட
ஒரு பதற்றமும் சனங்களின்
ஓலமும் காதைப் பிளந்தது.
மெல்ல எட்டிப் பார்த்தேன்
பெண்கள் அங்குமிங்குமாய்
தலைதெறிக்க ஓடுகிறார்கள்
சிறுவர்ளை விரட்டுகிறார்கள்
ஆண்களை உசாராக்குகிறார்கள்
நானும் கலக்கமடைந்தேன்
என்ன நடக்கப் போகிறதோ
எனக்கென்று.
தன்னை மீறிய சுமைகளை
தூக்கியவாறு முதியவர்கள்
செக்கன் தாமதித்தாலும்
இனி எப்போதோவென்று
இயலாதவர்களும் சக்தி
பெற்றவர்களாய் படும்
அவஸ்தையை நானும்
என்னவென்றுரைப்பேன்.
இவற்றைக் கண்டு தான்
நான் அழவில்லை
சில நாட்களுக்கு முன்பே
அழத் தொடங்கி விட்டேன்
இந்த நாளுக்காக ஏங்கியே
புளுத்துப் போனதால்.
திடீரென நானும் என்
சுயநினைவுக்கு வருகிறேன்
என்னையும் ஆரத்தழுவி
தூக்குகிறார்களே என்று
இல்லையென்றால் இன்னும்
எத்தனை நாட்கள் நான்
அழவேண்டி வருமோ.
இந்த நாள் போல மீண்டும்
ஒரு நாள் எப்போது வரும்
இது யாருக்குமே தெரியாத
புரியாத புதிராய்ப் போய்
விட்டதொரு தொடர்கதை.
இத்தனைக்கும் காரணம்
வந்தது மாநகர சபையின்
குப்பை ஏற்றும் வாகனங்கள்.
இதற்கு முன் வந்தது
எப்போதென்று ஞாபகமில்லை
எழுதி வைத்த நாளேடும்
கிழிக்கப்பட்டு பல நாட்கள்.
இந்த அவலத்துக்கு யார்
எப்படி வைப்பது முற்றுப்புள்ளி
இலட்சம் பேருக்கு ஒரு
பல ஊர்களுக்கும் ஒரு
சபை என்பதால் தானே
இந்த இழிநிலை என்பதை
உணர்ந்தும் உணராத ஜடங்களாய்
மக்கள் தலைவர்கள்.
வாக்குறுதிகள் வானளவிற்கு
உறுதிமொழிகள் உருக்கமாய்
மக்கள் நாமும் ஏமாளிகளாய்
தன்மானமிழந்து போய்விட்டோம்
அதனால் தானே அவர்களும்
அடிக்கடி உங்கள் முன் வந்து
காவியம் பேசுகிறார்கள்
வெட்கமில்லாதவர்களாய்.
0 comments:
Post a Comment